புதன், 19 ஜூன், 2013

திருமணத் தாம்பூலமாக விதை நெல்


திருமண த் தாம்பூலமாக விதை நெல் கொடுத்துவிவசாயி அசத்தல் திருவாரூர் : திருமண விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, தாம்பூலமாக, 2 கிலோ விதை நெல் வழங்கிய விவசாயியின் செயல், அனைவரையும் வியப்படைய வைத்தது.திருவாரூர் மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்தவர், காவிரி விவசாய பாதுகாப்புச் சங்க துணை செயலர் லட்சுமணன். இவர், தன் மகள் திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, பாரம்பரிய நெல் விதைகளான, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா மற்றும் கவுனி என, நெல் விதைகளை, "பேக்' செய்து வழங்கினார்.மணமக்கள் இருவரும், பொறியியல் பட்டதாரிகள். தாம்பூலத்திற்கு பதில், நெல் விதை வழங்கியதைக் கண்டு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் மகிழ்ந்தனர்.டெல்டா மாவட்ட விவசாயிகள், இயற்கை சீற்றங்களுக்கு ஏற்ப, விவசாயம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், அனைத்து சூழல்களையும் தாங்கி வளரக் கூடிய விதை நெல், 2 கிலோவை, திருமண தாம்பூலமாக, 867 பேருக்கு வழங்கியதை கண்டு, விழாவில் பங்கேற்ற விவசாயிகள், வியப்படைந்தனர்.

இதுகுறித்து, "நம் நெல்லைக் காப்போம்' மாநில ஒருங்கிணைப்பாளர், ஜெயராமன் கூறுகையில், "திருந்திய நெல் சாகுபடி முறையில், ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை நெல் போதுமானது; ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை. மறு சாகுபடிக்கும், இந்த விதை நெல்லை பயன்படுத்த முடியும்' என, கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக