திங்கள், 27 மே, 2013

சிறுதொழில் மூலம் வெற்றிக் கொடி நாட்டலாம்!

சிறுதொழில் மூலம் சாதிக்கலாம்!

சிறுதொழிலில் சாதனை செய்யும், பெண்களுக்கான சாதனையாளர் விருதை, காங்., துணைத் தலைவர் ராகுலிடமிருந்து பெற்ற, முனியம்மாள்:நான், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியைச் சேர்ந்தவள். வறுமையால், 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். 17 வயதிலேயேதிருமணம் நடந்தது. கணவன், குடிப் பழக்கத்தால் இறந்து விட, பெற்ற மூன்று குழந்தைகளை வளர்க்க, மீண்டும் கூலி வேலைக்குச் செல்லும் நிர்பந்தம்ஏற்பட்டது.கடந்த, 2000ம் ஆண்டு, "சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை'யை சேர்ந்தவர்கள், எங்கள் ஊருக்கு வந்து, மகளிர் சுய உதவிக்குழு பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால், 12 நபர்களை சேர்த்து, "ஸ்ரீ ரேணுகாம்பாள் மகளிர் குழு'வை ஆரம்பித்தேன். எங்கள் ஊரில், அதிக வாழை மரங்கள் இருந்ததால், வாழை நாரிலிருந்தும் கைவினை பொருட்கள் செய்யலாம் என, ஆர்வத்தை ஏற்படுத்தினர். பெங்களூருக்கு அழைத்துச் சென்று, வாழை நாரிலிருந்து கூடைகள் செய்வது முதல், அழகான பூக்கள் செய்வது வரை, கலைப் பொருட்களும் எப்படி செய்ய வேண்டும் என, கற்றுத் தந்தனர். ஊருக்குத் திரும்பியதும், அதிலிருந்து கைவினை பொருட்கள் செய்ய ஆரம்பித்தோம். நாங்கள் செய்த கைவினை பொருட்களை, அறக்கட்டளை யினரே விற்க உதவினர். ஒரு பொருளுக்கு, 200 முதல், 400 ரூபாய் வரை கிடைத்தது. நான் பெற்ற நன்மை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, சுற்றியுள்ள, 29 கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கும், இதை கற்றுத் தந்தேன். இத்தொழிலுக்கு, 3 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் கிடைத்தது. இதனால், சிறுதொழில் ஆரம்பித்த இரண்டே ஆண்டில், எங்கள் வாழ்க்கையே மாறியது. முன்னர், 30 ரூபாய் கூலி வாங்கியவர்கள், தற்போது கைவினை பொருட்கள் செய்து, முதலாளியாக மாறி உள்ளனர். சிறுதொழிலில் சாதனை செய்ததற்காக, அகில இந்திய தொழில் கூட்டமைப்பு, 2013ம் ஆண்டுக்கான, சாதனை யாளராக, என்னை தேர்ந் தெடுத்து. இதற்கான விருது மற்றும், 1.5 லட்சம் ரொக்கப் பரிசினை, ராகுலிடமிருந்து பெற்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக