வியாழன், 30 மே, 2013

மொழிப் பாடங்களுக்கு முன்னுரிமை!

மொழிப் பாடங்களுக்கு முன்னுரிமை!

மொழிப் பாடங்களை பயின்றால், பல துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதாகக் கூறும், ஞானசம்பந்தன்: சமீபத்தில், மாணவ மாணவியரிடம் கலந்துரையாடிய போது, மொழிப் பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் இல்லை என்பதை, என்னால் உணர முடிந்தது. மற்ற பாடப் பிரிவை போன்று, தாய் மொழியான தமிழையோ,  இந்தி யையோ, உலக மொழியான ஆங்கிலத்தையோ, முதன்மை ப்  பாடமாக படிப்பதால், பல்வேறு துறைகளில், "டிரான்ஸ்லேட்டராக' பணி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சுற்றுலாத்துறை, கல்வி என, பல துறைகள் உள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் என, மொழிப் பாடத்திற்கான ஆசிரியர்களின் தேவை அதிகம் என்பதால், இதில் ஏதேனும் ஒன்றில், பி.ஏ., இளங்கலையுடன், பி.எட்., எனும் இளநிலை கல்வியியல் படிப்பு முடித்ததும், ஆசிரியராக பணியாற்றலாம். இளங்கலை படித்திருந்தாலே, ஐ.ஏ.எஸ்., தேர்வு, டி.என். பி.எஸ்.சி.,யின் குரூப்1 முதல், குரூப்4 வரையிலான தேர்வுகள் எழுதலாம். இத்தகைய தேர்வுகளில், தாங்கள் ஏற்கனவே படித்த இலக்கியம், தமிழக வரலாறு மற்றும் பண்பாடு குறித்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதால், இத்தேர்வுகளில் வென்று, எளிதில் அரசு வேலைகளில் சேரலாம். முதுகலை மாணவர்கள், தாங்கள் படிக்கும் போதே, யு.ஜி.சி., நடத்தும், "நெட்' தேர்வெழுதி, மாதம், 20 ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற்று, எம்.பில்., மற்றும் பி.எச்.டி., படித்து, கல்லூரி பேராசிரியர் ஆகலாம். இதனால், கணினி பயின்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நிகரான, மாதச் சம்பளத்தை பெற முடியும். மற்ற துறைகளில் பணியாற்றும் போது ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு போன்றவை ஆசிரியர் பணியில் இல்லை. தற்போது, மொழி பாடங்களை படிப்பதோடு மட்டுமின்றி, கணினி கல்வியும் கற்றிருந்தால், ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இதற்கு, என்னிடம் தமிழ் பயின்ற மாணவர்களே சான்றுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக