ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கட்டணமானியில் ஆதாயம் பார்க்கலாம்


 கட்டணமானியில்   ஆதாயம் பார்க்கலாம்

ஆட்டோக்களில் மீட்டரைப் பொருத்தி, பொது மக்களிடம் சரியான கட்டணத்தை வாங்கும், புஷ்பவனம்: நான், திருச்சி நேஷனல் கல்லூரியில் விரிவுரையாளராகவும், ஆங்கிலத் துறை தலைவராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். தமிழகத்தில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பலர், பயணத்திற்கான கட்டணத்தை கேட்டவுடனே, பதற்றம் ஏற்படும் அளவிற்கு கட்டணம் உள்ளது. மீட்டர் பொருத்தியிருந்தாலும், நியாயமான கட்டணத்தை பெற மாட்டார்களா என, பலர் எண்ணினர்.திருச்சியில், 39 ஆண்டுகளுக்கு முன், "தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு'வை ஆரம்பித்தேன். இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, தொடர்ந்து போராடினோம். எங்கள் போராட்டத்தின் பயனாக திருச்சியில், 1976, 1982 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளின், சில மாதங்கள் மட்டுமே, மீட்டர் பொருத்தி இயக்கப்பட்டன.
தொடர்ந்து இயக்கப்படாததால், இப்பிரச்னைக்கு எப்படியாவது நிரந்தர தீர்வு ஏற்படுத்த, எங்கள் குழு மூலம், மீட்டர் ஆட்டோக்களை இயக்க முயற்சித்தேன். "மீட்டர் ஆட்டோ' திட்டத்தின் முதல் கட்டமாக, ஏழு ஆட்டோக்களை, வங்கி உதவியுடன் வாங்கி, 4,500 ரூபாய் செலவில், கிலோ மீட்டரை கணக்கிட்டு, அதற்கான ரூபாயை அச்சிடும் இயந்திரத்தை, ஆட்டோவில் பொருத்தினேன். உலக உபயோகிப்பாளர் தினமான, மார்ச் 15ல், இத்திட்டத்தை துவக்கினேன். இத்திட்டத்தின் கீழ் முதல், 2 கி.மீ.,க்கு, 20 ரூபாய், அதற்கு மேல் செல்லும், ஒவ்வொரு கி.மீ.,க்கு, 10 ரூபாய், இரவு நேரங்களில் மட்டும், கி.மீ.,க்கு கூடுதலாக, 2.50 பைசா என, கட்டணத்தை நிர்ணயித்தேன். இத்திட்டத்திற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழு ஆட்டோக்களுடன் துவக்கப்பட்ட இத்திட்டம், 2014ம் ஆண்டிற்குள், 100 ஆட்டோக்களாக உயர்த்த முயற்சிப்போம். மீட்டர் பொருத்தி ஆட்டோ ஓட்டினால், லாபம் கிடைக்காது என, சில ஓட்டுனர்கள் கருதுவது முற்றிலும் தவறு. தொடர்புக்கு:93451 01216.

மின் சிக்கனம் தேவை!

மின் சிக்கனத்தோடு, தானியங்கி முறையில் ஒளிரும் தெரு விளக்குகளை கண்டுபிடித்த, 6ம் வகுப்பு மாணவி ஹர்ஷதா: நான், காரைக்காலில் உள்ள ஆத்மாலயா பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறேன். மின்சாரத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தாலும், அரசு சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படும் தெரு விளக்குகள், தவறான மேலாண்மை மற்றும் மனித தவறுகளால், பகல் நேரத்திலும் ஒளிர்கின்றன.மின்சாரம் வீணடிக் கப்படுவதால், அரசு மற்றும் பொதுமக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்படுவதை தடுக்க முயற்சித்தேன்.
என் ஆர்வத்தை அறிந்த அப்பா, மின்சாரம் பற்றி பயிற்சி பெற, "ஹை-டெக் ரிசர்ச் பவுண்டேஷன்' ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்த்தார். பள்ளி விடுமுறை நாட்களில், மின்சாரம் தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன்.மின் சிக்கனத்திற்கான முயற்சியை பயிற்சியாளர்களிடம் தெரிவித்த போது, ஆர்வத்தை புரிந்து கொண்டு, என் முயற்சிக்கு உதவினர்.
அதிகமான தெரு விளக்குகளை, மனிதன் மூலம் மேலாண்மை செய்வதை விட, தானியங்கி முறையில் செயல்படுத்த எண்ணினேன்.மனிதனோ அல்லது வாகனங்கள் போன்ற, ஏதேனும் நகரும் பொருட்களோ சாலையை கடக்கும் போதுமட்டும், அதிக வெளிச்சத்துடன் ஒளிர, 100 வாட்ஸ் திறனுள்ள விளக்கும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில், குறைந்த வெளிச்சம் தரும், 15 வாட்ஸ் விளக்கு என, இரண்டு, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தினேன். இரவில் மட்டும் ஒளிர, ஒளியை உணரும், "எல்.டி.ஆர்., சென்சார்' மற்றும் நகரும் பொருட்கள் விளக்கு நோக்கி வருவதை உணர, "ஐ.ஆர்., சென்சார்' பொருத்தி, தானியங்கி முறையில் ஒளிரக் கூடிய விளக்கை கண்டுபிடித்தேன். தெரு விளக்கில் உள்ள, 400 வாட்ஸ் திறனில் சோடியம் விளக்கு தரும் ஒளியை, 100 வாட்ஸ் திறனுள்ள, எல்.இ.டி., விளக்கு தரும். இது பூமி வெப்பமடைவதையும் தடுக்கும்.ஒரு, எல்.இ.டி., மின் விளக்கே, 300 வாட்ஸ் மின்சாரத்தை சேமிக்கும் போது, அனைத்து மின் விளக்குகளும் தானியங்கி முறையில் இயங்கினால், சேமிக்கப்படும் மின்சாரத்தை விவசாயம் போன்ற அடிப்படை தேவைக்கு பயன்படுத்தலாம். தொடர்புக்கு: 98424 22397.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக