சனி, 27 ஏப்ரல், 2013

தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க வேண்டும்: கருணாநிதி

இலங்கையில் தமிழர் நிலங்களைப் பறிப்பதைத் தடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்


இலங்கை ராணுவத்தால் தமிழர் நிலங்கள் பறிக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பாமல் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கடந்து போகின்றன. தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6,381 ஏக்கர் நிலங்கள் இலங்கை ராணுவத்தினரால் சட்ட விரோதமாக  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது.இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை.தற்போது இலங்கை ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமான ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2,500 கோயில்களும், 400 கிறிஸ்துவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, சிங்கள வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டு விட்டன.
இதனைக் கண்டித்து தமிழர்கள் சார்பில் இலங்கையில் அறப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.எனவே, இந்திய அரசும், உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் உடனடியாகத் தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கான நிலங்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும்.தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ப.சிதம்பரத்துக்கு நன்றி: துபாய் அரசு 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்குத் திருப்பி அனுப்ப இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.என்னுடைய வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலித்ததாகவும், 19 தமிழர்களும் கொழும்புவுக்கு அனுப்பப்பட மாட்டனர் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தகவல் அனுப்பியுள்ளார்.ஈழத் தமிழர்களிடம் இருந்து இது தொடர்பாக எனக்கு (கருணாநிதி) தகவல் வந்துள்ளது.மத்திய அரசுக்கும், ப.சிதம்பரத்துக்கும் ஈழத்தமிழர்கள் சார்பில் நன்றி.
எனினும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன்னல்களைக் களைவதில் மத்திய அரசு இன்னும் மெத்தனமாகவே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக