வியாழன், 23 ஆகஸ்ட், 2012

மதுரை வேளாண் கல்லூரியை விட்டு க் கொடுக்க மாட்டோம்: மாணவர்கள், பணியாளர்கள் போர்க்கொடி

மதுரை விவசாய  க் கல்லூரியை விட்டு  க் கொடுக்க மாட்டோம்: மாணவர்கள், பணியாளர்கள் போர்க்கொடி
மதுரை: "காய்கறி வணிக வளாகம் அமைக்க, மதுரை விவசாயக் கல்லூரியை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பினர்.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், 2010-11ன் கீழ், 85 கோடி ரூபாயில், மாநில வேளாண் விற்பனை வாரியமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து, மதுரையில், மத்திய காய்கறி வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டன. நுகர்வோர், வியாபாரிகள் பயன்பெற, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், 26.74 ஏக்கரில், வணிக வளாகம் அமைக்க, மாநகராட்சி சம்மதித்து, வருவாய் பங்கீடு குறித்தும், தீர்மானம் நிறைவேற்றியது. முதற்கட்டமாக, 30 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திடீரென, அவனியாபுரத்தில் வளாகம் அமைக்க, 11.40 ஏக்கர் ஒதுக்கீடு செய்து, மாநகராட்சியில், திருந்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் வளாகம் அமைக்க இயலாது என, வாரியம் தெரிவித்ததால், மாட்டுத் தாவணியில் இடம் வழங்கி, மாநகராட்சி, மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், மாநகராட்சியிலிருந்து "முன் நுழைவு அனுமதி' உடனடியாக கிடைக்காததால், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 30 கோடி ரூபாய், அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரையில், மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. எனவே அவசர கதியாக, மதுரை விவசாயக் கல்லூரி இடத்தை தேர்வு செய்து, அதில், 26.74 ஏக்கர் இடத்தை ஒதுக்க, வேளாண் உற்பத்தி கமிஷனர் சந்தீப் சக்சேனா, வேளாண் பல்கலைக்கு உத்தரவிட்டார். இம்முயற்சிக்கு, கல்லூரியைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி முதல்வர் வைரவன் கூறியதாவது: கோவை வேளாண் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா மூலமாக, எனக்கு, இ-மெயிலில் தகவல் வந்தது. 28 ஏக்கர் நிலம் கொடுக்க வாய்ப்பில்லை. கல்லூரியின் பிரதான வாசலில் உள்ள, ஏழு ஏக்கர் நிலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தேன். ஆனால், கல்வி நிலையத்தில் விற்பனை மையம் அமைப்பது பொருந்தாது. இரண்டும் ஒரே இடத்தில் அமைவதும் கூடாது. மாணவர்கள் பெரும்பாலான நேரம் வயல்வெளிப் பள்ளியில் தான் இருக்கின்றனர். அமைதியான சூழ்நிலை தான் அவர்களுக்குத் தேவை. வணிக வளாகம் வந்தால் படிப்பிற்கு இடையூறு ஏற்படும். புதிய ஆராய்ச்சி எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலை பதிவாளர் சுப்பையா கூறுகையில், ""அரசு, ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இன்னும் எதையும் நாங்கள் முடிவு செய்ய வில்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பல்கலை மேலாண்மை குழு கூடி தான் முடிவு செய்யும்,'' என்றார். ""ஏற்கனவே இருக்கும் மாநகராட்சி இடத்தை கையகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு, கல்லூரியை வணிக வளாகமாக்குவது விவசாயிகளை ஏமாற்றுவதாகும். தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்,'' என, மாணவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக