செவ்வாய், 5 ஜூலை, 2011

B.E.graduates employment registration through online: பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

தலைப்பு , செய்தியைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. அவரவர் இணைய தளங்கள் மூலம் பதிவு செய்ய  இயலாது. சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே பதிவு செய்யும் வாய்ப்பு இப்பொழுது உள்ளது. அவ்வாறில்லாமல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலமாகப் பதிந்து கொள்ளலாம். இதனால் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. பிற வேலை வாய்ப்பு நிலையங்கள் இணையதளம் மூலமாகச் சென்னை அல்லது மதுரையில் பதிவினை மேற்கொள்ளும். எனவே, பொறியியல் பட்டதாரிகள், தத்தம் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையம் மூலம் இனிமேல் பதிவு செய்யலாம் என இருக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம்
வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

First Published : 05 Jul 2011 05:41:00 PM IST
சென்னை, ஜூலை 5- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பொறியியல் பட்டதாரிகள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு முதல்வர் ஆணையிட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு இப்பணி செய்து முடிக்கப்பட்டது. முதல்வரின் ஆணையின்படி, சுமார் 4.80 இலட்சம் மேல் நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு, பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்வதால், போக்குவரத்துச் செலவு, காலவிரயம், அலைச்சல் மற்றும் இன்னல்கள் தவிர்க்கப்பட்டன.தற்போது பி.இ., பி.டெக். பொறியியல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 61,200 பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றது தொடர்பிலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.பொறியியல் பதிவுகள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ளவர்களும், மதுரை, தொழில் மற்றும் செயல் வேiலாய்ப்பு அலுவலகத்தில் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றனர். பொறியியல் பட்டதாரிகள் சென்னை அல்லது மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டுமே பதிவு செய்யச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஏற்படும் கால விரயம், அலைச்சல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்ப்பதற்காக, பொறியியல் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே இணையதளம் மூலமாக பதிவு செய்வதால் சென்னை மற்றும் மதுரைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இணையதளம் மூலமாக பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, 10-வது அல்லது +2 மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம் எனவும், பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக