புதன், 6 ஜூலை, 2011

Irattaimalai Seenivaasan ceremony: சூலை 7: இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்: அரசு விழா

சென்னை, ஜூலை. 6-
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 9.3.2005 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் மற்றும் முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
 
இரட்டை மலை சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்டம், கோழியாலம் என்ற கிராமத்தில் 1859 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 7-ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் பருவத்தில் இருந்து தீண்டாமை கொடுமைக்கு ஆளானார். இவர் தன்னுடையச் சொந்த ஊரிலும், தஞ்சாவூரிலும் பள்ளிப் படிப்பை முடித்து கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.  
 
இனப் போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். தன் இன மக்கள் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க பாடுபடுவதை தன்னுடைய வாழ்நாள் இலட்சியம் எனத் தீர்மானித்துத் தொண்டாற்றினார்.
 
இவர் 1891-ஆம் ஆண்டு பறையர் மகாஜன சபை என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் இந்த அமைப்பு ஆதிதிராவிட மகாஜன சபை என்று அழைக்கப்பட்டது. இந்த சபை மூலம் ஆதிதிரா விட மக்கள் சமுதாய முன்னேற்றம் அடைய பாடுபட்டார்.
 
பின்னர் 1893-ஆம் ஆண்டு பறையர் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தாழ்த்தப்பட்ட இனமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆதி திராவிட இன முன்னேற்றத்திற்காக இப்பத்திரிகையில் தொடர்ந்து எழுச்சியூட்டக்கூடிய கட்டுரைகளை எழுதினார்.
 
1923-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 1-ஆம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6ஆம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன.
 
அண்ணல் காந்தியடிகளுக்கு மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன்தான். இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வழக்கறிஞராக இருந்தபோது நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
 
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1930- ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் தலைவர் அண்ணல் அம்பேத்கருடன் கலந்து கொண்டார். அண்ணல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட தீண்டத்தகாதோர் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
 
மேலும் 1939ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கருடன் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பைத் தொடங்கினார். தன்னுடைய வாழ்க்கையைத் ஆதி திராவிட மக்களுக்காக அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று தன்னுடைய 85-வது வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.  
 
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் தேதியை அரசு விழாவாக அறிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள்.
 
அதன்படி நாளை (7-ந் தேதி) காலை 9.00 மணிக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசன் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்துவார்கள்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக