குட்டிமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

குட்டிமணியைக் காட்டிக்கொடுத்தவர் யார்? (எம்.ஜி.ஆர். காட்டிய இரகசிய ஆதாரம் )

எம்.ஜி.ஆர். காட்டிய இரகசிய ஆதாரம்


ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள்  வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன்,  வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான்.
கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்’’என்று நெடுமாறன் ஆரம்பிக்க, கூட்டத்தினரின் பல்ஸை எகிற வைத்தார்.
‘‘1985-ம் ஆண்டு கருணாநிதியின்  பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, ‘என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறினார்.அதே நேரத்தில் தான் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். என் ஏற்பாட்டின்படி 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.அவரிடம் ‘எங்களுக்குப் பத்து கோடி ரூபாய் பணம் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என அதிர்ந்து கேட்டார். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.
‘‘5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது.நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது,‘ பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான்.அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்’ என்றார்.
இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,‘மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில் தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் கருணாநிதி நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.
அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா?’’ என்று கருணாநிதிக்கு கேள்வி எழுப்பினார் நெடுமாறன்.
மேலும்,‘‘1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.நியூயார்க் மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆர்.கூட அறிக்கை வெளியிட்டார்.
நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனை அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.’’ என்ற நெடுமாறன் அடுத்து வீசிய குற்றச்சாட்டுதான் ஆர்.டி.எக்ஸ்  ரகம்.
‘‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள்.அவரை சிங்களப் படையிடம் கருணாநிதி தான் ஒப்படைத்தார்.
குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரை சந்தித்தபோது அவர், ‘உங்க ளுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இதைப்பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.
அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ்,டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன.
சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார்.இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.
‘‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’’இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.
இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத்தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற  சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி மீது பழ.நெடுமாறன் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என அறிய எம்.ஜி.ஆர்.காலத்தில் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம்.‘‘குட்டிமணியை பிடித்துக் கொடுத்தது கருணாநிதி தான், அவர் நினைத்திருந்தால் குட்டிமணியைக் காப்பாற்றியிருக்கலாம்.இதுபற்றி சட்டசபையில் ஆதாரத்தோடு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியதும் உண்மைதான்’’ என்றார்.
தி.மு.க.சார்பில் விளக்கமறிய வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அவர் ‘‘வெளிக்கடைச் சிறையில்  இருந்து குட்டிமணி, ‘தனது கைதுக்கும், கலைஞருக்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என எழுதிய ஒரு கடிதத்தை அவரது வழக்கறிஞர் கரிகாலன் நெல்லையில் இருந்த வைகோவிற்கு அனுப்பினார்.அந்தக் கடிதத்தை கலைஞரிடம் நேரில் கொடுத்தார் வைகோ.
குட்டிமணி கைதுக்கு கலைஞர் காரணமில்லை என்று பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் வைகோ. குட்டிமணி தொடர்பாக எம்.ஜி.ஆர்.
சட்டசபையில் பேசியது தொடர்பாக எனக்கு எதுவும் நினைவில் இல்லை.
ஆனால் குட்டிமணி, ஜெகன் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை மனுவில் முதல் கையெழுத்துப் போட்டவர் கலைஞர்தான்.
அப்போது அறிவாலயம் கிடையாது. அரசினர் தோட்ட வளாகத்தில் இந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நானும்,தி.சு. கிள்ளிவளவனும் சென்ற கையெழுத்து வாங்கினோம்.’’ என்றார் விரிவாக.
படங்கள் : ம.செந்தில்நாதன்
- ஆ. விஜயானந்த்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
}

புதன், 8 ஜூலை, 2009






இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வந்தவரை, ஓர் ஐக்கிய அரசின் அமைப்பிற்குள் தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது ஒன்றே வழி என தமிழ் மக்கள் கருதி வந்தனர். ஆனால் 1970-க்குப் பின் நிலைமை வேகமாக மாறியது. அரசியல் தீர்வு பெறாத தமிழர் பிரச்னை, வளர்ந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றின் விளைவாக 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான வீரசாகச அரசியல் கலவரத்தின் செல்வாக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் இனப்படுகொலையும் தமிழர் மத்தியில் தீவிரவாதம் உருவாகக் காரணமாயின. இந்தச் சூழ்நிலையில்தான், தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராகக் தமிழ் இளைஞர் பேரவை உருவாகிறது. இவர்கள் வெகுஜன இயக்கத்தின் மூலம் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டனர். இளைஞர்கள் ஓரளவு அரசியல் தெளிவுடன், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கி இருந்தனர். தமிழ்த் தலைவர்களின் மிதவாதமும், இனவாத ஒடுக்குமுறையின் விளைவாக நிகழ்ந்த படுகொலைகளும் இவர்களை ஆவேசமூட்டி வேகமடையச் செய்தது. இவ்வுணர்வே விடுதலைப் புலிகளின் இயக்கம் 1971-இல் உருவாகக் காரணமாயின. இந்த நிலையில் 1974-இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் நிகழ்கின்றன. இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் சிவகுமாரன் தலைமையில் பழிக்குப்பழி வாங்கச் சபதம் செய்கின்றனர். மாநாட்டில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சந்திரசேகராவை எப்படியும் தீர்த்துக் கட்டுவது என்றும் இந்தப் படுகொலைகளுக்குப் பக்க பலமாக விளங்கிய தமிழின துரோகி யாழ் நகர மேயர் துரையப்பாவை கொல்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.போலீஸ் அதிகாரி மீது இரண்டு முறை தாக்குதல் நடக்கிறது. மேயர் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். போலீஸ் அதிகாரியைக் குறி வைத்துக் கொல்ல முயற்சி எடுக்கும் போது சிவகுமாரன் வளைத்துப் பிடிக்கப்படுகிறார். போலீஸ் கையில் சிக்காமல் இருக்க, சயனைட் குடித்துத் தியாக மரணம் அடைகிறார். இவரது வீரமரணம் நிகழ்ந்தது 1974-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ஆகும். சிவகுமாரன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவைத் தொடர்ந்து இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்தது. அதே காலத்தில் தொடர்ச்சியாக "தமிழ் புதிய புலிகள்'' (Tamil New Tigers) என்ற தீவிரவாத இயக்கத்தினரும் போராடி வந்தனர். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் விருப்பப்படி தமிழர் கூட்டணியின் உட்கிளையாக தமிழ் இளைஞர் பேரவை அமைகிறது. இவ்வாண்டின் நடுப் பகுதியில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புதிய புலிகளின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் என்ற செட்டி 1976-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் கைது செய்யப்படுகிறார். இதற்குப் பின் தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற புதிய இயக்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் தலைவராக வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பேற்கிறார். இதே நேரத்தில் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் தனி ஈழக் கோஷத்தை முன்வைத்துத் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976-இல் உருவாகிறது. இதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தக் கால கட்டத்தில் ஒரு சில தீவிரவாத அமைப்புகளும் தலைமறைவு இயக்கமாக சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றன. தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO) ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வியக்கத்தின் ஆரம்ப காலத் தலைவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து உருவானவர்களே. தமிழ் மாணவர் பேரவை உருவானதிலும் இத்தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். அப்போதிருந்த தரப்படுத்துதல் சட்டம் மற்றும் பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவர்கள் போராடி வந்தனர். தமிழ் மிதவாதத் தலைவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலம் இன ஒடுக்குமுறையை எதிர்க்க முடியாது என்றும் தனி ஈழத்தைக் கட்டமைக்க முடியாது என்றும் இவர்கள் கருதினர். இதன் ஆரம்பகால முன்னணித் தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஆவார்கள். போலீஸ் அதிகாரி சந்திரசேகரா புகழ் சிவகுமாரனுடன் சேர்ந்து இவர்களும் மாணவர் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது குட்டிமணியும், பிற தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மாநாட்டிற்கு முந்தைய இனப் படுகொலைக்கு எதிராகப் போராடியதன் விளைவுதான் இவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் காரணமாகும். குட்டிமணியுடன் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ என்கிற சபாரத்தினம். சாட்சியம் இல்லாததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார். யாழ் மேயர் துரையப்பா கொல்லப்பட்டதன் விளைவாகக் குற்ற செயல்களுக்காகத் தேடப்படுவர் பட்டியலை அரசு சுவரொட்டியாக ஒட்டியது. அதில் இவர்கள் பெயரும், இவர்களது தலைக்கு விலையாக 1 லட்சம் ரூபாயும், அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் 1971-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். 1977-இல் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த பல இனப் படுகொலைகளுக்குப் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இவர்கள் அமைப்பு ஈடுபட்டது. 1969-ஆம் ஆண்டிலிருந்தே தங்கதுரை "தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே வழி'' என்று முடிவு கட்டுகிறார். அப்போதிருந்தே அதற்கான நடைமுறைப் போர்த் தந்திரங்களையும், இயக்க விதிமுறைகளையும் உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டார். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு தங்கதுரை தனக்குக் கீழே ஒரு குழுவாக அமைத்துச் செயல்பட்டார். கட்டுப்பாடும், உறுதியும் நிறைந்த இயக்கமாகப் படிப்படியாக வளர்ந்து 1981-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதில் பிரபாகரன் இணைந்து கொள்கிறார். 1981 ஏப்ரல் 5-ஆம் தேதி தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 22-ஆம் தேதி நடந்த அரசு நடவடிக்கையில் இதன் மற்றொரு தலைவரான ஜெகனும், பிற இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதானபின் அமைப்பு ஸ்தம்பிக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரன் மீண்டும் வெளியேறித் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருங்கிணைக்கிறார். 1983-ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆயுதப் படைகளின் விரிவாக்கத்தை இவ்வமைப்பு மேற்கொள்கிறது. 1983 கடைசியில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் விரிவான பகுதி வெலிக்கடை சிறைப்படுகொலைகள் என்னும் பிரிவில் பிறகு கூறப்படும். நாளை: ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!