10 May 2025 அகரமுதல
(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி)
5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!
இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு தீவிரமாகியதும் அதற்குப் புது விளக்கங்கள் கொடுத்து மக்களின் வரவேற்பைப் பெறப் பார்க்கிறார்கள். இறக்குமதியான ஆரியச் சனாதனத்தைத் தமிழ்நாட்டில் தோன்றியதாகப் பொய்யுரை கூறுவதும் பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள் என விளக்குவதும் அறிவிற்கு ஏற்றதாக இல்லை என்பதைச் சொல்பவர்களே அறிவார்கள். சனாதன தருமம் என்றால் பிராமணர்களே மேலோங்கியவர்கள் என்றும் பிற வருணத்தார் அவர்களுக்கு மிகவும் கீழ்ப்பட்டவர்கள் என்று பொருள் என்றும் மனு முதலான ஆரிய நூல்கள் கூறுவதை அவர்கள் அறியாதவர்கள் அல்லர்.
- சனாதனத்தைத் தமிழர்கள் ஏற்றுள்ளனரா?
மும்பையைச் சேர்ந்த தொன்மக்கதை (புராண) எழுத்தாளர் தேவுதத்து பட்டநாயக்கு (Devdutt Pattanaik) (இந்தியன் எக்குசுபிரசு, 06.09.2023) சனாதனம் என்பதற்கான 4 வரையறைகளில் ஒன்றாகச் ‘சாதி அமைப்பில் நம்பிக்கை’ எனக் குறித்துள்ளார்.
“சாதி இரண்டொழிய வேறில்லை” (ஒளவையார், நல்வழி)
என்னும் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள் சாதி நம்பிக்கை கொண்ட சனாதனத்தை எப்படி ஏற்க முடியும்? - “சனாதனம் என்பது வாழ்வியல் முறை அதை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு அதை யாராலும் அழிக்க முடியாது” என்று கோமட சுவாமிகள் கூறியிருக்கிறாரே!
சனாதனம் என்பது யாருக்கான வாழ்வியல் முறை? மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி, மக்களுள் தம் குலத்தவரே உயர்ந்தவர், பிறர் இழிந்தவர் எனக் கூறிப் பரப்புவோருக்கான வாழ்வியல் முறைதான். உயர்வு தாழ்வற்று வாழும் நன் மக்களுக்கான வாழ்வியல் முறையல்ல. தீமை ஒன்றை ஒழிப்பதாகக் கூறுவது மக்கள் நலம் சார்ந்த பேச்சே தவிர முட்டாள்தனமான பேச்சே அல்ல. அதை யாராலும் அழிக்க முடியாது என்பதுதான் அறிவு சார்ந்த பேச்சு அல்ல. - சனாதனம் என்கிற பெயரே சமற்கிருதத்திலிருந்து வந்ததா?
ஆமாம். அது சமற்கிருதச் சொல் என்திலிருந்தே அது தமிழருக்கு உரியது அல்ல என்பது தெளிவாகிறது.
காண்க வினா விடை 52 - சனாதனத்தில் சாதி வேறுபாடு இல்லை என்கிறார்களே!
அப்படியா? பின்வரும் மனுவின் கட்டளைகளைப் பாருங்கள்.
பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாத வனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு, அத்தியாயம் 8. சுலோகம் 20.)
ஒழுக்கமற்ற பிராமணன் நீதி வழங்கலாம். ஒழுக்கமானவாயினும் சூத்திரனுக்கு அந்த உரிமை இல்லை என்கிறதே மனு. இதற்கு என்ன பொருளாம்?
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.28-30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக