(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!- தொடர்ச்சி)
தேரான் தெளிவு
”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்” திருக்குறள் 510
நடைபெறும் 2024 பொதுத் தேர்தல் குறித்துத் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களிடையே பெருங்கவலையும் அக்கறையும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் ஊடகங்கள் இவ்வகையில் செய்தியும் கருத்தும் வெளியிட்டு வருகின்றன. சில காட்சி ஊடகங்ளுக்கு நான் செவ்வி கொடுத்துள்ளேன். சில இணைய இதழ்களுக்குக் கட்டுரையும் எழுதிக் கொடுத்துள்ளேன். உலகத் தமிழர்கள் இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கின்றார்கள்? அவர்களுக்குரிய முதன்மைக் கவலை என்ன? அவர்கள் விரும்பும் முடிவு என்ன? இவை குறித்தெல்லாம் ஆழ்ந்தகன்று உரையாட வேண்டிய தேவை இருப்பதை உணர்கிறேன். ஒரு தொடக்கமாக சாளரம் இணைய இதழுக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரையை ஈண்டு பகிர்கிறேன் –
000
இந்தியத் தேர்தல் – 2024:
நரேந்திர மோதியின் ஆட்சி தொடருமா? தொடர்ந்தால்…?
இஃது உலகெங்கும் தேர்தல் ஆண்டு எனலாம். இந்த ஆண்டு மார்ச்சு மாதம் உருசிய அதிபருக்கான தேர்தல் முடிந்தது. நவம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இவை தவிர பிரித்தானியாவிலும் இந்த ஆண்டு நடுவில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கித்தான், வங்காள தேசம், இந்தொனேசியா, மெக்குசிகோ ஆகிய நாடுகளிலும் புதிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மொத்தத்தில் உலக வாக்காள மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியினர் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த வரிசையில் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் கவலையுடனும் எதிர்நோக்கப்படும் ஒரு தேர்தல் உண்டு என்றால் அஃது இந்தியாவில் ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்தல்தான்! விடுமை பெற்ற இந்தியாவில் 1952 தொடங்கி எத்தனையோ தேர்தல்கள் நடந்திருப்பினும் 1977 பொதுத் தேர்தல் முகன்மையானதாகக் கருதப்பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான நெருக்கடிநிலை வல்லாட்சிக்கு முடிவு கட்டிக் குடியாட்சியத்துக்குப் புத்துயிரளிக்கும் தேர்தலாக அஃது அமைந்தது. அதை விடவும் முகன்மையானதாக 2024 பொதுத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்தியக் குடியாட்சியத்தில் சாதி-மதம்-பணம் செலுத்தும் செல்வாக்கு சொல்லித் தெரிய வேண்டிய செய்தியே இல்லை. ஆனால் வடிவ அளவிலேனும் உலகிலேயே ஆகப் பெரும் குடியாட்சியமாக இந்தியா மதிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்பானது குடியாட்சியம் (சனநாயகம்), உலகியம் (சமயச்சார்பின்மை), கூட்டாட்சியம் (சமசுட்டி) ஆகியவற்றை அடிக்கற்களாகக் கொண்டதென நீதிமன்றங்கள் விளக்கம் தருகின்றன. இந்த அடிக்கற்கள் – இந்திய மாளிகையைத் தாங்கி நிற்கும் இந்தத் தூண்கள் – ஏற்கெனவே ஆட்டங்கண்டுள்ள இந்த அடிப்படைகள் – இப்போதைய தேர்தலுக்குப் பின் என்னாகும்? இந்தியா தொடர்ந்து சமயச் சார்பற்ற சனநாயகமாக நீடிக்குமா? என்ற கவலை தலைதூக்கியுள்ளது. நாசிகள் ஆண்ட செருமனியைப் போல, சியோனியர்கள் ஆளும் இசுரேலைப் போல் இந்தியா இந்துத்துவப் பார்ப்பனியப் பாசிச வல்லாட்சியாக வீழ்ந்து விடுமோ? சமயச் சார்பின்மையையும் சமூக நீதியையும் நேசிக்கும் தமிழ் மக்கள், அமைதியை விரும்பும் இந்திய மக்கள் இருளடர்ந்த எதிர்காலம் நெருங்கி விட்டதோ? என்று அச்சப்படுகின்றார்கள்.
நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய சனதா கட்சியும் அதன் தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியும் (NDA) மூன்றாவது முறை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதை இந்திய நாடெங்கும் முற்போக்காளர்கள் தமது உடனடிக் கடமையாக மதிக்கின்றனர். இது கடினமான பணிதான் என்றாலும் முடியாத ஒன்றன்று.
கடைசியாகக் கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாசக தோற்கடிக்கப்பட்டது. 2014இல் மோதி தலைமையிலான இந்திய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் செய்துள்ள கேடுகளை வாக்காளர்கள் உணரும்படி செய்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று, அறிவூட்டி உணர்வூட்டி மக்களை அணிதிரட்ட முடிந்தால் மோதியை முறியடிக்க முடியும்.
பாரதிய சனதா கட்சி தலைமையிலான பத்தாண்டு ஆட்சி இந்தியக் கட்டமைப்புக்குப் பலவாறு செய்துள்ள மீளாக் கேடுகள் பற்பல. இந்தியா ஒரு தேசமன்று, அது பல தேசங்களைக் கொண்ட துணைக்கண்டமாகும் என்பதே சமூக அறிவியல் பார்வை. அது பிரித்தானியரின் தகரி(பீரங்கி)களாலும் சட்டங்களாலும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பு என்பதே மெய்.
ஆனால் குடியேற்ற ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியத் தேசியம் பிறந்தது. அஃது இந்திய மக்களைச் சாதி மத வட்டார வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபடுத்தியது. அது தீண்டாமையை எதிர்த்தது, சமயங்கடந்த ஒற்றுமையை வலியுறுத்தியது. இந்தியத் தேசியத்துக்கு மாற்றாகப் பார்ப்பனிய வல்லாண்மையை வலியுறுத்தியும், இந்துக்களின் முதன்மையை நிலைநிறுத்தியும் இந்துத் தேசியம் பிறந்தது. அஃது இந்து இராட்டிரம், இந்துத் தேசியம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்தக் கொள்கைகளுக்ககத்தான் 1925ஆம் ஆண்டு ஆர்எசுஎசு (இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கு) அமைக்கப்பட்டது.
ஆர்எசுஎசு அமைப்பின் அரசியல் பிரிவுதான் முன்பு சனசங்கம், இப்போது பாரதிய சனதா கட்சி. ஆர்எசுஎசு குறிக்கோள் இந்தியாவை இந்து இராட்டிரம் ஆக்குவதாகும். முசுலிம்களையும் கிறித்துவர்களையும் பொதுவுடைமையர்(கம்யூனிசுட்டு)களையும் இந்து இராட்டிரத்தின் பகைவர்களாக அது கருதுகிறது. இந்து சமயப் பாதுகாப்பு என்ற பெயரில் தீண்டாமையும் சாதியமும் மலிந்த இந்துச் சமூகத்தைக் கட்டிக் காக்கவே அது விரும்புகிறது. அதே போது புதுத் தாராளிய முதலாளியச் சுரண்டலைப் பாதுகாத்து அம்பானி – அதானி போன்ற பெருங்குழுமப் பெருமுதலாளர்களை வளர்த்து விடவும் செய்கிறது.
மோதியின் பாசக அரசு இந்தியாவின் பன்மைத் திறத்தை மறுத்து ஒரே தேசம் ஒரே மதம் ஒரே அங்காடி ஒரே ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே தலைவர் என்ற திசையில் விரைந்து கொண்டிருக்கிறது.
நரேந்திர மோதி ஆட்சியின் கொடிய வன்கொடுமைகளுக்குப் பெரிதும் ஆளாகியிருப்பவர்கள் முசுலிம்கள். மோதி குசராத்து மாநில முதலமைச்சராக இருந்த போது 2002 ஃபிப்பிரவரி கடைசியில் கோத்துரா தொடரிப்(இரயில்) பெட்டி எரிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து முசுலிம்கள் மீதான இனவழிப்புத் தாக்குதல் நடந்து, ஈராயிரத்துக்கு மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பிபிசி வெளியிட்ட ’மோதி வினா’ ஆவணப் படம் இந்த இனவழிப்புக்கான சான்றுகளைக் காட்சிப்படுத்தியது.
2014ஆம் ஆண்டு மோதி தலைமையமைச்சர் ஆன பின் இந்தியாவையே குசராத்து ஆக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பசுப் பாதுகாப்பின் பேரில் தலித்துகளும் இசுலாமியர்களும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். முசுலிம்கள் செறிந்து வாழும் தொகுதிகள் தலித்துகளுக்கான தனித் தொகுதிகளாக்கப்பட்டு முசுலிம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாமல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலிலிருந்து முசுலிம் பெயர்கள் நீக்கப்பட்டன. கருநாடகத்தில் மூடாடை (Hijab) தடையின் ஊடாக முசுலிம் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. முசுலிம் மாணவர்களுக்கான கல்வியுதவித் தொகைகள் நிறுத்தப்பட்டன. பசுப் பாதுகாப்பின் பேரால் இசுலாமியர்களைப் படுகொலை செய்தாலும் கேட்பாரில்லை. மசூதிகளுக்குக் குண்டு வைத்த இந்துச் சதிகாரர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.
பாபர் மசூதியைப் பட்டப்பகலில் இடித்து அந்த இடிபாடுகளின் மீதே இராமர் கோயிலைக் கட்டி நாட்டின் தலமையமைச்சரே திருக்குடமுழுக்குச் செய்து மகிழ்ந்தது போதாதென்று, காசியிலும் மதுராவிலும் இசுலாமிய வழிபாட்டுத்தலங்களை இடித்து இந்துக் கோயில் கட்ட முனைந்துள்ளார்கள். பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் இயற்றியுள்ளனர்.
இந்தியாவிலேயே முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமான சம்மு காசுமீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் உறுப்பு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு, மாநிலத் தகுநிலை நீக்கப்பட்டுள்ளது. முசுலிம்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ள ஒரே ஒன்றிய ஆட்சிப் புலமாகிய இலட்சத் தீவுகளில் மாட்டிறைச்சியை இடம் விட்டு இடம் கொண்டுசெல்லத் தடை விதித்துள்ளனர்; பள்ளிக் குழந்தைகளுக்கு இறைச்சி உணவு வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. முசுலிம்களின் குடியுரிமைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதே குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA).
முசுலிம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் தடை செய்யபப்பட்டு செயற்பாட்டாளர்கள் பலரும் ’உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களில் சிறையிலடைக்கபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் போராடும் முசுலிம்களின் வீடுகள் இடிப்புந்து (bulldozer)களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
மாநில உரிமைகள் பறிப்பு, பண மதிப்பு நீக்கம், சரக்கு சேவை வரி, சூழலியல் மதிப்பாய்வுச் சட்டத் திருத்தம், தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிரான புதிய சட்டங்கள், பெருங்குழுமங்களுக்கு வரிச் சலுகை, கறுப்புப் பணப் பெருக்கம் என்று பல நூறு வழிகளில் மோதியின் பாசக அரசு மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.
மோதி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் எஞ்சியுள்ள சிறு உரிமைகளும் பறிபோகும் ஆபத்துள்ளது. நாசிக்கு(Nazi)களின் செருமனி போல், சியோனிய இசுரேல் போல, சிங்கள பௌத்த சிறிலங்கா போல, இந்தியாவும் இந்துத்துவ பாரதமாக மாறிப் போகலாம். இதைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பாக 2024 தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 447
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக