(தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! – தொடர்ச்சி)

செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்!

அந்தத் தாடிக்காரர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்த போது நம்புவது கடினமாய் இருந்தது. யார்? தோழர் (இ)லிங்கனா? சிலநாள் முன்பு செய்தியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் பார்த்தாற்போல் உள்ளதே? என்ன நடந்தது? என்ன? உயர்நீதிமன்ற வளாகத்திலேயே மாரடைப்பால் சாவு நேரிட்டதா?

சென்னை நகரத்தில் நான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவரைப் பார்த்துள்ளேன். மிகச் சிறிய அரங்கக் கூட்டமானாலும் தோழர் (இ)லிங்கன் பாசுடின் இருப்பார். ஊடகச் சந்திப்புகளில் எல்லாம் எதிரில் உட்காந்திருப்பார். மேடையிலிருந்து இறங்கி வரும் போது விலகி நின்று மெல்லிய சிரிப்போடு நம்மை வரவேற்பார். அந்தத் தாடிக்குள்ளிருந்து வெளிப்படும் அமைதியான புன்னகைதான் அவருக்குரிய அடையாளம். யார் இவர்? ஈழத் தமிழரா? ஏதிலியரா? மீனவரா? தோற்றத்தை வைத்துச் செய்கிற ஊகம் இந்த வகைகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். இவர் பெயர் (இ)லிங்கன் பாசுடின் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவே நெடுங்காலமாயிற்று.

மீனவர்களைப் பழங்குடி மக்களாக அறிவிக்க வேண்டும் என்பதற்காகச் சற்றொப்ப ஈராண்டு முன்பு மதுரை வழக்கறிஞர் இரசினி முயற்சியில் இணையவழிக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் சிறப்புரை ஆற்ற என்னை அழைத்திருந்தார்கள். நான் அப்போது பொள்ளாச்சியில் இருந்தேன். மின்வெட்டு, இணையச் சிக்கல் என்று எத்தனயோ இடையூறுகளுக்கிடையே நடந்த அந்நிகழ்வில் இலிங்கன் முகன்மைப் பங்கு வகித்தார். அவரே மீனவர் அல்லது மீனவர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவர் என்று நினைத்தேன்.

பிறகுதான் இலிங்கனைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு தோழர், ஒரு ‘பொதுவுடைமையாளர்’, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். கன்னியாகுமரிக்காரர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர். திருவல்லிக்கேணி தங்கும் விடுதி ஒன்றில் கால் நூற்றாண்டுக் காலமாகத் தனியே வசித்துக் கொண்டிருப்பவர். அவரைப் போன்றவர்களுக்கு எளிமைதான் இயல்பானது, தனியாக அதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

ஒரு துறவியைப் போல் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் இலிங்கன்!” என்று தோழர் செந்தில் சொல்வதே உண்மை. அவரைப் பற்றி என்னை விடவும் கூடுதலாகத் தெரிந்து வைத்துள்ள செந்திலின் செய்தியையே தாழியிலும் பகிர்ந்தால் போதும் என நினைக்கிறேன். –

சென்னை நகரத்தில் நடக்கும் எல்லா முற்போக்கு அரசியல் நிகழ்வுகளிலும் பங்குபெறக் கூடியவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் காலங்கழித்த வழக்கறிஞர். கடந்த கால வரலாற்றின் மூலை முடுக்குகளை, இடுக்கில் மாட்டிக் கொண்டுள்ள விசயங்களை தன் பேச்சில் சாதாரணமாகச் சொல்லிச் செல்பவர். போலியாக உலவும் மதிப்பீடுகளைப் போட்டுடைப்பவர். பச்சையான சமூக யதார்த்தங்களை இன்னும் பச்சையாகச் சொல்லக் கூடியவர். சுருங்கச் சொன்னால் அலங்காரங்களாகக் கண்ணுக்குத் தெரிபவற்றுக்குப் பின்னால் இருக்கும் இருட்டுப் பக்கங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்.

அவர் ஒரு பொதுவுடைமையாளர். இந்நாட்டில் புரட்சிகர இடதுசாரி அரசியல் வளர வேண்டும் என்று விரும்பியவர். கட்சி கடந்து தோழமைப் பாராட்டியவர். அதை தனது தனித்துவமான பண்பாகப் பேணிக் கொண்டவர் என்றுகூட சொல்லலாம். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் வழிநடத்தப்படும் கலை இலக்கியப் பெருமன்றத்திலும் வழக்கறிஞர் பிரிவிலும் செயல்பட்டவர்.

நீண்ட தாடியுடன் அதிகம் பேசாதவராய்க் காட்சியளிக்கும் அவர் ஒரு துறவியைப் போல் அந்த விடுதியில் தன் வாழ்நாளைக் கழித்தவர். புத்தகக் குவியல்களுக்கு இடையே அவர் அமர்ந்திருப்பார். வசதியான குடும்பப் பின்புலம் கொண்டிருந்தாலும் அவர் எளிமையான வாழ்வாக அதை மாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிலும் முக்குவர் பிரிவைச் சேர்ந்தவர். மீனவர்களின் உரிமைகள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக மீனவர்களைக் கடல்சார் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு குறுநூலை எழுதியிருந்தார். ஓக்கிப் புயல் பற்றியும் ஒரு நூலை எழுதியிருந்தார். போகுமிடமெல்லாம் அவர் தன்னுடைய நூலை எடுத்துச் சென்று கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது நூலையும் அவரது உரைகளையும் பிறர் படித்தும் கேட்டும் தமது விமர்சனங்களைச் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரைப் போலவே அவருக்கும் இருந்தது. எவ்வளவு தூரம் அவரது இந்த எதிர்ப்பார்ப்பு அவரைச் சுற்றி இருந்தவர்களால்(அதாவது நம்மால்) நிறைவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

சிங்காரவேலருக்குத் தமிழ் இடதுசாரி உலகில் உரிய இடம் வழங்கப்படவில்லை என்பது அவரது கருத்து. அதை மாற்றியமைப்பதற்குப் பெரிதும் பாடாற்றினார் என்பது எல்லோரும் அறிந்ததே. சிங்காரவேலரின் சிந்தனைகள் இன்னும் அதிகமாகத் தமிழ் இடதுசாரி உலகில் புழக்கத்திற்கு வருமாயின் அதற்காக உழைத்தவர்களில் தோழர் இலிங்கனுக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு என்று மதிப்பிடலாம்.

மீனவர்களின் உரிமைச் சிக்கலோ சிங்காரவேலரோ இனி நம் நினைவுக்கு வரும்போதெல்லாம் சத்தமின்றி நம் அருகில் அமர்ந்தபடி இலிங்கன் புன்னகைத்துக் கொண்டிருக்கப் போகிறார்!.

அவர் ’பிரபலம்’ என்று சொல்லத்தக்க மதிப்பீடுகளைத் தன்னிடம் கொண்டுள்ள பிரபலம் அல்ல, அவர் ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் அல்லர். ஆயினும் அவரது போராட்டப் பங்களிப்புகளுக்கு அப்பால் வெவ்வேறு வகை மனிதர்களும் அவருடன் பழகிய நேரத்தைப் பற்றி எழுதுவதற்குச் சில கதைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

அவரது வாழ்வெல்லைகளையும் உறவெல்லைகளையும் நீதிமன்றத்திற்குள்ளும் திருவல்லிக்கேணி விடுதிக்குள்ளும் அவர் ஏன் சுருக்கிக் கொண்டார்? அவருக்கு ஒருவிதக் கூச்சமும் தயக்கமும் மனத்தடையும் இருந்திருக்குமா? அப்படியெனில், அவர் பொதுவாழ்வுக்கு வந்த பிறகு அவருடைய இந்தச் சிக்கலைக் களைவதற்கு உதவக் கூடிய ஒருவரை அவர் சந்தித்தாரா? அப்படியான ஒருவர் அவருக்கு உதவ முன்வந்தாரா? முயன்றாரா? எந்த அளவுக்கு வெற்றி கண்டார்? என்பது பற்றியெல்லாம் விசயம் அறிந்தோர்தான் சொல்ல வேண்டும்.

எல்லாரையும் போல் தமக்கென்று மனைவி,பிள்ளைகள் இல்லாதவிடத்து தமக்கான நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் அவர் மிகுந்த முனைப்புக் காட்டியிருக்கக் கூடும். அதில் தாம் வெற்றிப் பெற்றதாக அவர் உணர்ந்தாரா? என்று தெரியவில்லை. அவர் மறைவுக்குப்பின் அவருடன் பழகியவர்கள் வெளிப்படுத்திய துயரத்தைக் கொண்டு அவர் வெற்றிப் பெற்று விட்டார் என்று மதிப்பிட முடியுமா? தெரியவில்லை.

எது எப்படியோ காலம் தன் கணக்கை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மனச்சான்று போல் எல்லாவற்றிலும் உடன் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் வெளியே நின்றபடி எல்லாவற்றையும் எடைபோட்டுக் கொண்டிருந்த அந்த தனித்துவமான, தத்துவ ஞானத் தோற்றம் இனி நமது நிகழ்வுகளில் தெரியப் போவதில்லை. ஆனால், நம் நினைவுகளில் சிறுது காலத்திற்கேனும் அவர் உருவம் நிழலாடிக் கொண்டிருக்கும்.

எத்தனையோ வேறுபாடுகளும் முரண்களும் பிளவுகளும் நமக்கிடையே இருந்தாலும் நம்முடைய நிகழ்வுகள் அத்தனையிலும் இலிங்கன் இருப்பார் என்று நாம் எல்லாரும் சொல்லிக் கொள்ளும் வகையிலும் எண்ணிப் பார்க்கும் வகையிலும் அவருக்கு உரிமைக் கொண்டாடி நாமெல்லோரும் இன்று ஓரிடத்தில் குழுமியதை அவரது வெற்றியாகவும் நாம் கருதிப் பார்க்கலாம்.

”இத்தனை நாள் உங்கள் எல்லோருடைய நிகழ்வுகளிலும் பாகுபாடின்றி நான் கலந்து கொண்டிருந்தேன். இன்றைய நிகழ்வு என்னுடையது. நீங்கள் எல்லாரும் பாகுபாடு மறந்து கலந்து கொண்டாக வேண்டும் என்று கட்டளையிட்டபடி காலை நீட்டிப் படுத்துக் கிடந்தார் அவர்.

வரலாற்றுப் பக்கங்களில் யாரை இடம்பெறச் செய்வது என்பதை வரலாறே முடிவுசெய்கின்றது. வரலாற்றில் தனக்கு என்ன இடம் என்பது பற்றியெல்லாம் அதிகம் அக்கறைக் கொள்ளாத மனிதனாக , அதிகாரமும் செல்வாக்கும் அற்ற சாதாரண மனிதர்களுடன் நேரத்தையும் அன்பையும் செலவு செய்யும் துணிச்சல் இலிங்கனுக்கு இருந்தது.

பூமி தன் சுழற்சி வேகத்தில் மனித வாழ்வை மிரட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் சிலர் மட்டும் நெஞ்சை நிமிர்த்தியபடி அதை எதிர்கொண்டு ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகி நிற்க துணிகின்றனர். அப்படி ஓட்டப் பந்தயத்தில் இருந்து விலகி நின்ற ஒருவராக இலிங்கனை மதிப்பிடலமா?

இலிங்கன் ஏன் மணம் செய்து கொள்ளவில்லை. அவர் மண வாழ்க்கையைத் தவறவிடாமல் இருந்திருக்கலாமா? அதற்குரிய பருவத்தில் அவருக்கு உதவ யாரும் இல்லையா? இல்லை அவர் இதை விரும்பித் தெரிவு செய்து கொண்டாரா? யாராவது அப்படி விரும்பி மண வாழ்வை மறுதலிப்பார்களா? அதை மறுதலித்துவிட்டு அவர் செய்து முடிப்பதற்கான பெரிய இலட்சியங்கள் எதையேனும் வரித்துக் கொண்டாரா? பெரிய இலட்சியங்களை வரித்துக் கொள்வதற்கு மண வாழ்வு தடையா? இனி இதற்கு இலிங்கன் விடை சொல்லப் போவதில்லை. வேறு யாரும் பதில் தந்தாலும் அதனால் இலிங்கனுக்கு எவ்விதப் பயனுமில்லை. ஆனால், இதற்கான பதில்களில் ஏதேனும் படிப்பினை கிடைக்காதா? அது இனிவருங்காலத்திற்கு பயன்பட்டுவிடாதா? என்பதே இந்தக் கேள்விகளை எழுப்புவதன் நோக்கம்.

இலிங்கன் தன்பால் காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் சான்று காட்டிச் சில சம்பவங்களைச் சொல்வதற்கு எல்லாரிடமும் கதைகள் இருக்கின்றன. எனக்கும் அப்படியான கதைகள் உண்டு. ஆனால், இலிங்கன்பால் உரிய அன்பும் அக்கறையும் அவர் பிறருக்குக் கொடுத்ததற்கு இணையாகவும் அவருக்குத் தேவைப்படும் அளவுக்கும் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் இருக்கிறது. அதற்கு மறுமொழி சொல்ல இலிங்கன் வரப்போவதில்லை. நாம்தான் எடை போட்டுப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

விடைபெற்றார் இலிங்கன், கேள்விகளை விட்டுச்சென்றபடி.

மறைந்தார் இலிங்கன், நம் நெஞ்சமெல்லாம் உறைந்தபடி.

நேற்றிருந்தவர் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இருப்பார் என்பதற்கு இல்லை. எனவே, வாழ்வை மென்மேலும் உயிர்ப்புடன் அன்புடனும் வாழ்வீர்களாக என்று இலிங்கன் தன் மூச்சையும் பேச்சையும் நிறுத்திக்கொண்டு தன் மெளனத்தால் அறிவிப்புக் கொடுத்திருக்கிறார் போலும்.

                தோழர் இலிங்கனுக்குச் செவ்வணக்கம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 217