(தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)

 பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது.

“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும் வகையில் திமுக அரசின் காவல்துறை பாதிக்கப்பட்ட பட்டியலினச் சாதி  மக்களையே விசாரணை என்ற பெயரில் அழைத்து குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக ஒப்புக் கொள்ளுமாறு ஆசை காட்டியும் மிரட்டியும் அடித்து அச்சுறுத்தியும் அலைபேசிகளை(செல்போன்களை)ப் பறிமுதல் செய்தும் வருகின்றது. ஏற்கெனவே சாதிவெறியர்களின் வன்கொடுமைக்கு வேங்கைவயல் மக்கள் ஆளாகி இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலரின் மீதே பொய்யாகப் பழிசுமத்த முயல்வது அரசே நிகழ்த்தும் சாதிய வன்கொடுமையாகும், அரசும், அதிகாரிகளும், ஆதிக்க சாதி அதிகார வருக்கமும் சேர்ந்துகொண்டு நடத்தும்  சாதிய ஒடுக்குமுறையாகும். இது மிகுந்த கண்டனத்திற்கும் உரியதாகும்.

இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மக்களை அரசு தரப்பில் எந்தவொரு அமைச்சரும் நேரடியாகச் சென்று பார்க்கவில்லை என்ற விமரிசனம் நீடித்துவருகிறது. அதுமட்டுமின்றி, எந்த கோவிலுக்குள் பட்டியலினச் சாதி மக்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துச் சென்றாரோ அதே கோயிலுக்குள் மீண்டும் அம்மக்களை நுழைய விடாமல் தடுக்கும் செய்தியும் வந்துள்ளது. பட்டியலினச் சாதி மக்கள் கோயிலுக்குச் சென்று வந்த பிறகு சாதி ஆதிக்க ஆற்றல்கள் கோயிலுக்கு தீட்டுக் கழித்துள்ளனர். ஏற்கெனவே, கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர், இரட்டைக் குவளை முறையைக் கடைபிடித்தவர் ஆகிய இருவரும் சிறைப்படுத்தப்பட்டாலும் அவர்கள் மீது ப.சா., ப.இ.(S.C., S.T.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்படவில்லை. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று சாதிவெறியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தமிழக அரசு சாதி  வெறியர்களைப் பாதுகாக்க முயல்வதை அறிய முடிகிறது.  

இம்மாவட்டத்தில்  ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள்   பட்டியலினச் சாதி மக்கள் மீது தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இறையூரிலும்  அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்  கோயிலில் நுழையத் தடை, இரட்டை குவளை முறை, கடைகளில் பொருட்களைக் கொடுக்க மறுப்பது,  கல்விக் கூடத்தில் பாகுபாடு காட்டுவது என  வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அங்கு மட்டுமின்றித்  தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் மேற்படி கூற்றுக்குச் சான்றாகத்,  தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கேட்ட பொழுது   தமிழகம் முழுவதும் 341 ஊர்களிலும் பட்டியலின சாதி மக்கள்  மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசே பதிலளித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். எனவே, இறையூர் கொடுமை என்பதை  ஏதோ சில விசமிகள் தெரியாமல் செய்துவிட்டது போலவும், இதை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவும் மாற்றுவதற்கு திமுக அரசு முயலக்கூடாது.

பாசிச பாசக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இந்தியா முழுவதும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஆர்எசுஎசு சங் பரிவார அமைப்புகள் தமிழகத்தி்ல் வேரூன்ற,  சாதிக் கட்சிகளோடு கூட்டு வைத்து செயல்படுவதைத் தனது செயல்தந்திரமாக வகுத்துச் செயல்படுகிறது. இது சாதி ஆதிக்கச் சக்திகளுக்கு அரசியல் பலத்தை அளித்திருக்கிறது. 

சாதிய  வன்கொடுமையில் ஈடுபட்ட  சாதி ஆதிக்கச் சக்திகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யவும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் தமிழக அரசைக் கோருகிறோம்.  மேலும், கடந்த ஒராண்டில் தமிழகம் எங்கும் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் புலனாய்வு செய்வதற்கு சனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகள்,  நேர்மையான நீதிபதிகள்,  அனைத்துச் சாதி உழைக்கும் மக்கள் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை  அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தியும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

[இதுதான் அந்த அறிக்கை, சனவரி 15 நாளிட்ட அறிக்கை. நானும் சேர்ந்து எழுதிய அறிக்கை. இந்த அறிக்கையில் திமுக ஆட்சியின் அணுகுமுறை குறித்தும் காவல் துறையின் புலனாய்வு குறித்தும் தெளிவாகச் சொல்லியிருப்பதைத் தோழர் புளியந்தோப்பு மோகன் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.]

தொடரும்

தோழர் தியாகு,

தாழி மடல் 113