(தோழர் தியாகு எழுதுகிறார் 36 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துப் போரில் சமூக நீதிக் கட்சியாராகிய நம் பங்கு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டும். அது தொடர்பாக சமூகநீதி மறுப்பாளர்கள் நடத்தும் பலமுனைத் தாக்குதலை முறியடிக்கும் கருத்துப் படைக்கலன்கள் நம் கொட்டிலில் அணியமாய் இருக்க வேண்டும். அந்த முறையில் கடந்த காலத்தில்  (தமிழ்த் தேசம் 2007 சித்திரை இதழில்) எழுதப்பட்டதென்றாலும் இன்றளவும் பொருத்தப்பாடுள்ள ஒரு கட்டுரையை இம்மடலில் மீள் வெளியீடு செய்கிறோம். பயன் பெறுங்கள், நம் உறவுகள் பயன்பெறச் செய்யுங்கள்.

+++

சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 1

கறுப்புக் குடையையோ சிவப்புத் துணியையோ கண்டால் மாடு மிரளும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. உண்மையில் சிவப்புக்கும் கறுப்புக்கும் பச்சைக்கும் பிற நிறங்களுக்கும் வேறுபாடு காண மாட்டினால் முடியாது. வண்ணக் காட்சிகள் எல்லாம் அதற்குக் கறுப்பு வெள்ளையாகத்தான் தெரியும்.

இந்த வகையான குருட்டுத் தன்மைக்கு நிறக்குருடு (Colour blindness) என்று பெயர். மாடு மட்டுமல்ல, வேறு பல விலங்குகளும் கூட நிறக்குருடுதான்.

மனிதர்களாகிய நம்மால் முழுமையாக வண்ணங்களைக் காண முடியும் என்றாலும், நாமும் கூட பிறந்து ஆறு மாதம் வரை நிறக் குருடர்களே. அதன் பிறகுதான் நம் விழிகளில் வண்ணம் பார்க்கிற ஆற்றல் வளர்கிறதாம்.

இயற்கை தொடர்பான நிறக்குருடு போலவே சமூகம் தொடர்பான நிறக்குருடு ஒன்று உள்ளது. இரண்டுக்கும் ஒரு வேறுபாடு உண்டு : சமூகம் தொடர்பான நிறக் குருட்டினால் கறுப்பையும் கூடக் காண முடியாது, அதற்கு எல்லாமே வெள்ளையாகத் தான் தெரியும்.

இருவகை இனவாதம்

மனிதத் தோலின் நிறம் என்பது மரபினத்தின் (race) அடையாளங்களில் ஒன்று. வெள்ளையர், கறுப்பர், மஞ்சளர், பழுப்பர் என்று மனிதர்களை இனம் பிரிக்கலாம். தோலின் நிறத்தை வைத்து இனவாதம்  (racism) தோன்றி வளர்ந்ததை நாமறிவோம்..

இனவாதத்தில் இருவகை உண்டு. ஒன்று நிறம் பார்க்கும் இனவாதம். மற்றொன்று நிறக்குருட்டு இனவாதம் (colour-blind racism). சற்று விரிவாகப் பார்த்தால்தான் இது விளங்கும்.

வெள்ளையர்கள் கறுப்பு நிறத்தை இழிவாகக் கறுப்பின மக்களுக்கு எதிராகப் பாகுபாடு (discrimination) காட்டியதை நாமறிவோம். இதன் மிக மோசமான ஒரு வடிவமே முன் தென் ஆப்பிரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்கல் (apartheid). இன்றுங்கூட வட அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் நிறவெறி சார்ந்த இனப் பாகுபாடு செயலளவில் நீடிக்கவே செய்கிறது. இது நிறம் பார்க்கும் இனவாதம்.

எதிர்வகைப் பாகுபாடும் நேர்வகைப் பாகுபாடும்

 கறுப்பர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு மனிதத் தன்மைக்கு மாறானது, மனித உரிமைகளுக்கு எதிரானது, மனித சமத்துவத்தை மீறக் கூடியது, மனித வளர்ச்சிக்குத் தடையானது. ஆகவே இந்தப் பாகுபாட்டை எதிர்வகைப் பாகுபாடு (negative discrimination) என்கிறோம்.

 இந்த எதிர்வகைப் பாகுபாட்டைச் சரிசெய்யவே நேர்வகைப் பாகுபாடு (positive discrimination)  என்ற கருத்தாக்கம் பிறந்தது. கறுப்பர்களா, வெள்ளையர்களா என்று வேறுபடுத்திப் பார்த்துக் கறுப்பர்களைக் கை தூக்கி விடுவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன. இவை நேர்வகைப் பாகுபாட்டின் பாற்பட்டவை.

 நீண்ட நெடுங்காலமாய் எதிர்வகைப் பாகுபாட்டினால் அழுத்தப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்களைக் கை தூக்கி விட்டு, மற்றவர்களுக்கு நிகராகப் போட்டியிடச் செய்வதற்கு நேர்வகைப் பாகுபாடு இன்றியமையாத ஒன்று. . இது கறுப்பின மக்களின் வரலாற்று உரிமை. தரலாம், தராமலும் இருக்கலாம் என்கிற சலுகையன்று.

 இன்னொன்றையும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. . ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்கிற நேர்வகைப் பாகுபாடு சமூக முன்னேற்றத்திற்குத் துணைசெய்கிறது. சமூக வளர்ச்சியில் எல்லாப் பிரிவினரும் சரிநிகராகப் பங்கேற்பதற்கு உதவுவதால் அது சமூக நலனுக்கான திட்டமாகும். எனவே கறுப்பின மக்களைக் கைதூக்கி விடுவதற்கான நேர்வகைப் பாகுபாட்டைச் சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் – வெள்ளையர் உட்பட ஆதரித்தல் வேண்டும்.

இனக் குருட்டு இனவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும்

எதிர்வகைப் பாகுபாட்டைக் கொண்டு கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கிய இனவாதம் இப்போது நேர்வகைப் பாகுபாட்டை ஏற்க மறுக்கிறது. இதற்காக அது ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறது – நிறமாவது, இனமாவது எல்லாம் ஒன்றுதான் என்று சமத்துவம் பேசுகிறது. வெள்ளையரும் கறுப்பரும் மனிதர்களே என்று மனிதநேயம் முழங்குகிறது. மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று நீதிபோதனை செய்கிறது. ஆகவே கறுப்பின மக்களைக் கைதூக்கிவிடும் சிறப்புத் திட்டங்கள் தேவையில்லை என்று வாதிடுகிறது. இவ்வழியில் வெள்ளையினத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்கிறது.

 இது நுட்பமான புதிய வகை இனவாதம். இதையே நிறக்குருட்டு இனவாதம் (colour-blind racism) என்கிறோம்.

 நிறம் பார்க்கும் இனவாதம், நிறக் குருட்டு இனவாதம் என்பது போல் சாதியத்திலும் இரு வகை உண்டு என்பது இப்போது தெளிவாகி வருகிறது. ஒன்று சாதி பார்க்கும் சாதியம். மற்றொன்று சாதி பாராச் சாதியம், அதாவது சாதிக் குருட்டுச் சாதியம் (caste-blind casteism). வருண – சாதியமைப்பிலும் நிறத்துக்கு ஒரு பங்குண்டு என்பதைக் கருதிப் பார்க்கையில், நிறக்குருட்டு இனவாதத்துக்கும் சாதிக்குருட்டுச் சாதியத்துக்குமான நெருக்கம் புலப்படுகிறது.

 நேர்வினைச் செயற்பாடும் இடஒதுக்கீடும்

நேர்வகைப் பாகுபாடு (positive discrimination) என்பதை அமெரிக்காவில் நேர்வினைச் செயற்பாடு (affirmative action) என்று குறிப்பிடுகின்றனர். இல்லை, கிடையாது என்று மறுப்பது negative. ஆம், உண்டு என்று ஏற்பது affirmative. கறுப்பின மக்களுக்குக் காலங்காலமாய் உரிமைகளும் நலன்களும் மறுக்கப்பட்டு வந்தன. இந்த மறுப்பை மாற்றி அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் ஏற்கும் முயற்சியே நேர்வினைச் செயற்பாடு. வேறு வகையில் சொன்னால், வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்து நேர்செய்யும் முயற்சியே நேர்வினைச் செயற்பாடு.

 நேர்வகை பாகுபாடு அல்லது நேர்வினைச் செயற்பாட்டின் முதன்மைக் கூறுகளில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு. உலக அளவில் பார்த்தால், மரபினம், தேசிய இனம், பாலினம், வாழ்விடம் என்று பல்வேறு கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு நேர்வினைச் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் நேர்வினைச் செயற்பாடு குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தீர்ப்புகள் வந்துள்ளன. நேரடியாகவும் சுற்றடியாகவும் நேர்வினைச் செயற்பாட்டை மறுக்கவும் குறுக்கவும் முற்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் சிலவற்றைத்தான் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடஒதுக்கீட்டுக்குத் தடை போடும் அண்மையத் தீர்ப்பில் எடுத்துக்காட்டியுள்ளனர். அந்த அமெரிக்க நீதிபதிகளின் நிறக் குருட்டு இனவாதத்தை இந்திய நீதிபதிகள் தங்களின் சாதிக் குருட்டுச் சாதியத்துக்கு முட்டுக் கொடுக்கப் பயன்படுத்தியுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், அதற்கு இட்டுச் சென்ற சூழலும் இதை மெய்ப்பிக்கின்றன.

 தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்:தியாகு

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்