நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~3/3
எல்லாப் பூசைகளும் தமிழ்ப் பூசைகளே!
அன்றைய நடுகல் கடவுள்களும் இன்றைய கோயில் கடவுள்களும் வேறல்ல என்பது மட்டுமில்லை, அந்த நடுகல் பூசை முறைக்கும் ஆகம முறைப்படி இன்று கோயில்களில் பிராமணர்கள் செய்யும் பூசை முறைக்கும் கூட ஏறத்தாழ வேறுபாடு என்பதே இல்லை!
நடுகல்லாக இருந்தபொழுது ஆண்டுக்கு ஒருமுறையோ சிலமுறையோ மட்டும் அந்தக் கற்கடவுளை வணங்குவார்கள். அதனால், மாதக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுக்கடைந்து போன கல்லை ஒவ்வொரு பூசைக்கு முன்பும் கழுவித் தூய்மைப்படுத்திப் பின் வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. அதுவே கோயிலுக்குள் சென்ற பின்னும் அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள மனம் வராததால், திருமுழுக்கு எனும் பெயரில் நாள்தோறும் அந்த வழக்கம் தொடர்ந்தது. பின்னர், வெறும் நீர் மட்டுமில்லாமல் பால், தேன், தயிர் போன்ற உணவுப் பொருட்களும் திருநீறு, சந்தனம், பன்னீர் போன்ற நறுமணப் பொருட்களும் திருமுழுக்குக்கான பட்டியலில் இடம் பிடித்தன.
இறந்தவரின் உருவத்தை நினைத்து நடுகல்லில் மஞ்சளைப் பூசிய வழக்கம் பின்னாளில் சிலைக்கு மஞ்சள் காப்புச் சாற்றுவதாக மாறியது. அதுவே பிறகு சந்தனக் காப்பு, தங்கக் காப்பு, வைரக் காப்பு என நிலை மாறியது(பரிணமித்தது).
உயிர் நீத்தவரின் உருவத்தை நினைவூட்ட மஞ்சளைப் பூசிப் பொட்டு வைத்து முகம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தவர்கள், உடல் போன்ற தோற்றத்தைக் கொண்டு வர அந்தக் கல்லுக்குத் துணியைச் சுற்றி ஆடையும் அணிவித்தார்கள். இதுவே பிற்பாடு கோயில் சிலைகளுக்கும் ஆடை சாற்றும் வழக்கமாக உருவெடுத்தது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, சிலைக்கு ஆடை அணிவிக்கும் வழக்கம் இங்கு மட்டும் இருக்கக் காரணம் இதுவே! கோயில் சிலைகள் அனைத்தும் ஆடையணிந்த உருவமாகவே வடிக்கப்பட்டிருந்தும் இன்றும் நாம் அதற்குத் தனியாகத் துணியாலான ஆடை ஒன்றைச் சாற்றியே வழிபடுவது பண்டைத் தமிழர்களின் நடுகல் பூசை முறையின் தொடர்ச்சியே இஃது என்பதன் அசைக்க முடியாத சான்று! (இந்நாளில், தலைவர்கள் இறந்தால் அவர்களுக்குச் சிலை வைப்பதும், அவர்களுடைய பிறந்தநாள் – இறந்தநாள் ஆகியவற்றின்பொழுது அந்தச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதும் மேற்படி தமிழ் மரபின் நீட்சிகளே!).
இரு பூசை முறைகளுக்குமான ஒற்றுமைகளைப் பட்டியலிடுவதாலேயே இவை இரண்டும் ஒன்றென ஆகிவிடுமா எனக் கேள்வி எழலாம்.
பிராமணர்களிடம் உருவ வழிபாட்டு முறையே கிடையாது; அவர்தம் புனித நூல்களான மறை (வேதம்) நூல்களிலும் உருவ வழிபாடு பரிந்துரைக்கப்படவில்லை; வேள்வி செய்வதே பிராமணர்களின் இறை வழிபாட்டு முறை என ஆய்ந்தறிந்த ஆன்றோர் பெருமக்கள் பலரும் கூறியுள்ளனர். பிராமணர்களின் தொழில்கள் எனத் தொல்காப்பியர் ஆறு தொழில்களைப் பட்டியலிடுகிறார். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். அதாவது, ஓதல் – நான்மறைகளை வாய்விட்டு ஒலித்தல், ஓதுவித்தல் – மற்றவர்களும் நான்மறைகளை ஓதுமாறு செய்தல், வேட்டல் – வேள்வி நடத்துதல், வேட்பித்தல் – மற்றவர்களும் வேள்வி நடத்தச் செய்தல், ஈதல் – தானம் செய்தல், ஏற்றல் – பிறர் தரும் தானங்களை ஏற்றுக் கொள்ளுதல். இதில் எங்குமே ‘இறை வழிபாடு’ செய்வதைப் பிராமணர்களின் தொழிலாகவோ கடமையாகவோ தொல்காப்பியர் குறிப்பிடாததைப் பார்க்கலாம்.
ஆக, பிராமணர்களுக்குப் பூசை செய்யும் வழக்கமே இல்லாத நிலையில் இன்று கோயில்களில் காணப்படும் பூசை முறைகளைத் தமிழர் அல்லாமல் வேறு யார் இந்நாட்டில் உண்டாக்கியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மட்டுமின்றி, கோயில் பூசை முறைகள் தமிழர்களுடையவையே என்பதற்குப் பழந்தமிழ் நூல் ஒன்றிலிருந்தும் சான்று இதோ:
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து – வேல்அமருள்
ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று
காண்தக நாட்டினார் கல்
என்று புறப்பொருள் வெண்பா மாலையில் பாடப்பட்டுள்ளது. “மாலை சூட்டி, மணி ஒலித்து, மதுவைத் தெளித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேல் போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்” என்பது இதன் பொருள்.
ஆகக், குறிப்பிட்ட ஒருவரின் உருவமாக இந்தக் கல் அமையட்டும் என நிறுவுதல் (பிரதிட்டை), திருமுழுக்காட்டுதல் (அபிசேகம்), மாலை சூட்டுதல், காப்புச் சாற்றுதல், ஆடை அணிவித்தல், படையல் (நிவேதனம்) இடுதல் என இன்று கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் பூசை முறைகள் அத்தனையும் தமிழர் உருவாக்கியவையே! இவை அனைத்தும் தமிழ்ப் பூசை முறைகளே!
கடவுள்கள் எல்லாம் தமிழ்க் கடவுள்களே! அவர்களைப் பூசிக்கும் முறைகள் எல்லாம் தமிழ்ப் பூசை முறைகளே! ஆனால், இந்தத் தமிழ்க் கடவுள்களைத் தொடவும் தமிழ்ப் பூசைகளைச் செய்யவும் மட்டும் தமிழர்களுக்கு தகுதியில்லை என்பது எப்பேர்ப்பட்ட அட்டூழியம்!இதைத் தமிழர்களும் நம்புவது எப்பேர்ப்பட்ட மடத்தனம்! உலகில் மற்ற எல்லாரும் கடவுள் என்பது எங்கோ இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் என்றே கருத்துக் கொண்டிருந்த காலத்தில், கண்ணெதிரே இருந்த இயற்கைக் கூறுகளையும், கண் முன்னே வாழ்ந்து மறைந்த நல்ல மனிதர்களையுமே கடவுளாகப் போற்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுக்கு உவப்பான கடவுள் கொள்கையைப் படைத்த தமிழர்களுக்கா கடவுளைத் தீண்டும் தகுதி இல்லை?
இதுவரை, கடவுளைப் பூசை செய்வதில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகள், தகுதிகள் குறித்துப் பார்த்தோம். இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும் இவற்றின் பெயரால் வழிபாட்டு உரிமையை வலியுறுத்துவது என்பது நல்லதில்லை. இந்த ஆகமங்கள், மரபுகள், சட்டங்கள், சான்றுகள், காரணங்கள், ஏரணங்கள் எல்லாம் ஒருவேளை தமிழர்களுக்கு எதிராக இருந்தால் தமிழர்களுக்குத் தெய்வச் சிலைகளைத் தீண்டும் தகுதியோ உரிமையோ இல்லை என ஆகிவிடுமா? நாம் அதை வலியுறுத்தக் கூடாது எனச் சொல்லி விட முடியுமா? முடியாது! காரணம், தொடக்கத்திலேயே பார்த்தபடி, கடவுளைத் தொட்டுப் பூசை செய்வது என்பது கடவுளை நம்பும் அனைவர்க்குமான அடிப்படை உரிமை! உலகில் எல்லோருக்குமே இருக்கிற உரிமை! சமயங்கள் சிலவற்றில், இறையன்பர் எனும் நிலையிலிருந்து பூசாரி எனும் நிலைக்கு உயரச் சில நெறிமுறைகளை நிறைவேற்றச் சொல்வதும், சில படிநிலைகளைக் கடக்க வேண்டும் என்பதும் உண்டு. அப்படி வேண்டுமானால் சில கட்டுப்பாடுகள் வைக்கலாமே ஒழிய, சாதி – பிறப்பு போன்ற காரணங்களைக் காட்டிக் குறிப்பிட்ட சிலரை முற்றிலுமாக விலக்கி வைப்பது என்பது ஒருபொழுதும் ஏற்க முடியாதது! அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது!
எனவே, வழிபாட்டு உரிமை என்பதை இப்படித் தகுதிகளின் பெயரால் வலியுறுத்துவதை விட அறத்தின் பெயரால் வலியுறுத்துவதே சாலச் சிறந்தது! தமிழ் ஆண்களுக்கு மட்டுமில்லை, தமிழ்ப் பெண்கள், திருநங்கைகள் என அனைவருக்கும் இங்கே கடவுளரைத் தொட்டுப் பூசிக்கும் உரிமை வேண்டும்! அதுவரை இதற்கான போராட்டங்கள் தொடர வேண்டும்! கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் எனத் தாங்கள் நம்புவது உண்மையாக இருந்தால் இறையன்பர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!
❀ ❀ ❀ ❀ ❀
உசாத்துணை:
௧. தமிழ் விக்கிப்பீடியா.
௨. ‘விடுதலை’ இதழ்
௩. தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை.
௪. குங்குமம் இதழ்.
௫. தினம் ஒரு சங்கத்தமிழ் வலைப்பூ.
௬. தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தளம்.
– இ.பு.ஞானப்பிரகாசன்
[‘அனைத்துச் சாதியினரும் பூசாரியாகலாம்’ என அண்மையில் கேரள அரசு சட்டம் இயற்றியிருப்பதைப் பாராட்டுகிறோம். தமிழ்க் காப்புக் கழகத்தால் நடத்தப்பட்ட ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தை 16 , 2047 / சனவரி 30 , 2016 இல் வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கிப் பாராட்டப்பெற்ற திரு இ.பு.ஞானப்பிரகாசன் கட்டுரையை இந்த நேரத்தில், வெளியிடுகிறோம்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக