தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு
தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது
என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி
வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில்
புகுந்திருப்பதேயாகும்.
வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞானயோகிகளும், வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழிநூலறிஞர் முனைவர் பி. எசு.சுப்பிரமணிய (சாத்திரியாரும்) பிறரும், “வடமொழி வேறு; தமிழ் மொழி வேறு” என்பதை நன்கு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். மொழி நூலறிஞர் முனைவர் கால்டுவெல், திராவிடமொழிகளையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து, வடமொழியினும் வேறானவை திராவிட மொழிகள் என்பதை நிலை நாட்டியதோடு, சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் புகுந்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
வடநூற்புலமையும் தமிழ் நூற்புலமையும்
பெற்றுத் தமிழ் இலக்கிய நயங்களை மிக நன்றாக எடுத்தியம்புதலில் இணையற்று
விளங்கிய பெரும்புலவரான மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு.கதிரேச(ச்
செட்டியார்) அவர்கள், “வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள்
மிகப் பலவாம்.
வடமொழியில் தமிழில் இருப்பது போலத் திணை பால் உணர்த்தும் வினை விகுதிகள் இல்லை.
‘பவதி’ என்னும் வினைமுற்று, இருக்கிறான், இருக்கின்றாள், இருக்கின்றது என
ஓர் ஈறே நின்று எழுவாய்க்கு ஏற்றவாறு பொருள் உணர்த்தி நிற்கும்.
தமிழில் வினைமுற்றுகளின் ஈறோ திணை பால்களை உணர்த்தி நிற்கும். பால் வகுப்பு தமிழில் பொருளைப் பற்றியும் வடமொழியில் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்கள் எல்லாம் ஆண்பாலாகவும், பெண் மகளைப் பற்றி வருவன எல்லாம் பெண் பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வரையறை இல்லை. மனைவியைப் பற்றி வரும் ‘பாரியை’ என்னும் சொல் பெண்பாலாகவும் ‘தாரம்’ என்னும் சொல் ஆண்பாலாகவும், களத்திரம் என்னும் சொல் நபுஞ்சகப்பாலாகவும் வருதல் காண்க.

வடமொழியில் ஒருமை, இருமை, பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமை அல்லாதன எல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்புவினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன”
என்று தமது‘கலைபயில் கட்டுரை’ என்னும் நூலில் வடமொழிக்கும் தமிழ்
மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார். முனைவர்
பி. எசு. (சாத்திரியார்), இன்னும் வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள பல
வேறுபாடுகளைத் தமது ‘தமிழ் மொழி நூல்’ என்பதில் விளக்கியிருக்கிறார். அகவற்பா, கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா முதலியவை தமிழ் மொழிக்கே உரியவை. ஆதலால், தமிழ்மொழி வடமொழியினின்று பிறந்தது அன்று என்றும், வடமொழியிலிருந்து வேறுபட்ட பண்புடையது தண்டமிழ்மொழி என்றும் நன்கறியலாகும்.
– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் :
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக