தலைப்பு-சமற்கிருததிணிப்பு,. அமைதி ஆனந்தம் l thalaippu_samarkirutha_thinippu_amaithianandam

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா!

முன் ஒரு காலத்தில்,
(1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும்,
(2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும்
(3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன  என்பதும்
(4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும்
(5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு.
அன்று இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வழக்கில் இருந்த பழந்தமிழ் இன்று தமிழ்நாடு அளவில் குறுகிய போதிலும் இந்தத் தமிழும் சமற்கிருத மயத்தால் வேறொரு மொழியாக மாறிடும் மோசமான சூழலில், ஆங்கிலேயர் வந்ததால் தமிழ் தப்பிப் பிழைத்தது என்பதும் அவ்வரலாற்றின் தொடர்ச்சி.
இந்நிலையில், மீண்டும் சமற்கிருத மொழித் திணிப்பா? ஐயா, தாங்காது இந்தியா.
தற்போது
(அ) கல்லூரிகளிலும், தனியார் பள்ளிகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இல்லை;
(ஆ) இந்திய அரசு ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை;
(இ) தமிழ் நாட்டிலேயே  பெயரளவில் தான் தமிழ் ஆட்சி மொழி.
இந்நிலையில், சமற்கிருதத்தைத் திணித்தால் தமிழிற்கு மட்டுமல்ல இந்திய மொழிகளுக்கே ஆபத்து.
ஆங்கிலம் கல்வி மொழியாக ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீடிக்கக் கூடாது. இன்று, ஆங்கிலத்தால்,  இந்திய மொழிகள் நிலை குலைந்து கிடக்கின்றன. சமற்கிருதம் செய்த தவற்றை ஆங்கிலம் செய்யக்கூடாது. ஆங்கிலம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
மேற்காணும் சூழலில், கீழ்க்காணும் தலையாய கடமைகளை மத்திய மாநில அரசுகள் சட்டத்தின் மூலம் செயல் படுத்துவதே உத்தமம்.
(அ) இந்தியாவில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும்.
(ஆ) இந்திய மொழிகள் கல்வி மொழிகளாக வேண்டும்.
(இ) இந்திய மொழிகள் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக வேண்டும்.
(ஈ) இந்திய மொழிகள் நீதிமன்றங்களில் வழக்காடு மொழிகளாக வேண்டும்.
(உ) இந்திய மொழிகள் வழிபாட்டு (அருச்சனை) மொழிகளாக வேண்டும்.
(ஊ) இந்திய மொழிகளில் படித்தவர்களுக்கே வேலை வழங்க வேண்டும்.
a.r.amaithianandham01
ஆ. இரா.அமைதி ஆனந்தம்,
தலைமை வரைதொழில்  அலுவலர் (நெ) (ஓய்வு),
137/5, செல்வ வினாயகர் கோயில் தெரு, சதானந்தபுரம், சென்னை – 600063;
 பேசி: 9445106836