தலைப்பு, எப்படி வளரும் தமிழ், முடியரசன்thalaippu_eppadivalarum_thamizh_mudiyarasan

எப்படி வளரும் தமிழ்?  3/3


  இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது.
  இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். இசுலாமியர், கதிரவன், மதியண்ணல், மலர், அன்பு என்னும் பெயர்களால் தம்மை மேம்படுத்திக் கொள்கின்றனர். கிறித்துவர் வளன் அரசு, கோயிற் பிள்ளை, இளம்பிறை, மின்னல் என்னும் பெயர்கொண்டு மகிழ் வதுடன், வழிபாடுகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் தமிழே பயன் படுத்துதல் வேண்டும் என முனைந்தும் வருகின்றனர். இவ்வனைத்தும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியனவே. எனினும், அளவு போதாது; பெருகுதல் வேண்டும். நூற்றுக்கு நூறு இல்லாவிடினும் எண்பது விழுக்காடாவது வளர்தல் வேண்டும். பெரியார், அறிஞர், சான்றோர், அரசியற்றலைவர் பட்டபாட்டுக்குப் பயன் அந்த அளவாவது வேண்டாவோ?
 வானொலியில்
  தமிழ்நாட்டு வானொலியில், தமிழிசைக்காகப் பதினைந்து மணித்துளிகள் ஒதுக்கித் தந்து, பெரும்புகழைத் தட்டிக் கொண்டனர்! அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் ஒதுக்கித் தந்துள்ளனர் என்றால் அவர்தம் பெருமனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! இவ்வாறு தமிழ்நாட்டிலே தமிழிசையை ஒதுக்கிவைத்துப் பெருமை தேடிக்கொண்டுள்ளனர். ஆங்கில நாட்டிலே தமிழிசைக்காக இப்படி நேரம் ஒதுக்கலாம்; பிரெஞ்சு நாட்டிலே ஒதுக்கலாம்; ஏனைய நாடுகளில் தமிழிசைக்காகச் சிறிது நேரம் ஒதுக்கலாம். தமிழ்நாட்டிலே தமிழிசைக்குக் கால் மணி நேரம் என்றால் இதை விட இழிவு வேறு வேண்டுமா? தமிழிசைக்குக் கால்மணி நேரந்தான் என்றால் எஞ்சிய நேர மெல்லாம் எந்த இசைக்கு? வேறு எந்த நாட்டிலேனும் அந்த நாட்டுத் தாய் மொழியிசைக்கு ஒரு சிறு நேரம் ஒதுக்குவார் களா? ஒதுக்கியிருப்பின் அஃது அறிவுடைய நாடா? உரிமை யுள்ள நாடா? அடிமை நாடாகத்தான் இருக்க முடியும்.
தாளிகைகளில்
  நாளிதழ், கிழமையிதழ், மாத இதழ் என்று பல்வேறு இதழ்கள் தமிழில் வெளிவருகின்றன. அவற்றில் அறியாமல் நிகழும் பிழைகள், அறிந்து செய்யும் பிழைகள் அளவு கடந்தன. சந்திப் பிழைகள் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்ட நாளிதழ் களும் உண்டு. வேண்டுமென்றே அயன்மொழிச் சொற்களைப் பயன்படுத்தி, மக்களுணர்ச்சியை அழிக்கும் இதழ்களும் உண்டு. தட்டிக் கேட்கவோ தடுத்துரைக்கவோ எவரும் இலர் என்ற தருக்கால், ஆங்கிலத் தொடர்களையே பயன்படுத்தித் தமிழ்க் கட்டுரைகள் கதைகள் எழுதும் எழுத்தாளரும் உண்டு. எழுத் தோவியங்களுக்குத் தலைப்புங் கூட ஆங்கிலமாக வருவதும் உண்டு. பாவாணர் தமிழிலா எழுதச் சொல்லுகிறோம். எளிய இனிய தமிழில் எழுதினாற் போதும். புனல் என்று எழுத வேண்டா; தண்ணீர் என்று எழுதினால் எவனுக்கு விளங்காது? இதை விடுத்து ‘ஜலமும், வாட்டரும்’ எதற்கு? இத்துறையில் தமிழ்க் கொலை வெளிப்படையாக நடைபெற்றுவருகிறது.
  வழிபாட்டுக்குத் தமிழ் வேண்டுமென்றால் முறை மன்றமே தடை விதிக்கிறது. இசையரங்கில் தமிழ் வேண்டுமென்றால் ஒரு கூட்டமே கொந்தளித்தெழுகிறது. போராட்டங்கள் பல நடத்தியும், தலைவர்கள் தட்டித் தட்டி யெழுப்பியும், சான்றோர்கள் அறிவுரைநல்கியும், வெளிநாட்டார் இகழ்ந்து பேசியும் அறிவோ மானமோ ஏன் தோன்றவில்லை? தமிழுணர்ச்சி மங்குதற்குக் காரணந்தான் என்ன?
  தமிழகத்தில், மலையாள மொழிக்கு உரிமை பூண்டோர் வாழ்கின்றனர். கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண் டோர் வாழ்கின்றனர். தெலுங்கு பேசுவோர் வாழ்கின்றனர். அரபு மொழிக்கு உரிமை கொண்டாடுவோர் ஈங்குளர். ஆங்கிலத்துக்கு வழிவழி வந்தோர் என்பாரும் பரவியுள்ளனர். வடமொழியே தம் தாய்மொழியெனக் கொண்டு, அதன் வளர்ச்சிக்கே வாழ்பவரும் நீண்ட நெடுங்காலமாக இங்குள்ளனர். இன்னும் பல்வேறு மொழி யாளர்க்கும் உறைவிடமாகவுள்ளது. எஞ்சியோரே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவருட் பலர் கல்லாதார்; பலர் தமிழ் தமக்கு உரியதென எண்ணாதார்; கற்றறிந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் சிலர், தமிழிற் பிறமொழி கலந்துதான் பேசுதல் வேண்டும், எழுதுதல் வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் நண்ணாதார். ஆதலாற்றான் தமிழுணர்ச்சி தலைதூக்கவும் வளரவும் வழியில் லாமற் போகிறது.
  இங்கே பிறந்து, இங்கே வளர்ந்து, இங்கே வாழ்ந்து இம் மண்ணிலேயே சாகப் போகிறவர்கள், தம் உள்ளத்திற் பிறமொழி ஆளுகைக்கு இடந்தருவது வருந்தத்தக்கதே. வந்து போவோரைப் பற்றிக் கவலையில்லை; வாழ்ந்து சாவோரைப் பற்றித்தான் கவலை கொள்ள வேண்டியுளது. அனைவரும் இந் நாட்டுக்குரியர், இம் மொழிக்குரியர் என்று உண்மையில் நம்பி வாழ்தல் வேண்டும். சென்னையில் மறைமலையடிகளார் தலைமையில் தந்தை பெரியார் நடத்திய இந்தியெதிர்ப்பு மாநாட்டில், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. உரையாற்றும் பொழுது,தமிழ், காவிச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கறுப்புச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கதர்ச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; தமிழ்நாட்டில் உடற்சட்டை யெடுத்த ஒவ்வொருவனுக்கும் தமிழ் சொந்தம்என்று குறிப்பிட்ட மணிமொழியை நெஞ்சிற் பதிய வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒன்றுபட்ட உணர்வு ஏற்படுமேல் தமிழ் வளர இயலும். இன்றேல் தமிழ் எப்படி வளரும்?
கவிஞர் முடியரசன்
(இராசபாளையம் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா மலரில் வெளியிடப் பட்டது)