புதன், 29 ஜூன், 2016

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்




ஆய்வுக்கூடத்திறப்பு09 :aayvukkudathirappu09
மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்
  “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மல்லாவி மத்தியக் கல்லூரி, மன்னார் சித்தி பிள்ளையார் இந்து மத்தியக் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய கல்விக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் 17.06.2016 அன்று திறந்து வைத்தார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், திருவாட்டி.சாந்தி சிறிகந்தராசா, வட மாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா, சார்லசு நிர்மலநாதன், வட மாகாண அமைச்சர் தெனீசுவரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத்தின் தலைவர்கள் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.
  தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்,
  “எமது மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைய வேண்டுமானால் அவர்களுக்கான ஏந்துகளை (வசதிகளை) நாம் செய்து கொடுக்க வேண்டும். அதனை அரசே செய்ய வேண்டும். கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்கின்றபொழுது அஃது அனைவருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும். அதில் பாகுபாடு காட்டப்படக் கூடாது. அப்படிப் பாகுபாடு காட்டப்பட்டால் அஃது அந்தக் குமுகத்தையே (சமூகத்தையே) பாதிக்கும். அவ்வாறான நிலைமைகளில் நாட்டில் தேவையற்ற, விரும்பத்தகாத சிக்கல்கள் உருவாகும். எனவே, அனைவருக்கும் அனைத்தும் சமமாகக் கிடைத்தால் நாடும் அமைதியாக இருக்கும்; மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதை அரசின் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்களும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
  கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே எமது நாட்டில் அமைதிக்குக் குந்தகம்(பங்கம்) ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். இதனை ஈடு செய்ய முடியாது. எனவே, எதிர்வருகின்ற காலங்கள் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முதன்மைக் காலக்கட்டமாக அமையும். வட கிழக்கு மக்களாக இருந்தாலும் சரி, மலையக மக்களாக இருந்தாலும் சரி. நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். எங்களுக்குள்ளே வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
  நான் கல்வி அமைச்சர். இந்த நாடு முழுவதற்கும். நான் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். நாங்கள் வெகு விரைவில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் 100 பேரை வடகிழக்குப் பகுதிகளில் இருந்து மலையகக் கல்விக்கூடங்களுக்குப் பணியமர்த்த இருக்கின்றோம். அதன் மூலமாக உங்களுடைய வேலைவாய்ப்புச் சிக்கல் தீர்க்கப்படுகின்றது. எங்களுக்கும் கணித, அறிவியல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கிடைப்பார்கள். இப்படி நாங்கள் ஒற்றுமையாக விட்டுக் கொடுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
  நான் வடகிழக்கிற்கு வருகை புரிகின்றபொழுது இங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அவை அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண அவை உறுப்பினர்கள் எல்லோரும் எங்களுடன் இணைந்து செயற்படுவதைப் பார்க்கின்றபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தனியே நான் மட்டும் கைத்தட்டினால் ஓசை வராது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். இந்த நிலைமை அனைத்து மாகாணங்களிலும் ஏற்பட வேண்டும். அரசியலையும் கல்வி மேம்பாட்டையும் வெவ்வேறாகப் பார்க்க வேண்டும். எனவே, இதனைச் சிந்தித்துச் செயற்படுவோம்” எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
(படங்கள்)
மல்லாவி மத்தியக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், இரண்டு மாடி இணைப் பாடச் செயற்பாடுகளுக்கான வகுப்பறைக் கட்டடம், மூன்று மாடித் தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் மேற்படி நாளில் (ஆனி 03, 2047 / 17.06.2016) திறந்து வைத்தார். புதிய கட்டடங்களையும் விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதையும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகளையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]



பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக