68dengu

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பரவாமல் தடுக்கப் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பர
வாமல் தடுக்கப் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் மருமக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி நிருவாகம் எடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரப் பதாகைகள், மிதியூர்தி(ஆட்டோ), உழுவையூர்திகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் துண்டறிக்கை வழங்கப்படுகிறது. மேலும் பழைய உருளிக்காப்புகள்(டயர்கள்), தொட்டிகள், ஆட்டு உரல் போன்றவை பேரூராட்சிப் பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டிப் பேரூராட்சிக்குற்பட்ட மஞ்சளாறு அணை, சாத்தாகோவில்பட்டி, புல்லக்காபட்டி போன்ற ஊர்களில் நீண்ட நாள் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மற்றும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தியும், வீடுகள், உணவகங்களில்   வெளுப்புத்தூள், கழுவுநீர் முதலானவை தெளித்தும் பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சிப்பகுதியில்; உள்ள தண்ணீர்த் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில்   தூய்மைக்கான மருந்து கரைச்சல் போன்றவை தெளிக்கப்பட்டன.
தேவதானப்பட்டிப் பேரூராட்சித் தலைவர் குணா தலைமையில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, நல்வாழ்வுத்துறையைச்சேர்ந்த பன்னீர்ச்செல்வம் தலைமையில் குழு அமைத்து ஆங்காங்கே கொசுக்களை அழிக்கும் மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாகப் பேரூராட்சித்தலைவர் குணா கூறுகையில், தேவதானப்பட்டிப் பேரூராட்சியைக் குப்பையில்லாப் பேரூராட்சியாக மாற்றவும், மருமக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
68vaigaianeesu