திங்கள், 22 டிசம்பர், 2014

செயற்கை மெத்தைகளினால் நலியும் இலவம் பஞ்சுத் தொழில்

58mattressdp

தேனி மாவட்டத்தில் செயற்கை மெத்தைகளினால்

நசிந்து வரும் இலவம் பஞ்சுத் தொழில்

58vaigai aneesu

  தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளில் இலவம் பஞ்சுத் தொழிற்சாலைகள் தற்பொழுது மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றன.
 இலவம் பஞ்சு விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, செயற்கைப் பஞ்சுகள் வருகை முதலான காரணிகளால் இலவம் பஞ்சுத் தொழில் நலிவடைந்து வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வடைந்துள்ளது.
  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, எ.புதுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் இலவம் பஞ்சு பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் போதிய மழையில்லாதபோதும் இலவம் பஞ்சு நன்றாக விளைந்தது. தற்பொழுது அதிக மழை பொழிந்தும் இலவம் பஞ்சு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் கொட்டைப்பஞ்சு அயிரைக்கல்(கிலோ) 90உரூபாய்க்கும், கொட்டை நீக்கிய பஞ்சு அயிரைக்கல்(கிலோ) 250உரூபாய் வரையும் விற்பனை ஆகிறது.
  இவை தவிர செயற்கைஇழை(ரெக்ரான்), நுரைப்பஞ்சு(போம்), நார் போன்றவற்றால் உருவாகும் மெத்தைகளின் வரவால் இலவம் பஞ்சு மெத்தை வணிகம் மந்தமாக உள்ளது.
  இதன் தொடர்பாக இலவம்பஞ்சு மெத்தை உற்வத்தியாளர் சாகீர் உசேன் கூறுகையில “தற்பொழுது கொட்டை நீக்கிய பஞ்சு அயிரைக்கல்(கிலோ) 250உரூபாய் வரை விற்பனை ஆகிறது. 6க்கு 4 அளவு மெத்தைக்கு 13 அயிரைக்கல் முதல் 14 அயிரைக்கல் பஞ்சு தேவைப்படுகிறது. இவை தவிர பஞ்சு மெத்தை தயாரிக்கப்பயன்படும் துணியாகிய முரட்டுத் துணி(drill fabric) 1 கோல் 120 உரூ.வரை விற்பனை ஆகிறது. தற்பொழுது பஞ்சு தயாரிப்பதற்கு போதிய வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படி வந்தாலும் அவர்களுக்கு முன்வைப்புத்தொகை கொடுத்து ஒரு நாளைக்கு 500 முதல் 600உரூபாய் வரை சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளது. நல்ல நிலையில் மெத்தை தயாரிக்க 5 அங்குல உயரம் வேண்டும். இதனால் ஆயத்தத் தயாரிப்புகளை விலைக்கு வாங்குகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இலவம் பஞ்சு மெத்தைகளுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் ஓணம் பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையின்போது பழைய மெத்தையைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய மெத்தை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் கேரளாவிற்கு மெத்தைகளை அனுப்பி வருகிறோம்” என்றார்.
  எனவே நலிந்து வரும் இத்தொழிலை மேம்படுத்த கைந்நூலகம்(காதிகிராப்ட்டு), அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இவற்றை வாங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக