வியாழன், 15 மே, 2014

அதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்

காங்.கட்சி என்றால் ஆளாளுக்கு முரண்பட்ட கருத்துகளைக்கூடத்  தெரிவிக்கலாம். பிற கட்சிகளிலும்  அடுத்த நிலையில் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். எல்லாம் தலைவியே என்று இருக்கும் அதிமுகவில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பதை மறந்துவிட்டாரா மலைச்சாமி! அப்படியே சொன்னாலும் புரட்சித் தலைவியை அரசு அமைக்க  3 ஆம் அணி வேண்டும் சூழலில் இதற்கான வாய்ப்பு இல்லை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்! அல்லது அரசு அமைக்க பா.ச.க.வே இவரை வேண்டும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!தலைவியே கணிப்புகளை மெய்யென்றோ பொய்யென்றோ சொல்லாமல் அடக்கத்துடன் பிறரைப்போல் தானும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறும் பொழுது இவர் வேறுவகையில் பேசலாமா? நீக்கத்திற்கு வேறு காரணம் எதுவுமின்றி இதுதான் எனில், இவரது கடந்த காலப் பணிகளைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் விட்டிருக்கலாம். இப்பொழுதும்  மன்னிப்பு மடல் பெற்று நாவன்மையும் வினைத்திறமும் மிக்க இவரை மீளவும் சேர்த்துக் கொள்ளலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிமுகவில் இருந்து முன்னாள்  நா.உ. (எம்.பி.) மலைச்சாமி நீக்கம்: செயலலிதா
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்: ஜெயலலிதா 

சென்னை, மே. 15–
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்– அமைச்சருமான  செயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த  முனைவர் கே.மலைச்சாமி இன்று முதல், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்– அமைச்சர்  செயலலிதா கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மலைச்சாமி முன்னாள்  நா.உ.(எம்.பி.) ஆவார். மாநிலத் தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார். 
++++++++++++++++++++++++++++++++++++++++++
மலைச்சாமி நீக்கம்:செ. அதிரடி
தினமலர்

சென்னை:  முன்னாள் நா.உ., மலைச்சாமியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக முதல்வர் செயலலிதா அறிவித்துள்ளார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'செயலலிதா மோடிக்கு ஆதரவு தருவார்' என மலைச்சாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம் ஏன்?








முன்னாள்  நா.உ.(எம்,.பி.) மலைச்சாமி, இன்று அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியான தகவல்களின்படி,
மத்தியில் பாசக தலைமையிலான தே.ச.கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், அதிமுக., பிசு சனதா தளம்  முதலான கட்சிகளின் ஆதரவைப் பெறும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது குறித்து அதிமுக பொதுச் செயலரும் தமிழக முதல்வருமான  செயலலிதா, செய்தியாளர்களிடம் பேசியபோது, உங்களைப் போலவே நானும் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.. அதன் பின்னரே எந்த வித முடிவையும் எடுக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள்  நா.உ.(எம்.பி.) மலைச்சாமி நேற்று பேட்டி அளித்த போது, ''நரேந்திர மோடி, தமிழக முதல்வர் செயலலிதாவுக்கு நல்ல நண்பர்; இருவரும் அரசியலால் பிரிந்திருந்தாலும், நட்பு முறையில் நெருக்கமாகத்தான் உள்ளனர். மோடி  தலைமையர் ஆனால், அவருடன் நல்ல நட்புறவை முதல்வர் வளர்த்துக் கொள்வார்'' என்று கூறியிருந்தார்.
இந்தத் தகவல், அதிமுக., தே.ச.கூட்டணிக்கு ஆதரவை அளிக்கும் என்ற கருத்தை வெளியில் பரப்ப விட்டது.
மேலும், அதிமுக பொதுச் செயலர் செயலலிதாவுக்கு தேசிய அரசியலில் ஆர்வம் உள்ளது என்ற கருத்தையும் ஊடகங்களில் கசியவிட்டது. இதுபோன்ற ஒரு வாய்ப்பு வந்தால், அதிமுக பொதுச் செயலர் செயலலிதா, தான் ஒரு சிறந்த அனைத்திந்தியத் தேசியத் தலைவர் என்ற நிலையை  மெய்ப்பித்துக் காட்டுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இத்தகைய கருத்துகள், கட்சியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாகக் கூறி, மலைச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
மலைச்சாமி இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.,) தமிழகத் தேர்தல் ஆணையராக இருந்தவர். அதிமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும்ம்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. \
மலைச்சாமி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து... (சுருக்கப்பட்டது...) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக