pongal vaazhthu04
உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை
உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார்
கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு
கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால்
ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த
இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன்
உருவான  உலகம்   உருண்டை  என்றே
இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே !
“  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால்
உழந்தும்    உழவே    தலை “    என்றாரே
படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ?
பிறநாட்டார்  சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே !
சுழலும்   உலகம்கூட  உழவரின்  பின்செல்லும்
நிழலாக  இருக்கிறதென  நிறைவாகக்  சொல்லுமந்த
உழவரின்  திருநாளே  உருபெரும்  பொங்கலதுவும்
பழமைப்    புத்தாண்டு  புதுநாள்   என்போம் !
இழிபிறப்பின்   பெயரால்  இருக்கின்ற  அறுபதாண்டை
வழிமொழி   அறியா  வன்நெஞ்சர்  தமிழராண்டென
புகுத்திட்டார் ;  தமிழரினம்   பகுத்துப்  பார்த்து
வகுத்திடுவோம்  புதுநெறியை  தொகுத்து  மகிழ்வோம் !
பொங்கு   கின்றபுதுப்    பாலின்    பூநுரையில்
பொலி கின்ற பொலந்தூய்மை அகத்தில்கொண்டு
சங்கத்  தமிழ்மரபை  சாற்றிமறைந்த  சான்றோர்களை
பொங்கல்   புத்தாண்டில்   போற்றி   மகிழ்வோம் !
வாழ்த்துகள் !
   இளையவன்–செயா ,  மதுரை