சனி, 28 செப்டம்பர், 2013

இலங்கைத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதி: வைகோ

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டம்: வைகோ











இலங்கை வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள ராஜீவ் கொலை வழக்கின் தூக்கு தண்டனைக் கைதிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை வெள்ளிக்கிழமை அவர் சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எள்ளளவும் தொடர்பில்லாத பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வாழ்க்கையின் பெரும்பகுதி சிறைச் சாலையிலேயே கழிந்துவிட்டது. அவர்கள் நிரபராதிகள் என்பதால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.
வரும் அக்டோபர் 22-ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு பல மரண தண்டனை வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதில் இவர்கள் மூவரின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பது அன்றைய தினம் தெரியவரும்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியது இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.13-வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில், அச்சட்டத்தை நீர்த்துப்போக செய்வதற்காக ராஜபட்ச அரசு களம் இறங்கியுள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காக்க தவறிய பாங்கிமூன் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இலங்கை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். காமன்வெல்த் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டுமெனில் அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றார் வைகோ.
அவரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் வரவேற்றனர்

1 கருத்து:

  1. வைகோ இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. " வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியது இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.13-வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில், அச்சட்டத்தை நீர்த்துப்போக செய்வதற்காக ராஜபட்ச அரசு களம் இறங்கியுள்ளது" என்பது அபத்தம். தேர்தல் சிறிலங்காவின் யாப்புக்கு அமையவே நடத்தப்பட்டது. தமிழ்மக்களே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். தேர்தலை மேலும் தள்ளிப்போட முடியாது போனதால்தான் இராஜபக்சே தேர்தலை நடத்தினார். பன்னாட்டு சமூகத்தின் அழுத்தமும் அதற்குக் காரணம். வைகோ போன்றவர் 13 ஆவது சட்ட திருத்தம் பற்றிய வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு