ஞாயிறு, 12 மே, 2013

தாய்மொழியைப் புறக்கணிக்கவா விடுதலை பெற்றோம்?

தாய்மொழியைப் புறக்கணிக்கவா விடுதலை பெற்றோம்?










தாய்மொழியையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் சமுதாயம்தான் வெற்றி பெற்ற சமுதாயமாகத் திகழ முடியும் என்பதை வலியுறுத்திய தேசியவாதி டாக்டர் வரதராஜுலு நாயுடு என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.
விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த பத்திரிகையாளருமான டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் நினைவாக அவரது குடும்பத்தினர் "குருகுலம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இணையதளத் தொடக்க விழாவிற்கு "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி சென்று 1908 ஆம் ஆண்டு மகாகவி பாரதியைச் சந்தித்து, அவரது ஆசியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் வரதராஜுலு நாயுடு. அண்ணல் காந்தியடிகள் தமிழகம் வந்தபோது, இரண்டு முறை வரதராஜுலு நாயுடுவின் இல்லத்தில் தங்கி இருக்கிறார் என்றால் அவரது பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
வரதராஜுலு நாயுடுவின் "தமிழ்நாடு' பத்திரிகையில் "தினமணி' நாளிதழின் முதல் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம் உதவி ஆசிரியராகவும், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. அச்சுக் கோர்ப்பவராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையை முதலில் தொடங்கியவர் அவர்தான்.
நாட்டின் விடுதலைப் போரின்போது, நாட்டு மக்களிடம் சுதந்திரத்துக்கான எழுச்சியை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில் வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் இந்து மகா சபையின் தலைவராக இருந்தார். அப்போது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு இந்தியா துணை போய் விடக் கூடாது என்பதற்காக அவர் போராடினார். இவ்வாறு மாறுபட்ட இயக்கங்களில் அவர் பணியாற்றியதை முரண்பாடு என்று கூற முடியாது. காலத்துக்கேற்ற அரசியல் நிலைப்பாடு என்றே கருத வேண்டும்.
ஏழைகள், தெருவோரக் குழந்தைகள் நலன்களுக்காக இந்த குருகுலம் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமே குடிசைப் பகுதிகள் இருக்கும். ஆனால் இப்போது சிறு நகரங்களிலும் குடிசைகள் பெருகிவிட்டன. இதற்கு காரணம் விவசாயம் செழிப்பாக இல்லாமல் இருப்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதுதான். மாற்றுத் தொழில் தேடி மாநகரங்களுக்கு வருவோர் தங்க இடம் கிடைக்காமல் வீதியோரங்களில் வசிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இந்தச் சூழலில் தேசியவாதியான வரதராஜுலு நாயுடுவின் வாரிசுகள், தெருவோரம் தவிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் மகத்தான சேவையை செய்து வருகின்றனர்.
வரதராஜுலு நாயுடு மிகச் சிறந்த தேசியவாதி என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். ஒருமுறை காந்தியடிகளை ஆங்கிலேயர் கைது செய்தபோது, காந்தியை விடுதலை செய்யும் வரை அரசுக்கு வரி கட்ட மாட்டேன் என்று வரதராஜுலு நாயுடு அறிவித்தார். இதற்காக அவரது வீடு, கார் முதலிய சொத்துகளை ஆங்கிலேய அதிகாரிகள் ஜப்தி செய்தனர். ஆனால் அந்தத் தலைவரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த விரும்பாததால், அந்தக் காரை ஏலத்தில் எடுக்க மக்களில் யாரும் முன்வரவில்லை. காரை ஓட்டிச் செல்லக்கூட ஒருவர்கூட முன்வரவில்லை. அதிகாரிகளே ஓட்டிச் செல்ல வேண்டியதாகிவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் மதிப்பை பெற்ற தலைவராக அவர் திகழ்ந்தார்.
தேசியத்தையும், சுதந்திரத்தையும், நமது கலாசார, பண்பாடுகளையும் அவர் பெரிதும் போற்றினார். அவரை பெரியார் ஈ.வெ.ரா.வின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. அவர் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந்திருக்க மாட்டார். நீதிக் கட்சியில் தீவிரமான விமர்சகராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு. அவர் பெரியாரின் இறைமறுப்புக் கொள்கையிலும் உடன்பாடு இல்லாதவர். அவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. ஆகியோரின் நண்பர் என்பதுதான் நிஜம்.
இங்கே பேசிய பலரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். பெரியவர் வரதராஜுலு நாயுடு இங்கே இருந்திருந்தால் அதை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். "தமிழ்நாடு' பத்திரிகையை நடத்தியவர் அவர். தாய்மொழியைப் புறக்கணிக்கவா நாம் சுதந்திரம் பெற்றோம் என்று கேள்வி எழுப்பி இருப்பார்.
தேசியப் போராட்டத் தலைவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் அல்லர். தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்கள். ஆங்கிலேயரையே இவர்களது ஆங்கிலப் புலமையால் வியப்பில் ஆழ்த்தியவர்கள். அவர்கள் ஆங்கிலேயரை விரட்ட, ஆங்கிலேய அடிமைத் தளையை அறுத்தெறிய ஆங்கிலம் படித்தார்கள். இப்போது நாம் ஆங்கிலேயர்களுக்கு ஊழியம் செய்வதற்காக ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைப் படிப்பது என்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானது. ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்பதல்ல எனது வாதம். தமிழ் தெரியாமல் ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்.
இன்று பெருகி வரும் பாலியல் பலாத்காரங்களும், வன்முறைகளும் ஒழிக்கப்பட வேண்டுமானால் நமது பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நமது குடும்ப உறவுகள் வலிமைப் பெற வேண்டும். இறையுணர்வு, ஒழுக்கம் போன்றவை பள்ளியிலிருந்து வரையறுக்கப்பட வேண்டும். போதிக்கப்பட வேண்டும்.
அதேபோல் வறுமை என்பது ஒழிக்க முடியாதது அல்ல. ஒவ்வொருவரும் அவரவர் வசிக்கும் தெருவில் யாரும் பட்டினியோடு உறங்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தினால், வசதி படைத்த ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் வறுமை என்பது ஒழிந்துவிடும். கல்வி இன்மையும் ஒழிந்துவிடும்.
அந்த வகையில் ஏழைக் குழந்தைகளுக்கு, தெருவோரக் குழந்தைகளுக்கு, நலிந்த பிரிவினருக்குக் கல்வி அளிக்கும் உன்னத நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் குருகுலம் அறக்கட்டளையின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன் என்றார் வைத்தியநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக