வியாழன், 17 நவம்பர், 2011

அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே; மரங்கள் நடுவதல்ல என்கிறார் விக்கிரமபாகு


வன்னியில் தமிழர்களைக் கொன்றொழித்து; அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே; மரங்கள் நடுவதல்ல என்கிறார் விக்கிரமபாகு
news
செய்த பாவத்துக்குப் புண்ணியம் தேடி அலையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால்,  உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கட்டும். அதுவே அவர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரும், நவசமசமாஜக் கட்சியின் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.  "பாவபுண்ணியம் தேடி மரம் நடுவது போன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் பரிகாரம் வழங்கவேண்டும். ஏகமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு சிறந்த பரிகாரமாக அமையும்''   என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் மரம் நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக  உதயனுக்குக் கருத்துத் தெரிவித்த விக்கிரமபாகு கருணாரத்ன, வன்னி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது மட்டுமன்றி, இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டன. 
மரங்களை நடலாம் உயிர்களை மீட்க முடியுமா?
மரங்கள் நடுவதன் மூலம் இயற்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், பறிபோன எமது சகோதரர்களின் உயிரை மீட்க முடியுமா? எனவே போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப் படுத்தவேண்டும்'' என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் எண்ணெய் வளம் உள்ளது என்று ஆட்சியாளர்கள் சந்தோஷப்படுகின்றனர். மரம் நடுவதையோ நாட்டில் எண்ணெய் வளம் இருப்பதையோ நாம் எதிர்க்கவில்லை.விலைமதிக்க முடியாத தமிழ் மக்களை அறிவு வளங்களை இழந்த சோகத்தில் நாம் உள்ளோம். ஆனால் அதைப் பற்றிக் கவனம் செலுத்த இங்கு எவரும் இல்லை. வன்னியில் இறுதிப் போரில் எண்ணுக்கணக்கற்ற மனித உயிர்கள் மட்டுமன்றி, மிருகங்களும் கொல்லப்பட்டன;  இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டன. மரங்களை நடுவதன் மூலம் இயற்கையை கட்டியெழுப்பலாம். இழந்த உயிர்களை நாம் மீட்க முடியுமா? முடியவே முடியாது.இறுதிப் போரில் புலிகள் மட்டும் கொல்லப்படவில்லை. பொதுமக்களும் கொல்லப்பட்டனர். எனவே, கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப் படுத்தவேண்டும். இத்தினத்தில் உயிர்நீத்த படையினர் உட்பட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தலாம் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக