(தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி – தொடர்ச்சி)

குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு

தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எசுஎசு மாணவர் பிரிவான அ.பா.மா.அ. (ஏபிவிபி) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அன்புத் தோழர் தமிழ்நாசர் தாக்கப்பட்டதை அறிவீர்கள். அப்பொழுது  குருதிக் காயத்தோடு அவரது மருத்துவமனைப் படமும் கண்டு நானும் தோழர்களும் பதறிப் போனோம்.

சப்தர்சங்கு மருத்துவமனையில் காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பி வந்ததும் தொலைபேசி வழி அவர் தெரிவித்தவை வருமாறு:

ச.நே.ப.(J.N.U.) மாணவர் சங்க அலுவலகத்தில் ‘நூறு பூக்கள்’ (100 FLOWERS) என்ற குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பிப்பிரவரி 19 இரவு ஒரு திரைப்படம் காட்டத் திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் அவ்வப்போது இப்படி முற்போக்கான படங்கள் திரையிடுவது வழக்கம்தான். அ.பா.மா.அ. (ஏபிவிபி) உறுப்பினர்கள் இதைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சங்க அலுவலகத்துக்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அலுவலகத்தில் மாட்டியிருந்த தந்தை பெரியார் படத்தையும் மற்ற முற்போக்காளர் படங்களையும் உடைத்து நொறுக்கி விட்டு, வெறுப்பு முழக்கங்கள் (HATE SLOGANS) எழுப்பினார்கள். வெளியே திரண்ட நூறு பூக்கள் மாணவர்களில் இருவரை அடித்து விட்டார்கள். செய்தி புலனம் வழியாகப் பல்கலையில் பரவ, நாங்கள் குழுக்குழுவாக அங்கே சென்றோம். நூறு பூக்கள் மாணவர்களை அ.பா.மா.அ. (ஏபிவிபி) ஆட்கள் அடித்து சட்டை எல்லாம் கிழிந்திருந்தது. 

காவல்துறை அங்கு வந்து விட்டது ஆனால் அவர்கள் அனைவரும் வெளியில்தான் இருந்தார்கள். சங்க அலுவலகத்துக்குள் மிகவும் அருவருப்பான வெறுப்புக் கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே இருந்த புகைப்படங்களில் மார்க்குசு, இலெனின், பெரியார், சோதிபா புலே, சந்திரசேகர் ஆசாத்து இவர்களின் படங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டார்கள்.

அவர்கள் உள்ளே இருந்து கொண்டு அந்த வெறுப்புக் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான ஒருவித கெட்ட வார்த்தைகளால் ஆன முழக்கங்கள் அவை. அவர்களில் பெரும்பாலார் பிஏ படிக்கின்ற மாணவர்களாக இருக்கிறார்கள். இப்போது புதிதாக வந்திருக்கிறார்கள் எம்ஏ, பிஎச்டி படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இது போன்று பிஏ படிக்கின்ற மாணவர்களை வைத்துதான் பிற்போக்கு இந்துத்துவ அரசியல் செய்கின்றார்கள்.  

சரி, இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே துணை வேந்தரிடம் புகார் அளிப்போம் என்று சொல்லி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். அப்போது  அவர்களும் நமக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டே அந்தக் கதவை நோக்கி நடந்து வருகின்றனர்.

நூறு பூக்கள் குழுவினர் இன்றைக்கு உறுதியாக அந்த அலுவலகத்தில் அந்தப் படத்தை ஓட்டிக் காட்டுவோம், புகார் நாளைக்குக் கொடுப்போம் என்று சொன்னதால் நாங்கள் திரும்பி வருகிறோம் காரணம் அவர்கள் மாணவர் சங்க அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என்று சொல்லி நாங்கள் அனைவரும் திரும்பி வருகிறோம் அப்படித் திரும்பி வந்த குழு அந்த அலுவலகத்தில் படத்தை ஓட்டுகிறது. அங்கு உள்ளே படம் ஓடிக் கொண்டிருக்கிறது நாங்கள் சிலர் வெளியில் நின்று கொண்டிருந்தோம் ஒருவேளை அந்தக்  கும்பல் திரும்பவும் வந்து ஏதேனும் குழப்பம் செய்து விடக் கூடாது. அப்படிச் செய்தால் அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிப் பேர் நாங்கள் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறோம்.

அப்படி நின்று கொண்டிருக்கிற போது அந்தக் கும்பல் எங்களைக் கண்காணித்துத் தகவல் திரட்ட தொடங்கி விட்டது  அதன்பிறகு பிறகு 15 முதல் 20 பேர் உள்ளே கடுமையான முறையில் நுழைகிறார்கள். நீங்கள் இப்படி நுழையக் கூடாது, இதற்கு முன்பே பல பொருட்களைச் சேதப்படுத்தி விட்டீர்கள் என்று சொல்லி நாங்கள் அந்த கும்பலைத் தடுக்கிறோம் அப்போது ஒரு தள்ளுமுள்ளு நடைபெறுகிறது அந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முரட்டுத்தனமாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள் 

அப்படி அவர்கள் உள்ளே நுழைகிற போது உள்ளே சுமார் 20 மாணவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒரு பதினைந்து பேருக்குக் குறைவில்லாமல் இருப்பார்கள். அந்தக் கும்பல் அங்கு கையில் கிடைக்கின்ற கம்பு குச்சி, கிடைக்கின்ற  மற்ற பொருட்களைக் கொண்டு மாணவர்களை அடிக்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாக ஒவ்வொரு மாணவரையும் இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கி விட்டனர். பிறகு ஒரு மாணவரைப் பலர் சேர்ந்து அடிக்க தொடங்கி விட்டனர்.

அப்போது எதிர்த்தரப்பில் டெல்லி காவல்துறை போல் ஏறத்தாழ 10 பேர் சீருடையல்லாத உடையில் வந்திருந்தார்கள். நீங்கள் யார் என்று நாங்கள் விசாரித்தோம். நீங்கள் காவல்துறையா என்று கேட்டோம். எதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. வாயையே திறக்கவில்லை. அவர்கள் அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையை நாங்கள் தடுக்கிறோம் என்கிற பெயரில்  அடித்துக் கொண்டிருந்த அ.பா.மா.அ. (ஏபிவிபி) கும்பலைத் தடுக்காமல்  நம்மை மட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்கள் –  அப்போதுதான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெரியார் படத்தை யார் உடைத்தது என்று கேட்டோம்.

நாங்கள்தான் உடைத்தோம், அப்படித்தான் உடைப்போம் என்று சொல்லி அந்தக் கும்பலில் ஒரு ஆறு ஏழு நபர்கள் சுற்றி  அடிக்கத் தொடங்கி விட்டார்கள் அப்படி அடிக்கிற அந்க்த கும்பலில் ஒருவன் ஏதோ ஒரு பொருளை கொண்டு என்னை அடித்து விட்டான். அது என்ன என்று அப்போது என்னால் கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்துதான் கவனித்தேன் தலையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அந்தக் கும்பல் நம் பசங்களை இழுத்து அடித்துக் கொண்டிருந்த போது, நாம் அவர்கள் மீது அடி விழாதபடி பாதுகாத்துக் கொண்டு வருவதில் கவனமாக இருந்தோம். அப்படித்தான் இது  நடந்து கொண்டிருந்தது. சரி, நம் தலையில் இரத்தம் வந்து கொண்டிருக்கிறது, வெளியில் நிற்போம் சிறிது நேரம் என்று சொல்லி அங்கு இருந்த காவல்துறையின் வண்டி அருகே நின்று கொண்டிருந்தேன். ஒரு பத்து நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொண்டு மறுபடியும் அங்கே சென்று மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நின்று கொண்டிருந்த போது –  அப்போது அந்தக் கும்பல் என்னைப் பார்த்து அவன் அங்கேதானடா நிற்கிறான் என்று சொல்லி 20-25 பேர் தாக்கத் தொடங்கி விட்டனர்.

அந்த வேளையில் மருத்துவ ஊர்தி(ஆம்புலன்சு) வருகிறது. நான் உட்பட இரண்டு நண்பர்கள் அந்த மருத்துவ ஊர்தியில் ஏறுகிறோம் – மருத்துவமனை செல்வதற்காக. அந்தக் கும்பல் மருத்துவ ஊர்தியைச் சுற்றி நின்று கொண்டு சாத்தப்பட்ட கதவுகளைத் தட்டித் தட்டித் திறக்க முயற்சி செய்வதும் சன்னல் வழியாகக் கைகளை நீட்டி  உள்ளே இருந்த எங்களை அடிப்பதுமாக அவர்கள் மொழியில் மிரட்டல் விடுத்துக் கொண்டே இதைச் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் மூவரையும் அந்த வண்டியிலிருந்து வெளியில் இழுக்க முயற்சிக்கிறார்கள். அதன் பிறகு அந்த மருத்துவ ஊர்தி ஓட்டுநரிடம் வேகமாகச் செல்லுங்கள் என்று சொல்லி நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம் மருத்துவமனைக்கு. 

இதில் இரண்டு விடயம் இருக்கின்றது தோழர். ஒன்று இது போன்ற தாக்குதல் அனைத்து மாணவர்கள் மீதும் நடைபெறுவது, நாம் அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புக் காட்டுகிற போது தாக்குதல் இன்னும் மூர்க்கமாகிறது.  குறிவைத்துத் தாக்குகிறார்களா என்று கேட்டால், அந்த முடிவுக்குதான் வர வேண்டி உள்ளது. காரணம் தமிழகத்தில் வேங்கைவயலில் நடந்த சாதி வன்கொடுமை குறித்து நாங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே முழக்கமிட்டு எங்களுடைய ஆதரவை அந்த மக்களுக்குக் கொடுத்திருந்தோம். பிறகு இட ஒதுக்கீட்டுச் சங்கம் (Reservation Clun) என்று இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். 

நாம் எதிர்ப்புக் காட்டும் போது  அந்தக் கும்பல் சொல்கிறது: “தமிழ்நாடு, கேரளா, நீங்கள் எல்லாரும் சிறுபான்மை நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? நாங்கள்தான் இங்கு பெரும்பான்மை நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.” இப்படிச் சொல்வதும் இப்படித் தாக்குதல் தொடுப்பதும் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிற ஒன்றுதான் இது.

இரண்டாவது விடயம் பி.ஒ.நி. / பிபிசி ஆவணப்படம் திரையிடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது இதே அ.பா.மா.அ. (ஏபிவிபி) கும்பலைச் சார்ந்தவர்கள் மாணவர்கள் மீது கல் எறிந்தார்கள். அப்படிக்  கல்லைக் கொண்டு எறிந்தது மட்டுமல்லாமல் அந்த திரையிடலுக்கு வந்து சென்ற மாணவர்கள் அனைவரையும் இழுத்து வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாக்குதலில் நம் தமிழ் மாணவர் ஒருவர் – உடலில் சிக்கல் கொண்ட ஊனமுற்ற மாணவர் ஒருவர் – உள்ளூர இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவர் பெயர் பிரவீன்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அப்போதே நாங்கள் துணைவேந்தருக்குப் புகார்க் கடிதம் ஒன்று எழுதினோம். இப்போதைய து.வே.(விசி)  சாந்திசிரீ துளிபுடி பண்டிதர் ஆவார். அவர் தன்னைத் தமிழ் என்று சொல்லிக் கொள்வார். அவருடைய தாய் தந்தையில் ஒருவர், தமிழ் ஒருவர் தெலுங்கு. இங்கு அனைவரிடத்திலும் வணக்கம் என்று சொல்லித்தான் தன்னுடைய பேச்சையே தொடங்குவார். நானும் தமிழ்தான் என்று சொல்வார். அதற்காகவே அந்தப் புகாரில் தாக்குதலுக்கு உள்ளான நாங்கள் தமிழ் மாணவர்கள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தோம். அதில் 25 பேர் கையெழுத்திட்டே அனுப்பி இருந்தோம். அந்தக் கடிதத்தில் இதை முக்கியமாகக் குறிப்பிட்டு இருந்தோம். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதுபோன்று திரையிடல் அன்று அ.பா.மா.அ. (ஏபிவிபி)கும்பல் கல் எறிந்து விட்டார்கள். கல் எறிந்து தாக்குதல் நடத்திய கும்பல் எங்கள் முன்புதான் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை  தாக்குதல் நடத்திய அந்தக் கும்பலின் மீது நீங்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் எங்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருப்பதாக நாங்கள் கருத முடியும் என்று, 25 பேர் கையெழுத்திட்டே இந்தப் புகார்க் கடிதத்தை அவருக்கு அனுப்பினோம். அந்தப் புகார்க் கடிதம் குறித்து இதுவரை எவ்விதப் பதிலும் எங்களுக்கு வரவில்லை. அந்தப் புகார்க் கடிதம் குறித்துப் பேசுவதற்கு எங்களுக்கு இதுவரை நேரங் கூட கொடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் இப்படி ஒரு தாக்குதல் மறுபடியும் நடைபெற்று இருக்கிறது.

மாணவர் சங்கம் எங்களுடன்தான் நிற்கிறது. இந்தச் சிக்கலில் இந்த சூழலில் நேற்றைக்குத் தமிழகத்தைச் சேர்ந்த நா.உ.(எம் பி) செந்தில்குமார் வந்திருந்தார்.  இந்தத்  தாக்குதல் கேள்விப்பட்டு அப்படி நா.உ.(எம் பி)  வந்திருக்கிற போது பெரியார் படம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.  அந்தப் படத்தைச் சங்கத் தலைவர்,   நான் உட்பட அனைவரும் சேர்ந்துதான் அதை உடைத்த இடத்தில் மாட்டினோம்.  

பிறகு நா.உ.(எம் பி)  செந்தில்குமார் அவர்கள் வந்திருந்ததைக் கேள்விப்பட்டு து.வே.(வி.சி) அவர்கள் அழைத்திருந்தார்கள் எங்களை. அப்போது இந்தத் தாக்குதல் குறித்துப் புகார் மனு ஒன்று எழுதிக் கொடுங்கள் இதன் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது நா.உ.(எம் பி) செந்தில்குமாரிடம் கல்லூரி நிருவாகத்தினர் சொன்னார்கள்: இரண்டு தரப்பையும் உறுதியாக நாங்கள்  பார்க்க வேண்டும். தாக்குதல் நடவடிக்கை குறித்தான ஆதாரங்கள் கிட்டும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இரண்டு தரப்பினர் மீதும் புகார் இருக்கிறது என்பது போன்று  சொன்னார்கள்.  

நா.உ.(எம் பி) செந்தில்குமார் அங்கே இருக்கின்ற போதே மாணவர்கள் நாங்கள் திருப்பிக் கல்லூரி நிருவாகத்திடம் கேள்வி எல்லாம் கேட்டோம். இதற்கு முன்பே இது போன்ற தாக்குதல் குறித்துப் புகார் கொடுத்திருக்கும் பட்சத்தில் அந்தப் புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்ற போது நா.உ.(எம் பி)  அவர்கள் சொன்னார்கள்: “இப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்!”    

இறுதியில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்: இது போன்ற  தாக்குதல்களை இது போன்ற கும்பல்கள் இங்கு உள்ள மாணவர்கள் மீது நடத்துவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இதற்கு முடிவு கட்டத் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல் 107