வெள்ளி, 12 மார்ச், 2010

தலையங்கம்:வஞ்சிக்கப்படும் வஞ்சியர்...!



மகளிர் இடஒதுக்கீடு மசோதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகுதான் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அது ஒருபுறமிருக்க, ஊடகங்களில் இந்த மசோதா பற்றி கருத்துத் தெரிவிக்கும் மகளிர் பலர் ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைவதாகக் கூறுவது வேதனைக்குரிய ஒன்று.ஏதோ இதுவாவது கிடைத்ததே என்பதற்கு மகளிருக்கு சமஉரிமை அன்பளிப்போ, இனாமோ, பிச்சையோ அல்ல. நியாயமான உரிமை. உரிமையைப் பெறுவதற்குப் போராட வேண்டியவர்கள் கிடைத்ததை வைத்துக் கொண்டு சந்தோஷப்படுவதாகக் கூறுவது அவர்களது தன்னம்பிக்கை இன்மையையும், பலவீனத்தையும்தான் காட்டுகிறது. அப்படி போதும் என்கிற மனநிலை ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நமது கருத்து.கட்சி அமைப்புகளிலும், வேட்பாளர் பட்டியலிலும் சரிபாதி இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பவர்கள், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பது விதண்டாவாதம் என்று சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் விவரம் இல்லாதவர்களோ, விஷயம் புரியாதவர்களோ அல்ல. பிரச்னையை திசைதிருப்பிக் குளிர்காய விரும்புபவர்கள்.கட்சி அமைப்புகளில் பூத் கமிட்டியிலிருந்து உயர்மட்ட செயற்குழு வரை எல்லாத் தளங்களிலும் மகளிருக்கு சமஉரிமை கேட்பதன் நோக்கமே, இந்த இடஒதுக்கீடு ஆணாதிக்கவாதிகளுக்குச் சாதகமாகப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதால்தான். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அந்த மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளுக்குப் பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்போவது யார்? எல்லா அரசியல் கட்சிகளின் உயர்மட்டக் குழுக்களிலும் ஆண்களின் மேலாதிக்கமல்லவா இருக்கிறது?கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை கட்சி அமைப்புகளில் ஆண்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், கட்சியின் வேட்பாளராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் இந்த ஆணாதிக்க அரசியல்வாதிகளின் தயவை நாடித்தானே தீர வேண்டும்? அந்தக் கட்சித் தலைமையின் விருப்பு வெறுப்புகளும், ஆசாபாசங்களும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கத்தானே செய்யும்?முதலில் கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் சரிபாதியாக உறுதி செய்யப்பட்ட பிறகு இடஒதுக்கீடு பற்றிப் பேசும்போது, பெண்கள் ஆணாதிக்க அரசியல் தலைவர்களை அண்டிப் பிழைத்து வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் அவலம் இருக்காது. இல்லையென்றால், பெண் வேட்பாளர்கள் மட்டுமல்ல, அவர்களது பெண்மையேகூடக் கேவலப்படுத்தப்படும் அவலம் அரங்கேறும் வாய்ப்பு மிகமிக அதிகம்.இன்றைய நிலையில் எடுத்துக்கொண்டாலும், அரசியல் பின்னணி இல்லாத எத்தனை பெண்கள் உள்ளாட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் உறுப்பினர்களாக முடிகிறது? மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்னையில் முன்வரிசையில் இருக்கும் சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் மூவருமே தங்களது அரசியல் விலாசத்தால் அரசியலில் முன்வரிசைக்கு வந்தவர்களே தவிர, கட்சியின் கடைநிலைத் தொண்டராக இருந்து முன்வரிசைக்கு வந்தவர்களல்ல. அப்படி வந்திருந்தால் அவர்களுக்கு ஆணாதிக்கத்தின் கோரமுகம் எத்தகையது என்பது தெரிந்திருக்கும்.15-வது மக்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் 59 மகளிரில், 45 பேர் அரசியல் பின்னணி உடையவர்கள். ஏனைய 14 பேரில் 6 பேர் மட்டும்தான் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். தமிழக அமைச்சரவையையே எடுத்துக் கொள்வோம். அமைச்சர்கள் பூங்கோதை மற்றும் கீதா ஜீவனின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவர்களது கட்சிப் பணியல்ல. அவர்களது விலாசம். அமைச்சர் தமிழரசியின் பின்னணி அவரது கணவர் ரவிகுமார்தான் என்பதும், தனது மதுரை மேற்கு ஒன்றிய வார்டு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அவர் தன் மனைவியைப் போட்டியிட வைத்து அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதும் தெரியாத விஷயமல்ல.இந்தியா முழுவதும் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. அரசியல் கட்சிகளின் அமைப்பில் மாறுதல் ஏற்படுத்தப்படாமல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளிலும் இந்த நிலைமைதான் ஏற்படப்போகிறது. ஒன்று தனது மனைவி மக்களை மகளிருக்கான ஒதுக்கீடைப் பயன்படுத்தி வேட்பாளராக்கி மகிழ்வார்கள். இல்லையென்றால், தங்களது கைப்பாவைகளை வேட்பாளராக்கித் தங்களது விரலசைப்புக்கு ஏற்பச் செயல்பட வைப்பார்கள்.ஏதோ மூன்றில் ஒரு பங்காவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடையும் மகளிர், இரண்டு வகையில் ஏமாற்றம் அடைய இருக்கிறார்கள். முதலாவதாக, இவர்கள் நினைப்பதுபோல அதிகாரப் பகிர்ந்தளிப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டாவதாக, ஆணாதிக்க அரசியல்வாதிகளின் மேலாதிக்கம் மேலும் அதிகரிக்கும்.விலைவாசி ஏற்றம் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களை விழி பிதுங்க வைத்திருக்கிறது. அவர்களது ஆத்திரம் நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் மத்திய, மாநில ஆட்சிகளின் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு தரும் மசோதாவை நிறைவேற்றி, ஏதோ பெரிய சரித்திர சாதனை செய்துவிட்டதுபோல வெளிச்சம்போட்டுக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள். திசைதிருப்பும் யுக்திதான் இந்த மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவே தவிர, மகளிரின் சமஉரிமைக்கான உத்தரவாதமல்ல. ஏமாந்து விடாதீர்கள்!
கருத்துக்கள்

யார் என்ன சொன்னாலும் அரசியல் வாதிகளின் மனைவி, தாய்,தமக்கை,தங்கை,ஆசைநாயகி முதலானோரே பெண்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னிலைப் படுத்தப்படுவார்கள். இதைத் தவிர்க்க என்ன செய்ய இயலும்? இத்தகைய பெண்கள் மூலம் அவர்களை அண்டியுள்ள அடுத்த நிலைப் பெண்கள் பயனடையலாமே தவிர நேரடியாக அடித்தள நிலையிலுள்ள பெண்கள் இட ஒதுக்கீட்டில் பயன் பெற இயலாது. கட்சிக் கொத்தடிமைகளில் இருந்து மக்கள் விடுபட்டால்தான் ஓரளவேனும் பெண்கள் இட ஒதுக்கீட்டால் பயனுறுவர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக