செவ்வாய், 9 மார்ச், 2010

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...



சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா விவகாரத்தைத் தொடர்ந்து, கல்கி ஆசிரமம் குறித்தும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பாகக்கூட பல்வேறு காலகட்டங்களில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட சாமியார்கள் குறித்து சர்ச்சைகள் உருவாகியுள்ளன.திருவள்ளுவர் காலத்திலேயே இத்தகைய போலிச் சாமியார்கள் இருந்த காரணத்தினால்தான், அவர் "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்'-என்கிற குறட்பாவை இயற்றியுள்ளார். பொதுவாக, சாமியார்கள் என்று சொன்னால், துறவிகள் என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள். ஓர் இடத்தில் நில்லாமல், பல இடங்களுக்குச் சுற்றித் திரிந்து, ஆன்மிக அனுபவம் பெறுபவர்களை சந்யாசிகள் என்பர். பந்தபாசங்களைத் துறந்து, பற்றற்ற நிலையில் இருப்பவரைத் துறவி என்பர்.மடங்களுக்குத் தலைமை தாங்குவோரை மடாதிபதிகள் என்றும், ஆதீனங்களை நிர்வகிப்போரை ஆதீனங்கள் என்றும், இறைவனின் தூதுவர்களாக வருவோரை அவதூதர்கள் என்றும், காடுகளில் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்வோரை ரிஷிகள் என்றும், முனிந்து ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவோரை முனிவர்கள் என்றும், பூஜை காரியங்களில் ஈடுபடுவோரை பண்டாரங்கள் மற்றும் பூசாரிகள் என்றும், அருள்வாக்கு சொல்பவர்களை சாமியாடிகள் மற்றும் அருளாளர்கள் என்றும், பல நாடுகளுக்கும் சுற்றித் திரிந்து ஆன்மிகத்தில் ஈடுபடுவோரை பரதேசிகள் என்றும், சிவத்தில் மூழ்கி சித்து கைவரப்பெற்றவர்களைச் சித்தர்கள் என்றும், சாத்விக குணம் ஓங்கப் பெற்றவர்களை சாதுக்கள் என்றும், குருதேவரின் அடியொற்றிச் செல்பவரை சீடர்கள் மற்றும் அடிகள் என்றும் இப்படி அவரவர் அணுகுமுறைகளுக்கேற்ப சாமியார்களுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆனால், பொதுவாக காவி கட்டிய அனைவரையுமே சாமியார்கள் என்றுதான் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.பொதுவாக, இந்து மதம், அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு விதமான வாழ்க்கை முறைகளை வழிவகுத்துள்ளது. மனிதனுடைய வாழ்க்கையை நான்கு பிரிவுகளாக்கி நம்முடைய பெரியோர்கள் வர்ணாசிரம தர்ம முறையை வகுத்துள்ளனர். இதில் வர்ணம் என்பது சமூக அமைப்பு குறித்த விளக்கமாகும். ஆசிரமம் என்பது மனித வாழ்க்கையின் நான்கு பருவங்களாகும். மனித வாழ்க்கையில் கல்வி கற்கும் பருவத்தை பிரம்மச்சரியம் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு பிரம்மச்சரிய நியதிகள் உண்டு. பிறகு "கிரகஸ்த' அதாவது இல்லறம் என்கிற பருவத்துக்கு வருகிறார். இதற்கு இல்லற நியதிகள் உண்டு.ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்து பிறகு வனப் பிரஸ்த வாழ்க்கைக்கு வருகிறார். இதற்கான வனப் பிரஸ்த நியதிகள் உண்டு. வனப் பிரஸ்த வாழ்க்கைக்குப் பிறகு அவர் இறைவனை நோக்கிச் செல்கிற சந்யாச அல்லது துறவு நிலைக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்.எந்த இடத்திலும், துறவறம் மட்டுமே வீடுபேறுக்கு வழி என்று இந்து மதம் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், இல்லறம் குறித்து வெகுசிறப்பாக நமது சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய்க்கு முதலிடத்தை வழங்கியுள்ளனர். தாய்க்குப் பிறகு தந்தை மிகவும் வணக்கத்துக்குரியவராகக் கருதப்படுகிறார். தந்தைக்குப் பிறகு குருநாதர் போற்றுதலுக்குரியவராக உள்ளார். நமது நாட்டில் ஏராளமான குரு பரம்பரைகள் உள்ளன. குருவுக்குப் பிறகுதான் தெய்வம் என்கிற நிலையை நமக்கு இந்து சமயம் உருவாக்கித் தந்துள்ளது.தமிழகத்தின் ஒரு பகுதியான சேர நாட்டில், அதாவது கேரளத்தில் காலடி என்கிற ஊரில் ஸ்ரீஆதிசங்கரர் தோன்றி, அத்வைத தத்துவத்தை அருளினார். தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தோன்றிய ஸ்ரீராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவத்தை அருளினார். தமிழகத்துக்கு அருகில் உள்ள கர்நாடகத்தில் தோன்றிய ஸ்ரீமாத்வர் துவைத தத்துவத்தை அருளினார். இப்படி தென்னகத்தில் உருவாகிய இந்து சமயத் தத்துவங்கள், உலகம் முழுவதும் பரவின. தமிழகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரது வாழ்க்கை ஆன்மிகவாதிகளுக்கு நல்ல வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.சீர்காழியில் பிறந்து மூன்று வயதில் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் அயல்மத தாக்கங்களில் இருந்து சைவத்தையும் தமிழையும் காத்தார். இரண்டு வயதில் சிவனஞானபோதம் அருளினார் மெய்கண்டார். திருச்செந்தூர் முருகன் அருளால் ஐந்து வயதில் கந்தர்கலி வெண்பா பாடினார் குமரகுருபர சுவாமிகள். இவர்களின் அடியொற்றி தாயுமானவர் சுவாமிகள், அருணகிரிநாதர், வள்ளலார் என்று ஏராளமான அருளாளர்கள் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபாகத் தமிழகத்தில் தோன்றி, ஆன்மிகம் வளர்த்தனர். மக்களுக்கு நல்வழி காட்டினர்.சமீபத்தில் கூட தமிழகத்தில் ஏராளமான மகான்கள் இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் அவதரித்துள்ளனர். நெல்லை பத்தமடையில் சுவாமி சிவானந்தா அவதரித்தார். தற்போது உலகெங்கும் மகரிஷியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ரமணர், மெüன குருவாகத் திருவண்ணாமலையில் அமர்ந்து ஞானத்தை வழங்கியவர். இப்படி ஏராளமான ஆன்மிகவாதிகள் தமிழகத்தில் தோன்றி, உலக குருவாக உயர்ந்துள்ளனர்.தமிழகத்தில் திருவண்ணாமலையில் பிறந்து, சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, தனது 32 வயதுக்குள்ளாக புகழின் உச்சத்தை அடைந்தவர் நித்யானந்தா. இவரது தியான வகுப்புகளாலும், ஆன்மிகச் சொற்பொழிவுகளாலும், ஆன்மிக எழுத்துகளாலும் ஏராளமானோர் பயனடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.திடீர் சறுக்கலாக இந்தப் படக் காட்சிகள் வெளியாகி அவரது பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்பார் அருள்பிரகாச வள்ளலார். நித்யானந்தா விஷயத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சி அல்ல. தகர்ந்துவிட்ட பக்தர்களின் நம்பிக்கைதான், அதிர்ச்சி அலையை எழுப்பியது.நித்யானந்தா தாராளமாக எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம். ஆனால், காவி உடை தரித்து, தன்னை பரமஹம்ஸராக வெளியில் சித்திரித்துவிட்டு, உள்ளே இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை இந்து சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான், இந்து அமைப்புகள்கூட நித்யானந்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.பிற மதங்களிலும் இத்தகைய போலிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த செய்திகளையோ, படக்காட்சிகளையோ ஒளிபரப்புவதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. நடந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நியாயம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்.ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி. திவாரி சம்பந்தப்பட்ட படக் காட்சிகள் ஒளிபரப்பான அடுத்த அரை மணி நேரத்தில் திவாரி தரப்பில் தடை உத்தரவு பெற முடிந்தது. ஆனால், நித்யானந்தா விஷயத்தில் அத்தகைய தடை உத்தரவு பெற முடியாதது ஏன்? அரசியல்வாதிக்கு ஒரு சட்டம், ஆன்மிகவாதிக்கு வேறொரு நியதியா?நீதிமன்றமோ, அரசாங்கமோ இதுவிஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபாசக் காட்சிகளைத் தடை செய்து இருக்க வேண்டும். அப்படி நடக்காதது வேதனைக்குரியது. இதன் காரணமாக, குழந்தைகள், குடும்பப் பெண்கள் முகம் சுழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இனி இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படாதவாறு, தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை முறை ஏதேனும் ஒன்றை அமல்படுத்த வேண்டும்.நித்யானந்தா இல்லறத்தில் ஈடுபட விரும்பி இருந்தால், தாராளமாகத் துறவறத்தில் இருந்து விடுபட்டு, திருமணம் செய்து கொண்டிருக்கலாம். உலகப் புகழ் பெற்ற பெஜாவர் சுவாமிகள், தனது திருமடத்தில் முக்கிய சந்யாசியாக இருந்த இளம் துறவி ஒருவர், இல்லற வாழ்க்கையில் ஈடுபட விரும்பியபோது அதற்கு அனுமதி கொடுத்து, அந்த இளம் சந்யாசியும் துறவறத்தைவிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வருகிறார்.யோகம், தியானம், ஆசனம், வாசியோகம் என்கிற மூச்சுப் பயிற்சி ஆகியவை நமது இந்து சமயம் உலகுக்கு வழங்கியுள்ள அருட்கொடையாகும். இப்போது இந்தக் கலைகளை நவநாகரிக உலகைச் சார்ந்த இளைஞர்களைக் கவரும் வகையில் பாடத்திட்டங்களாக வடிவமைத்து ஒரு கார்ப்பொரேட் கலாசாரமாகப் பன்னாட்டு நிறுவன நிர்வாக முறையில் சில குருநாதர்கள் போதிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் தவறேதும் இல்லை. இத்தகைய ஆன்மிக போதனைகள் இன்றைய இளைஞர்களுக்கு அவசியமானதாகும்.சுவாமி விவேகானந்தர் தொண்டும், துறவும் நமது தேசிய லட்சியங்கள் என்று அறிவித்து ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்து ஏராளமான இளம் துறவிகளை உருவாக்கியுள்ளார். ஸ்ரீராமகிருஷ்ணரும், அன்னை சாரதா தேவியும் லட்சியத் தம்பதிகளாக இருந்து விவேகானந்தர் போன்ற துறவிகளை உருவாக்கியுள்ளனர். திருமணம் செய்து கொண்டும் சாமியாராக இருக்கலாம் என்பதற்கு ராமகிருஷ்ணரின் வாழ்க்கை முன்னுதாரணமாகும்.விவேகானந்தரிடத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி, "உங்கள் மூலம் உங்களைப் போல ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்' என வேண்டியபோது, "நீ ஏன் என்னையே உனது குழந்தையாக ஏற்றுக் கொள்ளக்கூடாது? நான் இப்போதே உன்னைத் தாயாக ஏற்கிறேன்' என்று பதில் கூறி தனது துறவு மற்றும் பிரம்மச்சரிய நிலைக்கு மகுடம் சூட்டினார்.ஆண்களும், பெண்களும் இணைந்து யோகக் கலை பயிலும்போது இத்தகைய அவலங்கள் ஏற்படுவது இயற்கையே. எனவே தான் குருதேவர் ராமகிருஷ்ணர், பெண்கள் புழங்கும் சமையல் அறைக்குள் பிரம்மச்சாரிகள் நுழைந்தால் அவர்களை அறியாமலேயே அவர்கள் மீது கறைபடிய வாய்ப்புண்டு என நல்ல உதாரணங்களைக் கூறி துறவிகளை நெறிப்படுத்தினார்.நித்யானந்தாவை இந்து சமய உணர்வாளர்களே கண்டிக்கின்றனர். அதே நேரத்தில் தமிழக முதல்வரே கண்டிக்கும் அளவுக்கு ஆபாசக் காட்சிகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கருத்துக்கள்

நித்யானந்தன் மீது வழக்கு தொடுக்கவும் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கவும் போலிச் சாமியார்களை உலகிற்கு வெளிப்படுத்தி அவர்களை ஒழிக்கவும் அர்ச்சுன் சம்பத்தும் அவர் சார்ந்த கட்சியும் ஈடுபடட்டும். இந்து சமயத்திற்குக் கறை ஏற்படுத்துபவர்களைப் பாதுகாக்காமல் கறைகளைக் களையவும் கறை ஏற்படுத்தியவர்களைக் களையவும் முயலட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/9/2010 2:44:00 AM

கண்டிக்காவிட்டால் தவறாக எண்ணுவார்கள் என்ற உணர்வும் சாமியார் தரப்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பும் கொண்டு எழுதியுள்ளார் போலும். ஒரு மாபெரும் குற்றச் செயலைச் செய்தவனைக் கண்டிக்கும் பொழுது அவன் தவறு செய்யவில்லையா? இவன் தவறு செய்யவில்லையா? அப்பொழுது என்ன செய்தீர்கள்? இப்பொழுது என்ன செய்தீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்பது கடுமையைக் குறைத்துத் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டதே. முதல்வரின் குடும்ப ஊடகங்கள்தாம் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் முதல் பங்கு வகித்துள்ளன .( இந்த அளவு வெளிப்படுத்தியில்லா விட்டால் மக்களிடையே எதிர்ப்பலை தோன்றாமலேயே போயிருந்திருக்கும். எனவே, அவற்றிற்குப் பாராட்டுகள்.) அவ்வாறிருக்க முதல்வரின் கண்டிப்பு என்பது ஒப்புக்குச் சப்பாணி என்பது போன்றது என்பது புரிந்தும் அவரைத் துணைக்கு அழைப்பானேன்! இவற்றை யெல்லாம் விட்டு விட்டு நித்யானந்தன் மீது வழக்கு தொடுக்கவும் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கவும் போலிச் சாமியார்களை உலகிற்கு வெளிப்படுத்தி அவர்களை ஒழிக்கவும் அர்ச்சுன் சம்பத்தும் அவர் சார்ந்த கட்சியும் ஈடுபடட்டும். இந்து சமயத்திற்குக் கறை ஏற்படுத்துபவர்களைப்

By Ilakkuvanar Thiruvalluvan
3/9/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக