செவ்வாய், 25 மே, 2010

'தமிழ் வழி மருத்துவப்​ ப​டிப்பு வேண்டும்': முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்



சென்னை, ​​ மே 24:​ மருத்துவப் படிப்பை தமிழ் வழியில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.​ இச்சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:​ தமிழ்வழி படித்தோருக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.​ 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மக்களவையில் பேசுவதற்கும்,​​ உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.​ சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாக்கிட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.​ தமிழ் ஆட்சிமொழி குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு நிர்வாகத்திலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.​ மாறிவரும் காலச்சூழலுக்கும் கணினிக்கும் ஏற்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உரிய மொழி அறிஞர்களைக் கொண்ட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்களை ஊடக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.​ இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.​ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் நாடகத்துறை இல்லை.​ நாடகத்துறை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஆய்வு நிலையில்தான் உள்ளது.​ தமிழ்த்துறையில் நாடகத்துறையை இணைப்பது அவசியம்.​ கூத்து மற்றும் நாடகப் பயிலரங்குகளை தமிழ்ப் பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும்​ புதிதாக அனுமதிக்கப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் தமிழாசிரியர்களை நியமிக்க தமிழக அரசு விதித்துள்ள தடையாணையை நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

உண்மைத் தமிழர்களின் உள்ளக்கிடக்கையை எதிரொலிக்கும் இக் கோரிக்கைளை அரசு உடனே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். செம்மொழி மாநாட்டின் பயனாகச் செந்தமிழ் எல்லா இடங்களிலும் ஆட்சி செலுத்தும் நிலை உருவாக வேண்டும். தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே தலைமை பெற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக