புதன், 26 மே, 2010

மதுரை கம்பன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பாரதி விழா நடத்த சாலமன் பாப்பையா ரூ.​ 1 லட்சம் நிதி



மதுரை, ​​ மே 25:​ மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பாரதி விழா நடத்துவதற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.​ ​ இதன் மூலம் பாரதியார் குறித்த பேச்சு,​​ கவிதைப் போட்டிகள் பெண்களுக்கு நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.​ ​ மதுரை கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ இதில் பேசிய கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா,​​ தனது மேடைப் பேச்சின் பொன்விழாவைக் குறிக்கும் வகையிலும் ​(50 ஆண்டுகள்),​​ தனது தமிழ்ப் பணிக்குத் தூண்டுதலாக இருந்த பாரதிக்கு காணிக்கை செலுத்தும் வகையிலும் பாரதி விழாவை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடத்திட ரூ.1 லட்சம் நிதி தனது சொந்தப் பொறுப்பில் அளிப்பதாக அறிவித்தார்.​ ​ அதற்கான காசோலையை கம்பன் கழக அறக்கட்டளைத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன்,​​ செயலர் ஆர்.சொக்கலிங்கம்,​​ பொருளாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்.​ ​ பாரதி விழா நடத்தும் திட்டத்தில் பிற அமைப்புகளும் பங்கேற்கலாம் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்தார்.​ ​ இதையடுத்து இத்திட்டத்தில் விஸ்வாஸ் கலைப் பண்பாட்டு அறக்கட்டளை தன்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறது என அறக்கட்டளை அறங்காவலர் சங்கர சீத்தாராமன் அறிவித்தார்.​ ஆண்டுதோறும் டிசம்பரில் நடத்தப்பட உள்ள பாரதி விழாவை முன்னிட்டு பெண்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறினார்.​ ​ மதுரை கம்பன் அறக்கட்டளை ஏழாம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்,​​ தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மாதம்தோறும் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும்,​​ அதற்கு தினமணி துணை நிற்கும் எனக் கூறியிருந்தார்.​ ​ இந் நிலையில்,​​ கம்பன் கழக நிறைவு விழாவில் பேசிய சாலமன் பாப்பையா பாரதி விழாவைத் தொடர்ந்து ஒளவையார்,​​ இளங்கோவடிகள் எனத் தமிழ் விழாக்கள் தொடர்ந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பாராட்டுகள்! தொண்டு தொடர வாழ்த்துகள்! பாரதிதாசனுக்கும் சங்கப் புலவர்களுக்கும் தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் விழாக்கள் நடத்திட வேண்டுகிறேன். திங்கள் ஒரு புலவர் விழா என நடத்தித் தமிழ்ப்பரப்புதலுக்கும் காத்தலுக்கும் துணை நிற்க வேண்டுகிறேன். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக