புதன், 26 மே, 2010

செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை


செம்மொழி மாநாடு​​ ​​கட்சி மாநா​டாக காட்சி அளித்து விடக்​கூ​டாது: முதல்வர் எச்சரிக்கை



சென்னை, ​​ மே 25: கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாடு,​​ தி.மு.க.வின் கட்சி மாநாடாகக் காட்சி அளித்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.​ ​​ இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:​ ​​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.​ அம்மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்கி ஆய்வு செய்தேன்.​ ​​ மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை வகைப்படுத்தி,​​ முறைப்படுத்தி செய்திட அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ அந்தக் குழுக்களுடன் நான் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினேன்.​ மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அமைச்சர்களும்,​​ அதிகாரிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.​ ​​ பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரமாண்டமான பந்தல் மிக அழகாக அமைக்கப்பட்டு வருகிறது.​ பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட 28 ஆய்வரங்கங்களும்,​​ வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.​ ​​ வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல்,​​ காலமெல்லாம் நினைவுகளிலிருந்து அகலாத கருத்துக் காட்சியாகவும் அமையும் விதத்தில் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.​ ​பழந்தமிழர் பண்பாடு,​​ நாகரிகம்,​​ தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.​ ​​ அதைப்போலவே,​​ ஊர்வலத்தில் செல்லவிருக்கும் ரதங்கள் காண்போரைக் கவரும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.​ இவ்வளவு மகிழ்ச்சிக்கும்,​​ உற்சாகத்துக்கும் இடையே என் மனதுக்கு வருத்தத்தைத் தருகிற காட்சியையும் நான் கோவையில் காண நேர்ந்தது.​ ​ கோவை விமானம் நிலையம் தொடங்கி,​​ வ.உ.சி.​ மைதானம் வரையிலும்,​​ இன்னும் நகரின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகள்,​​ கட்சி நிர்வாகிகளின் உருவங்கள் தாங்கிய பேனர்கள் ஆகியவை தெவிட்டும் அளவுக்கு எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன.​ ​​ துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் கோவைக்கு சென்ற நாளிலும் இதே காட்சியைப் பார்த்து,​​ கண்டித்தார் என்று அறிந்து கொண்டேன்.​ ​​ நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில்,​​ தமிழ் மொழிக்காகவும்,​​ தமிழர்களுக்காகவும்,​​ தமிழக அரசால் நடத்தப்படுகிற மாநாடு.​ அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்து விடக் கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக உள்ளேன்.​ ​​ இதை கோவை மாவட்ட தி.மு.க.வினர் அறிந்து கொள்ளாமல் உள்ளது எனக்கு வியப்பாக உள்ளது.​ ​​ தி.மு.க.​ கொடிகள்,​​ பதாகைகளுக்குப் பதிலாக,​​ பொதுமக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்,​​ சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள்,​​ மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள்,​​ பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள்,​​ புலவர்களின் ஓவியங்கள் ஆகியவற்றை அழகாக அமைக்கலாம்.​ அது எனக்கு மட்டுமல்லாமல்,​​ மாநாட்டுக்கு வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும்,​​ வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக் கூடியதாகவும்,​​ தமிழ் மொழியின் பெருமை,​​ வரலாறு,​​ பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்கும்.​ ​​ எனவே தி.மு.க.வினர் அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சரியான முறையான நிறைவான அறிக்கை! கட்சிக் கொடிகளும்பதாகைகளும் வேண்டா என்றால் மிகுதியாக வைக்க வேண்டும் என்ற அரசியல் அகராதிப்படி நடந்து கொள்ளாமல், முதல்வர் வேண்டுகோளுக்கிணங்கச் சங்க இலக்கியக் காட்சிகளை மக்கள் பார்வையில் வைக்க கட்சியினர் முன்வரவேண்டும். அதுவே முதல்வருக்குப் பெருமை தேடித்தரும். மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 2:44:00 AM

Whatever C.M may say, this conference is conducted as aparty conference at the cost of public money. Except extravaganza and mere bon fire, nothing will be achieved.

By ankandasamy
5/26/2010 12:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக