வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு
புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல்
பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது.

இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா
மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள” எனும் பாடலைக் குவைத்தினுடைய
கவிஞர் திரு.வித்யாசாகர் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசை இணையர் திருமதி. இராசலட்சுமி -திரு.செந்தில் கணேசு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

கவிஞர் திரு. வித்யாசாகர் ஏற்கெனவே தனது முகில் கிரியேசன்சு மூலம் பல பாடல்களையும் வெளியிட்டுப், பல புத்தகங்களையும் முகில் பதிப்பகம் வழியே அச்சிட்டுத், தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெருமை சேர்த்தவர். இலங்கையில் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு இலவசமாகக் கழிப்பிடம் கட்டித் தந்ததும் தமிழகத்தில் மழைநாட்களில் உதவுவதுமெனப் பல இலக்கிய-சமூகப் பணிகளிலும் மிக ஆர்வமாக பங்குகொள்வார். அண்மையில்கூட இங்கிலாந்து நாட்டில் இலண்டன் பாராளுமன்றம் கவிஞர் திரு. வித்யாசாகருக்கு “உலகத் தமிழ் அமைப்பு” சார்பாக “இலக்கியச் சிகரம்” எனும் உயரிய அருந்திறல் விருதினை வழங்கி வைத்துச் சிறப்பித்தது.
ஒரு திரைப்படப் பாடலை இத்தனைச் சிறப்போடு குவைத்தில் பல உழைக்கும் தமிழரின் முன்னிலையில் வெளியிட்டு ஒரு நல்ல படைப்பாளிக்கு அரியதொரு மேடையை அமைத்துத் தந்த குவைத்து தமிழோசைக் கவிஞர் மன்றம், அதன் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள், தொழிலதிபர் திரு.ஐதர் அலி (டிவிஎசு குழுமத்தின் நிறுவனர்) அனைவருக்கும் நன்றியை நல்கி விழா இனிதே நிறைவுற்றது.
கீழுள்ள தொடுப்புதனைச் சொடுக்கி இப்பாடலை முழுதாகக் கண்டு களிக்கலாம்.
நன்றிகளுடன்
சேவியர் தாசன், மேலாளர்
முகில் பதிப்பகம் / முகில் கிரியேசன்சு