சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர் வாசுகி கண்ணப்பன், புதுகைத் தென்றல் தருமராசன், முனைவர்  பானுமதி,  முனைவர் மணிமேகலை சித்தார்த்தர், வியாசை ஆதிகேசவர் எனப் பட்டியல் நீளும். கவிஞர்களின் உணர்வுமயமான புகழ்வணக்கம் உள்ளம் உருகச் செய்தது.
சிகரம் வைத்தாற்போல இளவரச அமிழ்தன் தன் சொந்த முயற்சியில் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படம் அமைந்தது. சிலம்பொலியாரின் 85-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய இந்தக் குறும்படம். சிவியாம்பாளையத்தையும், சிலம்பொலியாரின் ஆசிரியர்களையும் படம்பிடித்து அமிழ்தனாரின் உழைப்பை வெளிப்படுத்தியது. சிலம்பொலியாரே தன் வரலாற்றைக் கூறிய காட்சிகள் அவரை மீண்டும் காணச் செய்த மந்திரக் காட்சிகளாக விளங்கின. சுருங்கச் சொன்னால் மீண்டும் சிலம்பொலியாரைக் காணவும் அவர் நம்மிடம் நேரில் பேசுவதைக் கேட்கவும் இப் படம் வாய்ப்பு நல்கியது.
– மறைமலை இலக்குவனார் முகநூல்