சனி, 2 ஜூலை, 2011

kundrakudi adigalaar: சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார்

நினைவின் நிழல்கள் : 3 சமூகத்தைத் துறக்காத துறவி ; குன்றக்குடி அடிகளார்

மணா
பதிவு செய்த நாள் : July 1, 2011
கருத்துகள் (0) 3 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

துறவியாகி விடலாம் போலிருக்கிறது”
- இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார்.
உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அண்ணா அந்த வார்த்தையால் மனம் கசிந்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலான அரசியலை நுணுக்கமாகக் கவனித்து வந்திருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு தெரியும்.
அந்தத் தருணத்தில் தமிழ் வார இதழ் ஒன்றில் ”பெரியார் துறவு பூணுவதாக இருந்தால் எங்களுடைய மடத்திற்கு வரவேண்டும்”  என்று அவர் மீது மிகுந்த மதிப்புடன் அழைப்பு விடுத்திருந்தவர் குன்றக்குடி அடிகளார்.
எந்தவிதமான மனச் சலிப்பு பெரியாரை அந்த அளவுக்கு எழுத வைத்திருந்தது என்பதெல்லாம் தனி விஷயம். ஆனால் தோழமையுணர்வுடன் அவரை ஆன்மீகம் சார்ந்தவரான அடிகளார் அழைத்தது குறித்த செய்தியைப் படித்த போது அடிகளார் மீது மதிப்பு ஏற்பட்டிருந்தது.
அதோடு நான் முதல் முறையாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் குன்றக்குடி மடத்திற்கு மதுரையைச் சேரந்த நண்பர்கள் இருவருடன் போயிருந்தேன். அப்போது வார இதழ் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
காலை நேரம். மடத்திற்கான அன்றைய சடங்கு முறைகளை முடித்துவிட்டு அடிகளார் வரும்வரை மடத்திற்குள் முன்பகுதியில் காத்திருந்தோம். காவி உடை, தலைப்பாகை சகிதமாக வந்தார் அடிகளார். வணங்கினோம். சிரித்த முகத்துடன் இருந்தவரின் காலில் என்னுடன் வந்தவர்களும் மற்றவர்களும் விழுந்து வணங்கிய போது நான் ஒதுங்கி நின்றிருந்தேன்.
எல்லாம் முடிந்ததும் என்னை அவர் பார்த்தார்.
”அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்” என்று உடன் வந்திருந்தவர் சொன்னதும் உற்றுப் பார்த்துவிட்டுக் கடகடவென்று சிரித்துவிட்டுச் சொன்னார். ”அப்படின்னா தம்பி நம்மாளுன்னு சொல்லுங்க”
அவர் இயல்பாகச் சொன்னவிதம் நெருக்கமாக உணர வைத்தது. காலில் விழாமல் இருந்ததை ஒரு விஷயமாகப் பொருட்படுத்தாததோடு ஒருவிதமான கனிந்த அன்போடு  அவர் பேசியது வியப்பாக இருந்தது.
எனக்கு மற்ற மடங்களில் ஏற்பட்டிருந்த அனுபவங்கள் அப்படி.
பின்னால் பலத்த சர்ச்சைக்குரியவரான ஒரு மடாதிபதி சென்னைக்கு வந்திருந்தபோது மடத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் சந்திக்கப் போயிருந்தேன். கூடவே இன்னொரு பத்திரிகை நண்பர். போனதும் சட்டையைக் கழற்றாமல்  இயல்பாக உட்காருவதற்கு முன்னால் உடன்வந்த நண்பர் அவருடைய காலில் விழுந்தார். வழக்கம்போல ஓரமாக நான். நிமிர்ந்து பார்த்த மடாதிபதி ”இவரு” என்று கேட்டதும் பத்திரிகையில் என்னுடைய பொறுப்பை பற்றிச் சொன்னார் நண்பர்.
சற்று உயர்ந்த பீடம் ஒன்றில் மடாதிபதி. அவருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உட்கார்ந்தோம். சுற்றிலும் மடத்தின் பணியாளர்கள். சற்றுத் தள்ளிப் பார்வையாளர்கள். கொஞ்ச நேரம் கனத்த மௌனம்.
”சுவாமிகள்” என்று பலர் விளித்துக் கொண்டிருந்த போது இடையில் என்னைப் பார்த்ததும் – நான் ”சார் ..”  என்று அழைத்ததும் மடாதிபதி அந்தப் பொதுப்படையான விளிப்பைக் கொஞ்சம் கூட விரும்பவில்லை என்று அவருடைய இறுக்கமான முகபாவம் காட்டியது ”சார்”  என்ற பிரயோகம் என்னை அவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருந்தது.
அடுத்து பத்திரிகையின் சார்பில் பேட்டி எடுக்கும் நோக்கத்தைச் சொன்னதும் முக இறுக்கத்துடன் நான் பேசும் மொழியின் தன்மையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் எந்த சாதியச் சொல்லாடல்களும்,  அதை வெளிப்படுத்தக் கூடிய கொச்சையோ இல்லை.
நான் பேசி முடித்ததும் நிதானமாகச் சொன்னார் அந்த மடாதிபதி. ”என்னைப் பார்க்க நீங்க வந்திருக்கீங்களே..  உங்க ஆபிசில் எங்கவா பையன் இருக்கானே.. அவன் வந்திருக்கலாமே?”
மிக வெளிப்படையாக தன்னைப் பேட்டி காண்பதற்குக் கூட தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர் வந்திருக்க வேண்டும் என்று சொன்ன விதத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ”சார்.. இந்தப் பத்திரிகையில் நீங்க குறிப்பிட்ட நபரை விட சீனியர் போஸ்ட்டில் தான் நான் இருக்கேன். அதனால்தான் வந்திருக்கேன். இதை ஒத்துக்கிட்டு பேட்டி கொடுத்தா கொடுங்க. இல்லைன்னா நான் கிளம்புறேன்” என்று நான் சொன்ன அந்த அனுபவத்தைச் சாமானியமாக  மறக்க முடியவில்லை.
அதைவிட ஆச்சர்யமாக கோவில் நகரமான இன்னொரு மடத்திற்குள் போய்ப் பேட்டி எடுத்துவிட்டுத் திரும்பும் போது அந்த மடாதிபதி மதியம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம் என்று வற்புறுத்தியபோது நான் சட்டையைக் கழற்ற மறுத்ததும் ஒடிசலான உடம்புடன் இருந்த மடாதிபதி மென்மையாகச் சொன்னார்.
”தம்பீ.. என் உடம்பையும் பாருங்க.. நான் எப்போதும் சட்டையைக் கழற்றிட்டு இருக்கலையா.. நீங்க கொஞ்ச நேரம் சாப்பிடுற நேரத்தில் மட்டும் கழட்டக் கூடாதா?” என்று இரங்கலான குரலில் கேட்டதும் நினைவில் குமிழியிட்டது.
இந்த அனுபவங்களிலிருந்த நேர் எதிராகவும் நம்மை அந்நியப்படுத்தாமலும் இருந்தது குன்றக்குடி அடிகளாரின் அணுகுமுறை. அரங்கநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். ரா.பி.சேதுப்பிள்ளை, விபுலானந்த அடிகள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த இவர் நகரத்தார் அதிகமுள்ள கடியாபட்டியில் படித்ததால் அங்குள்ள பேச்சுமொழி இவருடன் ஒட்டிவிட்டது.
தருமபுர ஆதீன மடத்திற்குச் சொந்தமான தமிழ்க் கல்லூரியில் படித்த இவருடைய துறவு வாழ்க்கை அங்கே ஆரம்பித்து தெய்வசிகாமணி  அருணாசல தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் ஆகி குன்றக்குடி மடத்தில் 45ஆவது சன்னிதானமாகப் பொறுப்பேற்றது 1952ஆம் ஆண்டில்.
பதவியேற்ற அடுத்த ஆண்டே தமிழ்மொழியில் அர்ச்சனை என்பதை நடைமுறைப்படுத்திய இவரை அப்போதே பாராட்டியிருக்கிறார் பெரியார். அவரும் இந்த மடத்திற்கு பலமுறை வருகை தந்திருக்கிறார். ஒருமுறை அவருக்கு இங்கு மடம் சார்ந்தவர்களால் திருநீறு நெற்றியில் பூசப்பட்டபோது அதைக்கூட யாரையும் அவமதிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பெரியார்.
வழக்கமான மடாதிபதியாக இல்லாமல் ”சாதியைப் பற்றி நினைக்காதே.. சொல்லாதே.. பேசாதே” என்று சொல்லிக் கலப்புத் திருமணத்தையும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடத்தியவர் அடிகளார்.  1969ல் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
அப்படிப்பட்டவருடன் முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகி விட முடிந்தது. ”நீங்க உங்க இயல்பில் இருங்க.. நாங்க எங்க இயல்பில் இருக்கோம். பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேலே இன்னொருத்தருக்கு மரியாதையும், மதிப்பும் இருக்கணும். இப்படி இருந்தா யாருடனும் நல்லாப் பழக முடியும் ..” என்றவரிடம் சிவகங்கை வட்டார மொழி வழக்கான ”அவுக.. இவுக..வந்தாக..”  என்கிற சொற்கள் அடிக்கடி புழங்கிக் கொண்டிருந்தன.
முதல்தடவை பார்த்து விட்டுக் கிளம்புகிற போது மற்றவர்களுக்கு திருநீற்றைக் கொடுத்தவர் எனக்குக் கொடுப்பதைச் சிறுபுன்னகையுடன் தவிர்த்தார். ”அடிக்கடி வாங்க  தம்பீ. எதனாலேயோ உங்களைப் பிடிச்சிருக்கு.. வித்தியாசமா நினைக்காம வாங்க..”  என்று பிரியத்துடன் வழியனுப்பிய விதம் பிடித்திருந்தது.
மலிவுவிலை மது கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து தன்னுடைய குன்றக்குடி கிராமத்திற்குள் மதுக்கடையைத் திறக்க விடாமல் பண்ணியபோது அவரைப் பேட்டி காணப் போயிருந்தேன். அப்போது குன்றக்குடி ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தார். அதையொட்டி வழக்கும் போட்டிருந்தார்.
”அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்கட்டும். அவுகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கட்டும். அதை விட்டுட்டு அரசே வீதிவீதியா இப்படி மலிவுவிலை மதுக்கடைகளைத் திறக்கறதை என்னால் ஏத்துக்க முடியலை.. எவ்வளவு மனித உழைப்பு இதுனாலே வீணாப்போகுது.. அவங்க கிட்டே இருக்கிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் அரசே இப்படிச் சுரண்டனுமான்னு தான் குன்றக்குடிக்குள்ளே இந்த அசிங்கத்தை அனுமதிக்காம இருக்கேன்.. மடம்னா ஏதோ சடங்கு, சாத்திரம்ன்னு ஒதுங்கிறக் கூடாது.. அதைச் சுத்தி இருக்கிற மக்களோட நலத்திலும் அக்கறை காட்டணும்.. இதிலே வர்ற எதிர்ப்புக்கு அஞ்சக் கூடாது” என்று சொல்லிக் கொண்டு போனபோது அவரிடமிருந்த ஆவேசம் இணக்கமானதாக இருந்தது.
அதைப் பத்திரிகையில் பதிவு பண்ணியதும் தொலைபேசியில் அழைத்தார். ”அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தாலும் சரியா எதைப் போடணுமோ அதைப் போட்டிருக்கீங்க” – பேச்சிலிருந்தது வாஞ்சை.
”சர்ச்சைக்குரிய மடங்கள்”  என்று தொடராக வெளியிடும் நோக்கத்தில் சில மடாதிபதிகளைச் சந்தித்தபோது குன்றக்குடிக்கும் போயிருந்தேன். மிக விரிவாக நீண்டது பேட்டி. மதியம் அவருடன் சாப்பிட்டு மறுபடியும் நீண்டது பேச்சு. மடங்கள் எப்படியெல்லாம் அதில் தவிர்க்க முடியாமல் ஒட்டிக் கொண்டிருக்கிற பழமைத் தன்மையிலிருந்து மீண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தார்.
எல்லாம் முடிந்து அந்தத் தொடரை நான் எழுதி அனுப்பியும் அது வெளியாவதில் பிரச்சினை உருவாகி அந்தத் தொடர் வெளிவரவில்லை. செய்தி தெரிந்ததும் அவரை தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன். ”பரவாயில்லை தம்பி. நீங்க ஒங்க வேலையைப் பண்ணியிருக்கீங்க.. வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுச்சுன்னா நீங்க என்ன பண்ணுவீங்க.. விடுங்க.. இதனாலே நான் ஒண்ணும் நினைச்சுக்கிட மாட்டேன்” – இயல்பாகச் சொன்னார்.
தனியாக செய்தி நிறுவனம் ஒன்றைத் துவக்கியபோது அவரிடம் சொன்னபோது சந்தோசப்பட்டார். நாளிதழின் இணைப்பு ஒன்றிற்காக குன்றக்குடி என்கிற ஊரில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதைப் பற்றிய கட்டுரைக்காக அங்கு போயிருந்தேன். காலையில் சீக்கரமாகவே வரச் சொல்லியிருந்தார். பலரை முன்பே வரவழைத்திருந்தார்.
போய்ச் சேர்ந்ததும் குன்றக்குடியில் என்னென்ன நலத் திட்டங்களும், தொழிற்கூடங்களும் துவக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டச் சிலரை என்னுடன் அனுப்பினார். காரைக்குடியில் உள்ள சிக்ரி நிறுவனத்துடன் இணைந்து பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருந்தன. பால்பண்ணை, விவசாயக் கூட்டுறவுச் சங்கம், கயிறு, நெசவுக் கூடங்கள், பழப் பண்ணை, விதைப் பண்ணை என்று பல மாற்றங்கள்,  பொட்டாசியம் குளோரைடு அங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. நிலச் சீர்த்திருத்தம் அமல் செய்யப்பட்டிருந்தது.
மலையைச் சுற்றி இருக்கிற சின்ன ஊரான குன்றக்குடியில்  நடந்த மாற்றங்கள் ஆச்சர்யப்படுத்தின. பெரியார் பெயரில் அங்கு முந்திரித் தொழிற்சாலை நடந்து கொண்டிருந்தது ஆன்மீகத்தைத்  தாண்டிய அடிகளாரின் நட்பைத் துல்லியப்படுத்தியது. அந்த ஊரில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மடம் அங்குள்ளவர்களுடைய வாழ்க்கையின் ஆதார மையமாகி இருந்திருப்பதும், அடிகளார் அதற்கான முயற்சிகளைச் சளைக்காமல் செய்திருப்பதும் வியப்பாக இருந்தது. காந்தி போன்றவர்கள் வலியுறுத்திய ‘சுயதேவைப் பூர்த்திக் கிராமமாக’ அது மாறியிருந்தது.
மதியம் மூன்று மணிவரை குன்றக்குடியில் சுற்றிவிட்டு மடத்திற்கு வந்து அடிகளாரைப் பார்த்த போது ”என்ன.. பார்த்து முடிச்சிட்டிகளா?  உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்க..” முகத்தில் ததும்பிய புன்னகை.
பாரம்பரியமான மடம் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையில் ஊடுருவியிருப்பதை நெகிழ்வான வார்த்தைகளில் அவரிடம் சொன்னபோது கனிந்து கொண்டிருந்தது அவருடைய முகம். வெகு நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். தாடியை அடிக்கடி கோதிக் கொண்டிருந்தன அவருடைய விரல்கள்.
”மடம்கிறது எத்தனையோ வருசமா இருக்குது.. சுத்தியிருக்கிற மக்களை ஏதோ  வழிபட வர்றவங்களா மட்டும் பார்க்கக் கூடாது. அவுகளோட வாழ்க்கையைப் பார்க்கணும். அதிலே உள்ள குறைகளைப் பார்க்கணும். எந்த மனுசனுக்கும் முதலில் வயிறு நிறையணும். அப்படி நிறைஞ்சாத்தான் பிறகு அவனோட மனசு நிறையும். அப்போ தான் அவன் இறைவனைப்பத்தி நினைப்பான். சும்மா வயிறு காஞ்சிக்கிட்டிருந்தா எப்படி இறைநம்பிக்கை வரும்? இதை மடங்கள் உணரணும். வெறுமனே சொத்துக்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கிற நிறுவனமா மடங்கள் மாறிடக் கூடாது. இதைத்தான் இந்த ஊர்லே பண்ணிக்கிட்டிருக்கோம். இது முயற்சிதான். இன்னும் இந்த ஊர் மட்டுமல்ல – இந்த மாவட்டமும் முன்னேறணும்கிற ஆசை எனக்கு இருக்கு.. துறவிக்கு ஏன் இந்த ஆசைன்னு சிலர் கேட்கலாம். மக்களோட வாழ்க்கை பொசுங்கிப் போய் கிடக்கிறப்போ நாங்க மடத்துச் சொத்தோட வசதியா இருக்கிறது எந்த மடத்தைச் சேர்ந்தவங்களுக்கும் உறுத்தணும்.. எனக்கு உறுத்தியிருக்கு.. நான் பண்ணியிருக்கேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது குரல் அடிக்கடி உச்சிக்கு போனது. முகத்தில் பலவிதமான பாவங்கள் மிதந்தன.
தனியாகச் சில மடங்களின் சொத்துக்களைச் சொல்லிவிட்டு ”அவங்க சுத்தியிருக்கிற மக்களோட வாழ்க்கையிலே என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்காங்க.. சொல்லுங்க.. மடத்திலே இன்னைக்குப் பொறுப்பிலே இருக்கிற நாம இருக்கலாம்.. மறைஞ்சிறலாம்.. ஆனா மக்கள் மனசில் அவங்க வாழ்றதுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்திட்டீங்கன்னா போதும். இதைவிட என்ன சேவை இருக்கு?”
அடிகளாரின் மனம் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. மடத்தின் மாடியறையிலிருந்து கீழே இறங்கியபோது அவரும் உடன் வந்தார். அங்கிருந்த ஊழியரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பக்கத்து அறையில் அவரும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் வெளியே கூப்பிட்டார்கள் ஊழியர்கள். ”நீங்க இருங்க.. வர்றேன்” என்று சொல்லிவிட்டுப்  போனார் அடிகளார்.
சிறிது நேரத்தில் ”அய்யா கூப்பிடுறாக” – ஊழியர் என்னைக் கூப்பிட்டார். போனதும் மடத்தில் நுழைந்ததும் உள்ள பெரிய ஹாலில் கையில் பெரிய தாம்பாளத்துடன் நின்றிருந்தார் அடிகளார். அதில் ஒரு சஃபாரி துணி, பழங்கள், முந்திரி, பிரசாதத்துடன் பணமும் வைக்கப்பட்டிருந்தது.
”வாங்க.. வந்து இதை வாங்கிக்கணும்” – அடிகளார் சொன்னதும் எனக்கு அது வினோதமாக இருந்தது. அடிகளாரின் பார்வை நட்புணர்வுடன் இருந்தாலும் -எனக்கு அந்தச் செய்கை அந்நியமாக உணர வைத்தது.
பக்கத்தில் போனேன்.
”எதுக்கு இப்படிப் பண்றீங்க.. காலையிலிருந்து எப்படிப் பேசிக்கிட்டிருந்தோம். அதுக்கிடையில் ஏன் இப்படிப் பண்றீங்க.. பத்திரிகைக்காரன்னாலே அவனுக்கு ஏதாவது கொடுத்துச் செய்தியை வரவழைக்கணும்னு நினைக்கிறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசமிருக்கு..?  இதெல்லாம் என்னைக் கேவலப்படுத்துற மாதிரிதான் இருக்கு..இதுக்கும் நான் எழுதுறதுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கப் போறதில்லை. அப்புறம் ஏன் இப்படிப் பண்றீங்க..? எனக்கு எதுவும் வேணாம்.. நான் கிளம்புறேன்”
- படபடவென்று அவரிடம் சொல்லிவிட்டு கேமிரா பையுடன் மடத்தை விட்டு வெளியேறிவிட்டேன். அடிகளார் தட்டுடன் அதே இடத்தில் நிற்பது மட்டும் தெரிந்தது.
நேரே மடத்திற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்க்குப் போய் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். மடத்து ஊழியர் ஒருவர் அங்கு வந்து ”அய்யா உங்களை அழைச்சுட்டு வரச்சொன்னாக.. வாங்க” என்றார். குழப்பத்துடன் போனேன்.
மடத்தின் வெளி ஹாலில் அதே இடத்தில் நின்றிருந்தார் அடிகளார். தாம்பாளத்துடன் அவர் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் மனதுக்கு சங்கடமாக இருந்தது.
”நான் உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு இப்படிச் செய்யலை.. யார்கிட்டேயும் நான் இந்த மாதிரி வாங்கினதில்லை.. அதனால் தான்..”  சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தார் அடிகளார்.
”தம்பீ.. உங்களை மனசாரப் பாராட்டுறேன்.. இப்படி முகத்துக்கு நேரா நீங்க பட்டுன்னு உங்க மனசில் இருக்கிறதைச் சொன்னீங்களே.. இந்தக் குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. இதை நீங்க எந்தவிதத்திலும் கௌரவக் குறைச்சலா நினைக்கக் கூடாது.. இது இந்த மடத்தோட மரியாதை. அதுனாலே நீங்க தவறா நினைக்க வேணாம்.. இனி நான் இதை நீங்க வாங்கிக்கிடணும்னு வற்புறுத்த மாட்டேன்.. ஆனா ஒண்ணே ஒண்ணு.. நீங்க கும்பிடாட்டாலும் உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க கும்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்.. அவங்களுக்காக இதில் இருக்கிற திருநீறு பிரசாதத்தை மட்டுமாவது நீங்க எடுத்துக்கணும்.” – அவருடைய வழக்கமான கரகரத்த குரல் மென்மைப்பட்டிருந்தது.
அவர் வைத்திருந்த தட்டிலிருந்து பிரசாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ”சரிங்கய்யா.. நான் கிளம்புறேன்” என்ற போது ”மனசிலே நீங்களும் எதையும் வைச்சுக்காதீங்க.. நானும் வைச்சுக்க மாட்டேன்.. எப்ப வேண்டுமானாலும் நீங்க இங்கே வரணும்.. பத்திரிகைக்காகத் தான் வரணும்னு அவசியமில்லை.. வருவீகல்லே..” என்றார் அடிகளார்.
அண்ணாவும், பாரதிதாசனும், நேருவும், ராஜாஜியும் இதே மடத்திற்குள் வரக் காரணமாக அமைந்த அடிகளாரின் மனதை இதன் மூலம் சங்கடப்படுத்தி விட்டோமோ என்று தோன்றிக் கொண்டிருந்தது. குன்றக்குடியைப் பத்தி அந்த நாளிதழ் இணைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்ததும் தொலைபேசியில் அழைத்துச் சற்றுக் கூச்சத்துடன் பாராட்டினார்.
அதன் பிறகு அடிக்கடி தொலைபேசி மூலம் அடிகளார் பேசிக் கொண்டிருந்தார். அவருடனான நெருக்கம் கூடியிருந்தது. பேச்சில் பத்திரிகைக்காரன் என்கிற இடைவெளி இல்லாமல் போயிருந்தது. அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த ”துக்ளக்” பத்திரிகையின் ஆண்டுவிழா
காரைக்குடியில் நடக்க இருந்தது. ஆசிரியர் சோ என்னிடம் விழாவுக்கான பொறுப்பை ஒப்படைத்திருந்ததால் – அதற்கான ஏற்பாட்டில் இருந்தேன். குன்றக்குடி அடிகளாருக்கு அந்த மாவட்டத்தில் இருந்த பி.ஆர்.ஓ ராவணன் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததும் என்னை தொலைபேசியில் அழைத்தார்.
”என்னப்பு.. காரைக்குடியில் விழாவாமே.. உங்க ஆசிரியர் சோ உட்பட ஆசிரியர் குழு எல்லாத்துக்கும் மதியம் இங்கே தான் விருந்து.. அவசியம் வரணும்.. நீங்க தான் அழைச்சுட்டு வரணும்..என்ன”
சோ அவர்களிடம் சொன்னேன். ஒப்புக் கொண்டார்.
விழா நடக்க இருந்த அன்றைக்கு மதியம் பனிரெண்டு மணிக்குள் இருவாகனங்களில் அனைவரும் குன்றக்குடி மடத்திற்குப் போய்விட்டோம். முன்னால் நின்று வரவேற்றார் அடிகளார். போனதும் சட்டையைக் கழற்றி அடிகளாரின் காலில் விழுந்து வணங்கினார் சோ. பிறகு இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
உணவு தயாரானதும் அழைத்தார்கள். நீள்வட்ட மேஜை. மையத்தில் அடிகளார். சுற்றிலும் சோ மற்றும் நாங்கள் அனைவரும். பொங்கல் தினம் என்பதால் பொங்கலுடன் துவங்கியது உணவுப் பரிமாறல். பேச்சு தொடர்ந்தபோது அடிகளார் என்னைப் பற்றி கேலியுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
சிரித்துக் கொண்டே சோவிடம் முன்னால் மடத்தில் நான் நடந்து கொண்ட விதத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு ”சரியான ஆளைத்தான் பிடிச்சுப் போட்டுருக்கீங்க”  என்றார் அருகிலிருந்த என்னைப் பார்த்தபடி.
மாலை காரைக்குடியில் நடக்க இருந்த விழாவுக்கு அழைத்தோம். பிடி கொடுக்கவில்லை அவர். விழா திரளான கூட்டத்துடன் நடந்து முடிந்தது.
மறுநாள் காரைக்குடியில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அடிகளாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ”நேற்று விழாவுக்கு வந்திருத்தேன். கூட்டம் அதிகம். மண்டபத்துக்கு வெளியே காரில் இருந்து விழாவில் பேசினதைக் கேட்டேன். வித்தியாசமான கூட்டமா இருந்துச்சு.. உங்க ஆசிரியர் கிட்டே சொல்லுங்க”
மதுரைக்கு வந்தாலும் வரச்சொல்லி அழைப்பார். போய்ப் பார்ப்பேன். ஒருமுறை மதுரையில் ஓரிடத்தைக் காரில் கடந்து கொண்டிருந்தோம். காரை அந்த இடத்தில் சட்டென்று நிறுத்தச் சொன்னார். முன்னால் உட்கார்ந்திருந்த அவர் எங்களிடம் ”அங்கே நடைபாதையைப் பாருங்க” என்றார்.
நடைபாதையோரம்  வீதியே வசிப்பிடமாக ஒரு குடும்பம். எளிய துணிக்கூரை. பக்கத்தில் சில பாத்திரங்கள். நிழல் சரிந்திருந்த இடத்தில் காலை நீட்டியபடி மெலிவான ஒரு பெண். அவளுடைய மடியில் தலை சாய்த்திருக்கும் கணவன். அவர்களுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பெண் குழந்தை. மடியில் படுத்திருந்த கணவனின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். கணவனின் முகத்தில் அலாதியான முகபாவம். கண்ணிமைகள் மூடியிருந்தன.
காருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அடிகளார் சொன்னார்.  ”இதைப் பார்க்கிறப்போ எவ்வளவு சந்தோசத்தை உணரமுடியுது. எவ்வளவு அன்பு தெரியுது. வசதியில்லை. தெரு தான் போக்கிடம். ஆனால் நிறைஞ்ச அன்பு இருக்கு இவங்க கிட்டே. நிறையப் பேர் வசதியிருந்தாத்தான் மகிழ்ச்சி இருக்கும்னு நினைக்கிறாங்க.. ஆனா எந்த இடத்திலும் பொங்கின மாதிரி அன்பு இருக்க முடியும்.
ஐந்து குழந்தைகளைப் பெத்த பெண் ஒருத்தி தன்னோட கணவரோட என்னைப் பார்க்க வந்திருந்தா.. ”எதுக்கும்மா வதவதன்னு குழந்தைகளைப் பெத்துட்டு கஷ்டப்படுறே” ன்னு நான் கேட்டப்போ ”இது பகல் முழுக்க கடுமையா உழைச்சுட்டு வருது சாமி.. அதுக்கு இந்த சுகத்தைத்தவிர வேறு என்ன கொடுக்க முடியும்?”ன்னு கேட்டப்போ எனக்கு ஒரு  மாதிரி ஆகிப்போச்சு.. நான் என்ன சொல்ல முடியும்? குடும்பக் கட்டுப்பாடு பற்றி நான் பேச முடியுமா.. சொல்லுங்க..”
அவருடனான பல சந்திப்புகளுக் கிடையில் “அடுத்து என்ன பேசுவது?” என்று தவிர்க்க முடியாமல் விழுந்து விடுகிற மௌனம் குறுக்கே விழவில்லை. காவி உடை தரித்த மனிதருக்குள் இருந்த முதிர்ந்த மனிதரைச் சந்தித்த உணர்வு மனதில் ஏற்பட்டிருந்தது.
ஒருமுறை மடத்திற்குப் போனபோது அடிகளாருக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவர் யாரையும் பார்க்க மாட்டார் என்றும் சொன்னார்கள். நான் வந்திருப்பதைத் தெரிவிக்கச் சொன்னேன். வரச் சொன்னதாகச் சொன்னார்கள்.
மாடியில் அவர் இருந்த அறை வழக்கமான வெளிச்சத்தோடு இல்லாமல் இருளடைந்திருந்தது. ஒரு நாற்காலியில் சோர்வாக அமர்ந்திருந்தார். வழக்கமாக தலையில் கட்டும் காவித் தலைப்பாகை அன்று இல்லை. தலைமுடி விரிந்து தோளில் சரிந்து கிடந்தது. தோளில் காவித் துண்டும் இல்லை. நல்ல கர்லாக்கட்டை சுற்றி உருவான உடற்கட்டுடன் இருந்தார். வாடியிருந்தது முகம். குரல் சலித்திருந்தது.
”எது எதற்கோ நேரம் செலவழிக்கிறோம். ஆனால் நம்முடன் இருக்கிற உடம்பைக் கவனிக்க உரிய நேரம் ஒதுக்கிறோமா சொல்லுங்க.. கவனிக்காட்டி என்ன.. அது பிணங்கிக்கிற ஆரம்பிச்சுடுது.. நம்ம  தினசரி வேலை எல்லாம் கலைஞ்சு உடம்பை மட்டும் இப்போ  பார்த்துக்கிட வேண்டியிருக்கு. அப்படித்தான் இன்னைக்கு இருக்கேன்..”
கையில் வழக்கமாகக் கொண்டு போகும் காமிராவுடன் போயிருந்தேன். அதைக் கவனித்தவர் ”இன்னைக்கு நான் தலைவிரிச்சுட்டு உட்கார்ந்திருக்கிறது உங்களுக்கு வித்தியாசமா இருக்கா..நீங்க வேணா இப்படியே போட்டோ எடுத்துக்குங்க” என்றபடி சிரித்தார். நான் தயங்கிய போதும் தோளில் காவித் துண்டைப் போட்டபடி படம் எடுக்கச் சொன்னார்.. எடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
மதுரையில் அவர் மறைவதற்குச் சில தினங்களுக்கு முன்பு பார்த்தபோது  உடம்பில் வலி கூடியபடி இருந்தார். பாரதியைப் பற்றிய பேச்சு வந்தபோது சொன்னார். ”யாரிடம் என்ன திறமைகள் இருந்தாலும் – அது பாரதியா இருந்தாலும் அவங்ககிட்டே காலத்தோட அழுக்கு கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்.. அப்படித்தான் பாரதிக்கும். அதையும் மீறி அவன் எப்படிச் செயல்பட்டிருக்கான்னு தான் பார்க்கணும். காலத்தில் நமக்குப் பிந்திக் கிடைச்ச வசதியிலிருந்தோ, சிந்தனையில் இருந்தோ அவங்களைப் பார்க்கக் கூடாது. பார்க்கிற ஒவ்வொருத்தர் கிட்டேயும் நம்முடைய சாயலைத் தேடிக்கிட்டிருக்கக் கூடாது..”
மத, சாதிய ரீதியான கலவரம் என்றால் உடனுக்குடன் அந்த இடங்களுக்கு ஓடிக் கொண்டிருந்த – அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற மசோதாவைப் பல எதிர்ப்புகளுக்கு இடையே ஆதரித்த – திருக்குறளைத் தேசிய நூலாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த – அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட குன்றக்குக்குடி அடிகளார் அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில மாதங்களுக்குள் மறைந்துவிட்டார்.
மறைவதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு வார இதழ் ஒன்றில் அவர் எழுதிவந்த தொடரின் தலைப்பு ”மண்ணும் மனிதர்களும்”.
துறவியாக இருந்தாலும் – மண்ணும் மனிதர்களும் மறக்கக் கூடியவையா என்ன?

வாசகர் கருத்துகள் (1)
Ilakkuvanar Thiruvalluvan says:
அருமையான கட்டுரை. அடிகளாரைப்பற்றி மட்டுமல்லாமல், தந்தை பெரியாரைப்பற்றியும் போலித்துறவு பூண்ட சாதித்தலைவர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. நினைவின் நிழல்கள் உள்ளத்தின் பதிவுகளாக உள்ளன. பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

1 கருத்து:

  1. The past Kunrakkudi Adigalar was a versatile genius in all subjects .The author of this article mentioning his experience with another Swamigal. I also know him personally well, when an allegation about him was arised I went to the Mutt with Shirt Salvai etc, refused to remove when asked by his followers, and called him as "Sir" as this author. At that time I tried to see his face. I am unable to find whether it was Anger or restlessness, or helplessness or a mixed one.He suuddenly went to the inner room without giving me interview for the magazine.. At That time I thought about our "THAMIZH SANRORGAL" as like as our Kunrakkudy Adeenakarthar. The present Atheena Karthar is also more flexible than his senior.Often he comes to Mylapore and stays at a Lodgings, the place owned to the Adheenam. Even a child can meet him without appointment.At Thirupoonthuruthi, Kunrakkudi Atheenam owns one Athishtanam of Nararayana Theertha Swamigal.The chair person of the Celebration Committee having many differences with Adigalar came to meet him at this lodgings with a crew of Retired Officers of various departments, now having no power,but having the old uniform of Safari Sutings only.This was done by the chairperson to show his ability. Knowing all these things but pretending as he knew nothing Sree Adigalar gave him interview with smiling face and made good for him without any ego or guts. That is the sovereignity of Kunrakkudy Mutt. Even Though I am a brahmin I brought up without Brahmaneeyam , studied Tamil M.A, called as " Paappara Kallar" in and around Tirukattupalli really feeling proud to see this article.

    பதிலளிநீக்கு