கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

 06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.

 நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு வர முடியாது. ஆனால், அவர்கள் பதவிகளில் இருக்கும் பொழுது அவைக்கு இருவரும் வர இயலாச் சூழல் நேர்ந்தால் இந்தப் பட்டிப்பில் உள்ள ஒருவர் அவையைத் தலைமைதாங்கி நடத்துவார்.இதில் தொல்.திருமாவளவன் இடம் பெற வேண்டும். விடுதலைச்சிறுத்தைக்கட்சியின் தலைவரான அவர் அவையைத் திறம்பட நடத்துவார்.
 7. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா?
தினகரன், கட்சியைவிடடு யாரும் விலகுவார்களாக என்ற செய்தியாளர் கேள்விக்கு, யாரும் போக வேண்டும் என்றால் போவார்கள். அதில் என்ன இருக்கிறது. 10 பேர் போவதால் கட்சி அழிந்து விடும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா  என்று பேசியுள்ளார். போக நினைப்பவர்கள் போகலாம் என்று சலிப்பின் அடிப்படையிலும் பேசலாம். யாரை நம்பியும் இக்கட்சி இல்லை என்று தன்னம்பிக்கையிலும் பேசலாம். அடுத்து அவர்,  செந்தில் பாலாசி தி.மு.க.வுக்கு சென்று வெற்றி பெற்றிருப்பது அவரது புத்திசாலித்தனம். என்று சொன்னது புத்திசாலியாக இருந்தால் வேறு கட்சிக்குப் போ எனச் சொல்வதுபோல் இருக்கிறது. இருப்பினும் அக்கட்சியின் ஓசூர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த கருநாடகப் புகழேந்தி இதற்கு எதிரான கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பது அவரது வழக்கம்.
ம.தி.மு.க.வில் வைகோவிற்குக் கட்டுப்படாமல் தத்தமக்கு முதன்மை இருப்பதாகக் காட்டிக் கொண்ட சிலரால்தான் அக்கட்சி சிறுத்தது. நாளை அ.ம.மு.க.விற்கும் இந்நிலை நேரும். எனவே, அடுத்த நிலையில் உள்ளவர்கள் கட்சித்தலைமையிடம் தனிப்பட்ட முறையில் மாற்றுக்கருத்தைத் தெரிவிக்கலாமே தவிர,அவர்கள் பொது வெளியில் கூறக்கூடாது என்னும் நிலையைத் தினகரன் உருவாக்க வேண்டும். தம்மைத் தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்றோ தமக்குக் கட்டுப்பட்டதுதான் தலைமை என்றோ எண்ணுபவர்களால் கட்சி அழியும்.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 790)
 8. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!
கடந்த அரசின் அமைச்சரவையில், பொன்.இராதா கிருட்டிணன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தகுதி படைத்த முழுநிலை அமைச்சராக்கப்படவில்லை.  துறை அமைச்சர் சொன்னால் மட்டும் உதவியாக வேலைபார்க்கக்கூடிய இளநிலை அமைச்சராகத்தான் அமர்த்தப்பட்டார். அமைச்சக ஊழியராகத்தான் இப்பதவி உள்ளது. மரபுப்படி இளநிலை அமைச்சர்களைத் திரு.அமைச்சர் என்று கூட அழைக்கக்கூடாது. இம்முறை அவ்வாறுகூட யாரும் இளநிலை அமைச்சராக்கப்படவில்லை. (இணையமைச்சர் என்றால் துறை அமைச்சருக்கு இணையானவர் என்ற தவறான பொருள் வருவதால் அவ்வாறு குறிப்பிட விரும்பவில்லை.) ஒருவேளை தோற்றவர்களுக்குக் கொல்லைப்புற வழியில் அமைச்சர் பதவி தர விரும்பவில்லை என்றால் வரவேற்கலாம். ஆனால், அவ்வாறில்லை. எனினும் தேர்தலில் போட்டியிடாத கட்சிக்காக உழைத்த தலைவர் எவருக்கேனும் அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம். அல்லது பா.ச.க.வுடன் கூட்டணி வைத்துத் தேய்ந்துபோன அ.தி.மு.க.விற்கு ஆறுதலாக அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம்.அதுவும் இல்லை. அமைச்சரவையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்கள் நிருமலா சீத்தாராமனும் சுப்பிரமணியன் செய்சங்கரும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கும் அவர்கள் மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல் என்றால் கண்டிப்பாக அவர்கள் தமிழ்நாட்டின் பக்கம் நிற்க இயலாது. அவர்களால் தமிழ்நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க பயன் எதுவும் விளையாது. எனவே, அவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகக் கூறுவது நம்மை ஏமாற்றவதாகும். எனவே, மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விரைவில் இடம்பெற வேண்டும்.
பொதுவாகவே தமிழ்நாட்டு நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசில் தமிழ்நாட்டவர்களையும் புறக்கணிப்பது அக்கட்சிக்கும் நல்லதல்ல!
இலக்குவனார் திருவள்ளுவன்