ஞாயிறு, 6 மே, 2012

solkiraarkal, dinamalar

சொல்கிறார்கள்
"குருவிகளுடன் வாழ்கிறோம்!'

தங்கள் வீட்டில் கூடுகட்டியிருக்கும் குருவிகளைப் பற்றி கூறும் தூத்துக்குடியை சேர்ந்த ராமலட்சுமி: நாங்கள் புது வீடு கட்டி, பால் காய்ச்சி, போன ஒரு மாதத்திலேயே வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக குருவிகள் பறந்தபோது, எதேச்சையாக வந்து போகின்றன என நினைத்தேன். ஆனால், வரவேற்பறையில் கிடந்த தூசு, தும்புகளைப் பார்த்தபோது, அவை வீட்டில் எங்கேயோ கூடு கட்டுகின்றன என்பதை அறிந்தேன். கூடு கட்டுவதற்காக அவை கொண்டு வரும் புல், காய்ந்த குச்சிகள் போன்றவை கீழே விழும். அதை எடுப்பதற்காக, அவை வரும்போது, என்னைப் பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அசையாமல் சிலைபோல் அமர்ந்திருப்பேன். ஒரு கட்டத்தில், "இவள் நம்மவள்' என்று அவற்றிற்கு நம்பிக்கை ஏற்பட்டு, என் அருகில் வர ஆரம்பித்தன. குருவிகளின் வாழ்க்கை முறைகளைப் பார்க்கும் போது, ஆச்சர்யமாக இருக்கும். குஞ்சுகள் எல்லாம் வளர்ந்ததும், அவற்றுக்கு தாய்க்குருவி பறக்கக் கற்றுக் கொடுப்பதைப் பார்த்தபோது, என் பெற்றோர் ஞாபகம் வந்தது. ஒரு கூட்டுக்கு இரு ஜோடிக் குருவிகள் சண்டை போட்டதை முதல் நாள் பார்த்தேன். அதன் பின், அதே கூட்டுக்கு இன்னொரு வாசல் போட்டு, இரண்டு ஜோடிகளும் குடி புகுந்ததை மறுநாள் பார்த்தபோது, ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றேன். ஒவ்வொரு கூட்டிற்கும் கீழே ஒரு பேப்பரை விரித்தால், குருவிகள் தன் குஞ்சுகளின் கழிவை அலகால் எடுத்து சரியாக அந்தப் பேப்பரில் போடப் பழகின. அவற்றை நான் அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுவேன். மின் விசிறியில் குருவிகள் அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, அவற்றின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து விட்டேன். நாங்கள் வெளியூர் சென்றாலும், அனைத்து அறைகளிலும், ஒவ்வொரு ஜன்னல் திறந்தே இருக்கும். இப்போது எங்கள் வீட்டில் குருவி குடும்பங்களுடன் சேர்த்து, நாங்கள் எட்டு குடும்பங்கள் வசிக்கிறோம். குருவிகளின் சத்தத்துடன் எங்கள் வீடு எப்போதும் கலகலப்பாக உள்ளது!

கற்பனை வளம் வேணும்! 

ஆரத்தி தட்டு தொழிலின் மூலம் லாபம் ஈட்டும் விஜிதா: ஆரத்தித் தட்டு தொழிலைச் செய்ய கொஞ்சம் முதலீடும், நிறைய கற்பனை வளமும் போதும். இருக்கிற இடத்திலேயே, கற்பனை வளத்தை கொட்டி செய்யும் வேலை இது. கற்கண்டு, காய்கறிகள், பழங்கள், மலர்களில் துவங்கி, பாக்கு மட்டை, தெர்மாக்கோல், பிளாஸ்டிக், பீங்கான் என, பல பொருட்களிலும் ஆரத்தி தட்டுகள் செய்யலாம். ஒரே நிபந்தனை... அது ரசிக்கும்படி இருக்க வேண்டும். ஆரத்தி தட்டுகளுக்கு ஆர்டர் பிடிப்பது, அடுத்த வேலை. ஆரம்பத்தில் உறவி னர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்களிடம் ஆர்டர்கள் எடுக்கலாம். அதை சிறப்பாக, மற்றவர்களை கவனிக்கும்படி செய்து விட்டால், நிறைய ஆர்டர்கள் கிடைப்பது நிச்சயம். ஒரு ஆர்டரில், வைக்கும் தட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, கட்டணம் வாங்கலாம். ஒரு ஆரத்தி தட்டை விலைக்கு கொடுத்தால், சாதாரணமாக ஒரு தட்டு, 150 ரூபாய் வரை விலை போகும். மணப்பெண் மற்றும் மணமகனின் முகங்கள், கடவுள்களின் முகங்கள் என்று கூடுதல் டிசைன்களுடன் இருந்தால், குறைந்தபட்சம், 250 ரூபாய் விலை வைத்து விற்கலாம். வாடகைக்கு என்றால், குறைந்தபட்சம், 80 ரூபாய்க்கு கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு, 10 தட்டுகள் வீதம் தயாரிக்க முடியும். அதாவது, ஒரு நாளுக்கு, 1,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். முர்கூத்தம் மட்டுமல்ல, காது குத்து, மகளிர் தின திருவிழாக்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள் என, பல விதமான விசேஷங்களுக்கும் ஆரத்தித் தட்டுக்கு வரவேற்பு உள்ளது. முகூர்த்த மாதங்களாக இருந்தால், 20 ஆயிரம் ரூபாயும், மற்ற மாதங்களில், 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமலும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக