திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

42

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 408)
நல்லவர் அடையும் வறுமையினும் துன்பம் தருவது கல்லாதவரிடம் சேரும் செல்வம் என்கிறார் திருவள்ளுவர்.
கல்லாதவரிடம் சேரும் செல்வம் அரசிற்குப் பாரமே என்கின்றனர் அரசியலறிஞர்கள்.
கல்லாதாரிடம் சேரும் செல்வத்தைக் குறிப்பிடுவதால் நல்லார் என்பது கல்வியறிவுள்ள நல்லார் என்னும் உட்பொருள் உடையதாக உள்ளது.
பேரறிவாளன் செல்வம் ஊருணி நீர் நிறைந்ததுபோன்றும்(குறள் 215) நல்லவனிடம் உள்ள செல்வம் பயன்மரம் பழுத்துப் பயன்தருவதுபோன்றும் (குறள் 216) பெருந்தகையாளனிடம் சேரும் செல்வம் மருந்துமரம்போன்றும் (குறள் 217) விளங்கும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். கல்வியறிவிலார் செல்வம் பெற்றால் தொடர்பு இல்லாதவர் நன்கு உண்ண தொடர்புடையவர்கள் பசித்திருப்பர்(குறள் 837) என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, கற்றறிந்த நல்லார் வறுமையில் செம்மையுடன் திகழ்வர். எனவே, இதுவரை அவரால் உதவிகள் பெற்ற சுற்றத்தாரும் உற்றாரும் நண்பர்களும் வறியவர்களும் பயன் தடைப்பட்டு வருந்துவர் என்று நல்லார் துன்புறுவர். என்றாலும் பெற்ற கல்வியறிவால் நல்ல வழிகளில் வறுமையைத் தாங்கும் திறனும் வறுமையைப் போக்கும் வழிமுறைகளும் கொண்டு துன்பத்தைத் தணிப்பர். ஆனால், கல்வியறிவில்லாதவன் செல்வம் பெற்றும் தீய வழிகளில் செலவழித்தும் தக்கவர்க்கு உதவாமல் துன்பம் விளைவித்தும் வாழ்வான்.
மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய இருவரும் “செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பர்” என்று செல்வச்செருக்கால் பிறருக்குத் துன்பம் செய்வர் என்கிறார்கள்.  பரிதி,  “நல்லோரிடத்தில் வறுமை வருந்தும்; அது போல கல்லாதாரிடத்தில் செல்வம் வருந்தும்” என்று அருமையாகக் கூறுகிறார். “கல்லாரிடம் வறுமையும் கற்ற நல்லாரிடம் செல்வமும் சேர்வது முறைமை. முறைமை மாறினால் தீமைதான்” என்கிறார் பேரா.சி.இலக்குவனார்
ஒரு தொழிலில் அத் துறை அறிவைக் கற்காமல் செல்வத்தைச் செலவழிப்பவன் தொழிலாளர்களுக்கும் அத்தொழிலைச் சார்ந்துள்ள நிறுவனங்கள், அந்நிறுவனத் தொழிலாளர்களுக்கும் துன்பம் விளைவிப்பவனாக இருக்கிறான்.
நல்லாரின் வறுமையினும் துன்பம் தருவது கல்லாரின் செல்வமே!
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 13.09.2019