(தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – 

காப்பு எதற்கு?

உண்மையில் காப்புக் கட்டுவது சமத்துவத்திற்காக அல்லமரியாதைக்காகவும் அல்ல. திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது. அப்படியானால் இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் தீண்டாமை நிலவியதில்லை என்று சொல்லி விட முடியுமா? காப்புக் கட்டும் வழக்கம் திண்ணியத்திற்கு மட்டும் உரியதல்ல. தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கம் இருப்பதாலேயே, தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் தமிழ்நாட்டை விட்டே ஒழிந்து விட்டதாக முடிவுக்கு வர முடியுமா? இறை வழிபாடு தொடர்பான ஒரு சடங்கை மட்டும் ஆதாரமாகக் கொண்டு சமூக மெய்ந்நடப்புகளைக் கணிக்க முற்படுவது அறிவுக்குகந்ததோ அறிவியலின் பாற்பட்டதோ அன்று. நீதிபதி சட்டம் படித்தவராக இருக்கலாம். ஆனால் சமூக அறிவியலோடு விளையாட அவருக்கு உரிமை இல்லை.

தீண்டாமை ஒழிந்து விட்டதா?

திண்ணியத்தில் தீண்டாமை நிலவுவதாக அரசுத் தரப்பினர் நீதிமன்றத்தில் வந்து சொல்லலில்லையாம். தீண்டாமை ஒழிக்கப்படுவதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு, எத்தனையோ ‘நலத் திட்டங்களை’ அறிவித்துக்கொண்டு தீண்டாமை நீடிப்பதாக எந்த அரசுதான் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்?

தீண்டாமையின் இருப்பும் ஒழிப்பும் நீதிமன்ற சாட்சிக் கூண்டுகளில் அல்லசமூகப் போராட்டக் களங்களில் தீர்வு செய்யப்பட வேண்டியது என்பது இராமமூர்த்தி போன்ற நீதிபதிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான திண்ணியங்களில் தீண்டாமையும்  சாதிப்பாகுபாடும் நீடித்து வருவதைத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் எங்கிருந்து பிடித்துவரப்பட்டவர்களோ? யாமறியோம்.

அற்ப முரண்பாடுகள்

குற்றத்திற்கான நோக்கம் மெய்ப்பிக்கப்படவில்லை என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்கிறார். சாட்சிகளின் சாட்சியத்திலுள்ள அற்ப முரண்பாடுகளை அவர் பிடித்துக் கொள்கிறார். இந்த முரண்பாடுகள் வழக்கின் சாரத்தைப் பாதிக்கும்படியானவை அல்ல, இவை வழக்கிற்குத் தொடர்பில்லாதவை என்பதை அவர் காண மறுக்கிறார்.

சான்றாகக் கருப்பையாவின் தங்கை பானுமதி மணமானவரா, இல்லையா? அவருக்குத் திண்ணியத்தில் வீடு ஒதுக்க முடியுமா, முடியாதா? என்ற ஆராய்ச்சியில் நீதிபதி ஈடுபடுகிறார். இதை வைத்துக் கருப்பையாவுக்கும் சுப்பிரமணியனுக்குமான பிணக்கின் அடிப்படையையே மறுக்க முனைகிறார். நாட்டில் எல்லாமே ஒழுங்காகவும் முறையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுபோல் சித்திரம் தீட்டி பானுமதியிடமிருந்து ஊராட்சித் தலைவி பணம் வாங்கியிருக்க முடியாது என்ற முடிவை வலிந்து வருவிக்கிறார்.

ஒரு குற்றச்செயல் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்படும் போதுஅச்செயலுக்கான நோக்கம் மெய்ப்பிக்கப்படா விட்டாலும் குற்றத் தீர்ப்பு வழங்கலாம் என்ற சட்டக் கோட்பாடு நீதிபதி இராமமூர்த்திக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

கருப்பையா தப்படித்ததால் சுப்பிரமணியன் ஆத்திரப் பட்டு அவரைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதை நீதிபதியே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தப்படித்ததற்கான காரணத்தை மட்டும் அவர் நம்ப மறுக்கிறார். காரணமேயில்லாமல் தப்படித்து வம்பில் சிக்குவதற்குக் கருப்பையாவுக்கு என்ன பைத்தியமா? கருப்பையாவின் செயல் குறித்து சுப்பிரமணியன் அவரைக் கேட்டதை எதிரித் தரப்பு சாட்சியே ஒப்புக் கொள்கிறார். இந்த ஒப்புதலை ஆதாரமாக வைத்து சுப்பிரமணியன் ஆத்திர மூட்டப்பட்டதால் தாக்கியதாக நீதிபதி தீர்மானிக்கிறார்.

இ.த.ச. 323 பிரிவில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு இதையே காரணமாய்க் காட்டுகிறார். சுப்பிரமணியன் ஆத்திரமூட்டப்பட்டதால் தாக்கினாராம்! ஆனால் கருப்பையா மட்டும் காரணமே இல்லாமல் தப்படித்தாரா? என்ற வினாவுக்கு நீதிபதியிடம் விடையில்லை.

சார்பும் சார்பின்மையும்

இந்த வழக்கில் சார்பற்ற சாட்சிகள் யாரும் இல்லை என்பது உண்மை. தாக்கியவர்கள் அனைவரும் சாதி இந்துக்கள், ஒருவரைத் தவிர அனைவரும் கள்ளர் வகுப்பினர் என்பதும், தாக்கப்பட்டவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும் உண்மையாக இருக்கும் போது சார்பற்ற சாட்சிகளுக்கு எங்கே போவது? இரு தரப்பினரின் சாதிச் சார்பையும் கண்டு கொள்ளாமல், சரிநிகரான தனிமனிதர்களாக அவர்களை நீதிபதி பார்க்க முற்படுவதால்தான் சார்பற்ற சாட்சிகளைத் தேடுகிறார். அக்கம் பக்கம் கடைக்காரர்கள் இருந்திருக்க வேண்டுமே என்கிறார். பொதுவாகக் கடைக்காரர்கள் காவல் நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ வர விரும்புவதில்லை என்பதையும், அவர்களுக்கும் சாதிச் சார்பு (அல்லது சாதி அச்சம்) உண்டு என்பதையும் அவர் காணத் தவறுகிறார்.

நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னணியில் சாதிப் பிணக்கு இருக்கையில் எவரும் சொந்தச் சாதிக்காரர்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

சாதியற்ற ஒருவர் வந்து சாட்சியமளித்தால்தான் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமென்றால், அப்படி ஒருவருக்கு எங்கே போவது? சார்பற்ற சாட்சிகள் இல்லை என்று குறைப்பட்டுக்கொள்ளும் நீதிபதியே சார்பற்றவர்தானா? என்ற வினாவும் எழத்தான் செய்யும்.

சாதியச்சம்

நடந்தவற்றை அறிந்த சாட்சிகள் 10 நாள் வரை வெளியில் சொல்லாமலும் காவல் துறைக்குத் தெரிவிக்காமலும் இருந்திருப்பார்கள் என்பதை நீதிபதி நம்ப மறுக்கிறார். தாக்குண்டவர்கள் வெளியில் சொல்லாமலும் காவல்துறைக்குத் தெரிவிக்காமலும் இருந்ததற்கான அதே காரணம் இந்த சாட்சிகளுக்கும் பொருந்தும். அவர்கள் அனைவரும் சேரிக்காரர்கள். ஆதிக்கச் சாதியினரிடம் அஞ்சி வாழவேண்டிய நிலையில் இருப்பவர்கள். சாதிய ஒடுக்குமுறை என்ற ஒன்றையே கண்டுகொள்ள மறுக்கும் நீதிபதியால் இந்த உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

தாக்குண்டவர்களின் மனைவிமார்கள் தாக்குதலை நேரில் கண்டிருந்தால் அலறிக் கூச்சலிட்டிருப்பார்கள் என்றும், இது குறித்து யாரிடமாவது முறையிட்டிருப்பார்கள் என்றும், தாக்குதல் முடிந்தவுடனே தாக்கப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு சென்றிருப்பார்கள் என்றும் கருதும் நீதிபதி இப்படியெல்லாம் நடைபெறாததால் அவர்கள் நிகழ்விடத்தில் இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார். இங்கேயும் காலங்காலமான சாதிய ஒடுக்குமுறையும், நடைபெற்ற நிகழ்வுகளில் அது கோரமாய் வெளிப்பட்டவிதமும் இந்தப் பெண்களின் உள்ளத்தில் எத்தகைய அச்சத்தை விதைத்திருக்க வேண்டும் என்பதை நீதிபதியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊமைச் சனங்கள் உரக்கப் பேசவில்லை என்பதாலேயே பொய்யர்களாகி விட மாட்டார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல்