வியாழன், 12 ஜனவரி, 2017

தமிழ் அறிஞர் ச.வே.சு. மறைவு





தமிழ் அறிஞர் ச.வே.சு. மறைவு


வைகோ புகழ் மாலை

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில்,

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம் (88) இன்று காலை இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொல்காப்பியத்தில் முழுமையாக ஊறித் திளைத்து, அது தொடர்பாகப் பல நூல்கள் எழுதுவதற்கு அடித்தளம் அமைத்தவர். கவிக்கோ அப்துல் இரகுமான், க.ப. அறவாணன்  முதலான 44 அறிஞர் பெருமக்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம்என்ற அமைப்பை, இறுதி வரை நடத்திக் கொண்டு இருந்தார்.

31 திசம்பரில் பிறந்த இவர், ஆண்டுதோறும் தாம் பிறந்த நாளை நெருங்கி வரும் சனி, ஞாயிறுகளில் தமிழூரில் கருத்து அரங்குகள் நடத்தி, தமிழ் விருந்தும் அறுசுவை விருந்தும் அனைவருக்கும் பரிமாறி விருந்தோம்பி வந்தார். தமிழ் ஆய்வு நூல்களைத் தம்முடைய கருத்து அரங்குக்கு அனுப்பச் செய்து இலவசமாகப் பதிப்பித்துக் கொடுத்தவர். கடைசியாக பாரதி முதல்  இக்காலக் கவிஞர்கள் வரை என்கின்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களைப்பற்றிய ஆய்வு நூலைத் தம் பிறந்த நாள் பரிசாக இலவசமாக வழங்கியவர். இளம் தமிழ் ஆர்வலர்கள் வளர்வதற்கு அளப்பரிய ஊக்கம் அளித்து வந்தார்.

தொடக்கக்கல்வியை விக்கிரமசிங்கபுரம் திரு இருதய நடுநிலைப்பள்ளியில் தொடங்கித் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்தவர். அருணாசலக் கவுண்டர், வித்துவான் சேது ரகுநாதன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்றவர். இவர் எழுதுவதை எல்லாம் வேதமாகக் கருதி அவருடைய நூல்கள் முழுமையும் மெய்யப்பர் பதிப்பகத்தார் அச்சிட்டு வந்தார்கள்.

தமிழ்ச் சித்தர்கள் போன்று, தம்முடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, தம்மை அடக்கி அதன்மேல் திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும் என இறுதிமுறி(உயில்) எழுதி வைத்தவர்.

வீரகேரளம்புதூரில் பிறந்த ச.வே.சு., உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் எல்லாம் நிறைந்தவர். அவரது பிரிவால் துயருறும் தமிழ் உணர்வாளர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவது இல்லைஎன்ற பாவேந்தர் கூற்றுக்கு ஏற்ப, ச.வே.சு. தமிழில் சாகா வரம் பெற்றவராகத் திகழ்வார்!


பின்வருவனவற்றையும் காண்க:
ச. வே. சுப்பிரமணியன் 10 -  இராசலட்சுமி சிவலிங்கம்
தமிழ் இந்து,  நாள் திசம்பர் 31, 2015

ச.வே.சுப்பிரமணியன் -  வீரகேரளம் புதூர் வலைப்பூ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக