திங்கள், 25 நவம்பர், 2013

பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்: கண்காணிப்பாளர்

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131124_rajivcaseofficial.shtml

பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்: ம.பு.ப..(சிபிஐ) முன்னாள்  கண்காணிப்பாளர் தியாகராசன் ஒப்புதல்  - கொடுமையைக் களைய மூவரையும் உடனே விடுதலை செய்க

 
தியாகராசனின் ஒப்புதலைக்  கேட்க :

மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் கண்காணிப்பாளர் தியாகராசன், அதிர்ச்சி தரும் உண்மையை வெளியிட்டுள்ளார்.  இராசீவு காந்திக் கொலைவழக்கு உசாவல் முடிவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பேரறிவாளன் வாக்குமூலத்தில் தன் சொந்தக் கருத்தைச் சேர்த்துக் கொண்டதாகவும், இதனால்தான் வழக்கு  நின்றதாகவும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் பிரிட்டன் ஒலிபரப்புக் கழகத்தின் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், "  தான் சிவராசனிடம் வாங்கிக் கொடுத்த சிறுதிறன் மின்கலம், என்ன பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டது எனத் தெரியவில்லை என்றுதான் தெரிவித்தார். நான்தான், இராசீவைக் கொல்லப் பயன்படுத்தப்படப்போகும்  வெடிகுண்டில் பயன்படுத்தப்படப் போவதை அறிவேன் எனக் கூறியதாகச் சேர்த்தேன். இவ்வாறு இருந்தால் வழக்கு நிலைக்காது என்பதால்நான்தான் அவரது வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி இவ்வாறு சேர்த்தேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதைக் கண்டிப்பாக மாற்றி இருந்திருப்பேன். "   என்று சொல்லியுள்ளார்.


கடந்த 1991ம் ஆண்டு ஆகசுட்டு 14 காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.  எனவேதான் நான் அவ்வாறு சேர்த்தேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்குக் காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான்.
இராசீவு கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு  உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை  ம.பு.ப.வால்(சிபிஐயால்) கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு தியாகராசன் கூறியுள்ளார். 
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் சிறையில் தொலைத்த இளமையை, அமைதியை, வாழ்வை இப்போது திருப்பித்தரமுடியாதுதான். என்றாலும் கொடுமைக்குக்  காரணமான தியாகராசனே, மூவரும் விடுதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உடனே மூவருக்கும் காப்பு விடுப்பு வழங்கிச் சிறையில் இருந்து விடுவிக்க  வேண்டும். பின்னர் தக்க நடவடிக்கை எடுத்து, மூவரின் விடுதலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக