சனி, 17 மே, 2025

பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 





பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்

நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
புலவர் நக்கீரர், பொற்காசுகள் பலவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட மேகலை குறித்து,
பல்காசு நிரைத்த சில்கால்                         (திருமுருகாற்றுப்படை :16)
எனக் குறிப்பிடுகின்றார்.

காவன்முல்லைப் பூதனார் என்னும் புலவர், வேனிற் காலத்தில், உகாஅய் மரக்கிளையினின்றும் அதன் கனிகள் கீழே உதிர்ந்து விழுவன  பொற்காசுகள் போல இருப்பதாக
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
   உகாஅய் மென்சினை உதிர்வன கழியும்                   (அகநானூறு : 293 : 7:8)
எனக் குறிப்பிடுகின்றார்.

குடவாயில் கீரத்தனார்  என்னும் புலவர்,
மேற்கில் இருந்து வீசும் கோடைக்காற்றால், நெல்லிக்காய்கள் உதிர்ந்து கீழே விழுவன, நூல் அறுந்து கீழே விழுந்த துளையுடைய பளிங்கு காசுகள்போல் இருப்பதாகப்,
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூல் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத்து உதிரும் அத்தம்                        (அகநானூறு : 315 : 10-13)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அள்ளூர் நன்முல்லை என்னும் புலவர், கிளியின் வளைந்தவாயில் உள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன்  கூரிய கைந்நகத்தில் உள்ள பொன்காசு போல் காட்சியளிப்பதாகக்
கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்                 (குறுந்தொகை : 67 : 1-4)
என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.

கொன்றை அரும்புகள், செல்வச் சிறுவர்களின் காலில் கட்டப்பட்ட தவளைவாய் போன்ற பொற்காசுகள் போல் உள்ளன என்பதை   இளங்கீரந்தையார் என்னும் புலவர்,
செல்வச் சிறாஅர் சீறடிப்பொலிந்த
தவளை வாஅய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை            (குறுந்தொகை : 148: 1-3)
எனத் தெரிவிக்கின்றார்.

மான் உராய்வதால் குமிழ் மரங்களில் உள்ள பழங்கள்  உதிர்ந்து கீழே பரவிக்கிடப்பது,
பெண் ஒருத்திப் பொற்காசுகளைக் கீழே பரப்பி வைத்துள்ளமை போல் உள்ளதாகக் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர்,
உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்                       (நற்றிணை 274 : 3-5)
எனக்கூறுகிறார்.

மருதன் இளநாகனார் என்னும் புலவர் கைத்தொழிலால் பொலிவு பெற்ற பொற்காசுகள் இடைஇடையே வைத்துக் கோக்கப்பட்ட பொன்மணிகளை உடைய மேகலை பற்றி,
கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ் மேல்
மையில் செந்துகிர்க் கோவை                                       (கலித்தொகை :85: 3-4)
எனக் குறிப்பிடுகிறார்.

உருத்திரன் என்னும் மற்றொரு புலவர்,
புறாவின் முதுகு போன்ற அடியுடைய கொன்றை மரத்தின் பழங்கள் பொற்காசுகள் போல் இருக்கும் என்பதைப்
புறவுப்புறத் தன்ன புன்கால் உகாஅத்து
காசினை அன்ன நளிகனி உதிர                             (குறுந்தொகை : 274 : 1-2)
எனக் குறிப்பிடுகின்றார்.

பொற்காசுகள் குவிந்து கிடந்த தமிழ்நாட்டவர் வெற்றுக் குவளைகளை கையில் ஏந்தும் நிலை வந்தது ஏன் எனச் சிந்தித்தால் விடிவு பிறக்கும் அல்லவா?

வியாழன், 15 மே, 2025

தமிழ் அமைப்புகள் நடத்தும் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் – 18.05.25

புதன், 14 மே, 2025

சனாதனத்தின்படிப், பூணூல் பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 



? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!

     சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே தகுதியானவன் எனப்படுகிறது. 

“திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது  அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.” என முன்பு ஒரு கட்டுரையில் (கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல 12.02.2017) குறிப்பிடப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.

அவ்வாறே பிறர்  பூணூல் அணிந்தாலும் அவற்றிலும் பாகுபாடு காட்டுவதே சனாதனம். பூணூல்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் வருணத்திற்கேற்ப மாறுபடும். பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு,அத்தியாயம் 2 : சுலோகம் 44.) இதை மறைத்துவிட்டு அனைவரும் பூணூல் அணியலாம் என்பது வருணாசிரமம் எனக் கூறுவோரைச் சட்டப்படித் தண்டிப்பதுதான் முறையாகும். 

“சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு” என்னும் நூலில் பூணூல் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று குறிக்கப் பெற்றுள்ளது.

விசுவப் பிரம்ம சங்கத்தார் தங்கள் குலத்திற்கான திருமணங்களைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்றும் பிராமணர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்தனர். பஞ்சாங்கக் குண்டையன் முதலிய பிராமணர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வந்தது. பஞ்சாயத்தார் பிராமணர், பஞ்சாங்கம் குண்டையன் என்பார் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணப்படி மறுமொழி கூற வேண்டும். கூறிவிட்டால் அவர்களே தங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பிராமணர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறினார்கள். பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டுப் பிராமணப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார், “”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தருக்கித்ததும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விசுவப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று” 1818 இல் தீர்ப்பு சொன்னார்கள். இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் வேறு சில பிராமணர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.

     மனுதருமம் கூறியபடி பிராமணர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை மெய்ப்பிக்க இயலாமல் சண்டையில் பிராமணர்கள் இறங்கியதைச் சித்தூர் வழக்கு எடுத்துக் கூறுகிறது.

1896இல் ஃகம்பி(Hampi) ஏம கூட மடத்தில் நடந்த விவாதத்தில் தேவாங்கர்கள் பூணுல் அணிவது தம் உரிமை என மெய்ப்பித்துள்ளனர். இவ்வழக்குகள் எல்லாம் பிராமணர்களின் ஏகபோக உரிமையாகப் பூணூல் கருதப்படுவதையும் அதன் விளைவையும்தான் காட்டுகின்றன. என்ற போதும் பூணூல்  மூலம் பிராமணர்களை உயர்ததுவதே சனாதனம்.

பூணூலின் முதன்மையைக் கூறவந்த மனு “பிராமணன், உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பிராமணர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பிராமணர்களுக்குக் குமுகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனு, “வைதீகமாக இருந்தாலும் உலகியலாக(இலெளகீகமாக) இருந்தாலும் நெருப்பு எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சகலமான சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.

பூணூல் முதலிய பிராமணச் சாதிக்குறிகளைத் தரிக்கிற சூத்திரன் அங்கங்களை அரசன் வெட்டி விட வேண்டும். (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 224) எனச் சனாதனம் சொல்லும்போது யார் வேண்டுமானாலும் பூணூல் போடலாம் என்பது ஏமாற்று வேலைதானே.

(தொடரும்)



வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – தொடர்ச்சி)

வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! 

இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே  பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர் இறப்பு முதலான துயர நிகழ்வுகளைக் குறிக்க இது தோன்றுவதாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை உள்ளது. இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே வால் போல் அல்லது முடி போல் தெரியும் பகுதி உண்மையில் வால் அல்ல என்பதை உணர்ந்தனர். இதன் முன்பக்கம் உள்ள காற்றும் பிற துகள்களும்  அழுத்தம் மிகுந்த சூரியக் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. இவ்வாறு தள்ளப்பட்டுப் புகையாகச்  செல்லும் பகுதியே நமக்கு வால் போல் காட்சியளிக்கிறது. விண்ணில் இவை மிகுதியாகக் காணப்பட்டாலும் யார் யார் முதலில் இதனைக் கண்டு தெரிவிக்கிறாரோ அவர் பெயரே இதற்குச் சூட்டப்படுகின்றது.

ஆனால், பழந்தமிழர்கள்  வெறும் தோற்றத்தின் அடிப்படையில் பிறர் போல் வால் நட்சத்திரம் என்று சொல்லவில்லை. வால் நட்சத்திரம்  என்பது இக்காலத்தில் தவறாக வந்த சொல்லாட்சி.  மேலும் இது நட்சத்திர வகைப்பாட்டிற்குள்ளும் வராது. கழிவுப் பொருள்கள்  எரிந்து தள்ளப்படும் இயல்பை உணர்ந்து புகைக்கொடி என்றே அழைத்தனர். தூமம் என்றால் புகை எனப்பொருள். பின்னர் இதனைத் தூமகேது என்றும் குறிப்பிட்டனர்.


                கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
                 விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்        (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)

என்று  இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

முன்பு (http://natpu.in/natpu/Pakudhikal/Kural/21.php)குறிப்பிட்டவாறு

                 மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
                தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்            (புறநானூறு 117: 1-2)

எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.

மிகச் சிறந்த விண்ணியல் அறிவு இருந்தாலன்றி வெறும் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல் – விண்ணிலுள்ள ஒளிரும் இப் பொருள் நட்சத்திரம் அல்ல என்பதை உணர்ந்து – அதன் அறிவியல் தன்மையை அறிந்து புகைக்கொடி என்று நம் முன்னோர் பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள்.

வானறிவியலில் தலைசிறந்து இருந்த நாம் வான்புகழ் பெற,  இன்றைக்கும் வானறிவியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் அல்லவா?

 



செவ்வாய், 13 மே, 2025

வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள் – தொடர்ச்சி)

14.     வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா?

?       இந்த வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையைத், தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. – இவ்வாறு இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?

       இவ்வாறு ஏய்ப்பது ஆரியர்கள் வழக்கம். தங்கள் கருத்திற்கு எதிர்ப்பு வரும்பொழுது இல்லை என்று கூறித் தவறான விளக்கம் அளிப்பர். பின் தங்களின் மூலக்கருத்தின் பக்கமே நிற்பர். இந்தத் தவறான கருத்தைத் தேவைப்படும் நேரத்தில்  தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர். மேலோட்டமாக இதைப்பற்றி மட்டும் அறிய வருவோர் இதனையே உண்மை என்று நம்புவர். அப்படித்தான் வருண வேறுபாடு பிறப்பால் அல்ல எனக் கூறி அதற்கு அளிக்கும் விளக்கங்களுமாகும்.

தன் குடும்பத்தினர் புரியும் தொழிலில் இருந்து மாறுபட்டு வேறு தொழிலிலும் ஒருவர் ஈடுபடலாம். இதற்குத் தடையில்லை. முடி திருத்துநர் மகன் முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். வேறு தொழிலிலும் ஈடுபடலாம். முடி திருத்துநர் குடும்பத்தைச் சேராத வேறு பலரும் இன்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபடுதைப் பார்க்கிறோம். எனவே, யாரும் எப்பணியையும் பார்ப்பதற்குத் தடையில்லை.

மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவராகலாம், வேறு தொழிலிலும் ஈடுபடலாம். இதேபோல்தான் பிற தொழில் பார்ப்பவர்களின் பிள்ளைகளும் அவர்களின் வழி முறையினரும் எப்பணியும் பார்க்கலாம். ஆனால் பிராமணன் சத்திரியனாகவோ சூத்திரனாகவோ ஆக மாட்டான். சத்திரியனோ சூத்திரனோ பிராமணனாகவோ பிற சாதியனாகவோ ஆக முடியாது. சூத்திரன் மகனைப் பிராமணன் ஆக்கி அவனை அருச்சகராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வருண வேறுபாடு இ்லை என்றால் அனைவரும் அருச்சகராகலாம் என்னும் தமிழ்நாட்டரசின் திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதேன்? சிதம்பரத்தில் தீட்சிதர்கள் ஆட்டம் போடுவதேன்? பிறப்பு அடிப்படையில் வருண வேறுபாட்டை வலியுறுத்துவதே சனாதனம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கீதை விரிவுரை ஒன்றில் இது குறித்துத் தெளிவாகக் குறிக்கப் பெற்றுள்ளதையும் பார்ப்போம்.

“எல்லாருக்கும் பொதுவான புலன் அடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வருணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால் அவனுக்குப் பாவம்தான் ஏற்படும். முதலாவதாக, வருண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூற முடியாது. இரண்டாவதாகச், சீவர்கள் முன்வினைப்பயனைத் துய்க்க (அனுபவிக்க) வேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக் கேற்றவாறு அந்தந்த வருணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை.”

“மூன்றாவது நடத்தையை மட்டும் வைத்து இன்ன வருணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல். ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் பிராம்மணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வருணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வருணத்தை வரையறுப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக்கொள்வார்? இதனால் உணவுப் பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே செயலினால் மட்டும் வருண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.“ (சிரீமத்து பகவத்(து)கீதா (தத்(து)வவிவேசனீ – தமிழ் விரிவுரை)

இவ்வாறு கீதை வல்லுநர்கள் மிகத் தெளிவாக வருண அடிப்படையில்தான் வேறுபாடு; தொழில் அடிப்படையில் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளனர். ஆனால் கீதையின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பை இல்லாமல் ஆக்குவதற்காக அல்லது குறைப்பதற்காக இவ்வாறு தவறான விளக்கம் தருகின்றனர். மேலும் இத்தகைய கருத்துகளை இடைச்செருகல்களாகவும் புகுத்தி விட்டுப், பாருங்கள், பாருங்கள் யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம், வருண வேறுபாடு கிடையாது என்று கூவுகின்றனர்.

15.     இல்லையே! வருணங்கள் செய் தொழிலால் வகுக்கப்பட்டவை என்று இரங்கராசு மீண்டும் மீண்டும் கதை அளக்கிறாரே!

       அதுதான் கதை அளக்கிறார் என்று சொல்லியாகி விட்டதே! ஆனால் இவர்தான் முதலில் இவ்வாறு கதையளக்கவில்லை. வருண வேறுபாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கும் பொழுதெல்லாம் வருண ஆதரவாளர்கள் இவ்வாறு மக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒற்றை எழுத்து எழுத்தாளர்கூட இவ்வாறு மக்களை ஏமாற்றியுள்ளார். ஆனால் வருணவாதிகளே தெளிவாக இவர்கள் சொல்வதற்கு  மாறாக வருணத்திற்கேற்பத் தொழில் வேறுபாடே  வாழ்வியல் அடிப்படை என விளக்கியுள்ளனர்.

”சமுதாயத் துறையிலோ பிராமணர் வேறு, பிராமணரல்லாதார் வேறு. அஃதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக்கூடாது என்று கருதி, இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமணப் பட்டமும் பிரம்மப் பட்டமும், ஆச்சாரியார் பட்டமும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு விட்டன” என்று 07.08.1938 குடிஅரசு தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதினார்.

இராசகோபாலாச்சாரியார் பிராமணருக்கு இணையாக விசுவகர்ம சாதியார் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போடக்கூடாது; ”ஆசாரி” என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.

“பிற சமூகத்தார், தங்கள் சமூகத் திருமணங்களைத் தாங்களே நடத்திக் கொள்ள ஆரியப் பிராமண ஆதார நூல்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பிற சமூகத்தார், தாங்களும் பிராமணர்கள் என்பதைக் காட்டப் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்  தாங்களும் பூணூல் போட்டவர்கள், உயர் வகுப்பார் என்று  பிற வகுப்பார் சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? என்பதையும் எல்லாம் வல்ல சக்தி படைத்தது பிராமணர்கள் போட்டிருக்கும் பூணூலே என்பதையும் பூணூல் போட்டிருக்கும் பிராமணர் அல்லாதவர்கள் யோசித்துப் பார்க்கும்படி”யும் பெரியார் வேண்டினார்.

எனவே, செய்தொழிலுக்கும் வருணத்திற்கும் தொடர்பு இல்லை.

ஞாயிறு, 11 மே, 2025

“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்



(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி)

10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.

       ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள்.

வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி இலக்குவனுக்குப் புத்தர் நினைவகங்களைக் காட்டுகிறான். பொதுவாகப் புதிய ஊருக்கு வருகையில் நினைவகங்களைப் பார்ப்பது வழக்கம். சென்னை வந்தால் அண்ணா நினைவகம், கலைஞர் நினைவகம், தில்லி வந்தால் காந்தி நினைவகம், நேரு நினைவகம் முதலியவற்றைப் பார்ப்பது இல்லையா? அதுபோல்தான். புத்தரின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு. அப்படியானால் இராமாயணக் காலம் அதற்கும் பிற்பட்டது என்பதுதானே உண்மை.

11.     சனாதன தருமம் என்றால் இந்துமதமா?

       “‘சனாதன தருமம்’ என்பது இந்து மதத்தைக் குறிப்பிடுவதற்கான வார்த்தை என அருத்தம்” என்று விக்கிபீடியா சொல்வதாக இரங்கராசு பாண்டே கூறுகிறாரே!

       அவர் தன் விருப்பம்போல் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் Santana Dharma – is an endonym used by Hindus to refer to Hinduism என உள்ளது. endonym என்றால் குழுப்பெயர். அஃதாவது, பிற குழுக்களால் வழங்கப்பட்ட பெயருக்கு மாறாகத், தங்களை அல்லது தங்களின் மொழியைக் குறிக்க ஒரு குழு அல்லது ஆட்களால் பயன்படுத்தப்படும் பெயர் என விளக்குவர். இதிலிருந்தே இதற்கு மாற்றுப் பெயர் மக்களிடையே உள்ளது எனவும் ஆரியர்கள் தங்கள் வசதிக்காகவும் நலனுக்காகவும் இவ்வாறு  விளக்கமளிக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

மேலும், இதே விக்கிபீடியா, “இதனை ஆரிய மதம் என்றும் கூறுவர். ஏனென்றால் ஆரிய இன மக்களுக்காக வழங்கப்பட்ட மதமாகும்” என்பதை அவர் காணவில்லையா? கண்டிருப்பார். ஆனால் வசதியாக மறைத்துவிட்டார். ஆரிய இன மக்களுக்காக  வழங்கப்பட்ட ஆரிய மதம் என்பது உலக மக்களுக்குப் பொதுவானதாக எப்படி இருக்க முடியும்?  அடிப்படையிலேயே ஆரியத்திற்கு மாறாக உள்ளத் தமிழ்க்குடும்ப மொழியினர் அல்லது திராவிட மொழியினருக்கு  எங்ஙனம் நன்மை பயப்பதாக இருக்கும்?

12.     சனாதனத்தை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியா?

       சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்று ஆளுநர் இர.நா.இரவி குற்றம்சாட்டுகிறாரே!

       உண்மையில் மக்களிடையே பிளவுகளையும் அவற்றின்வழி உயர்வுதாழ்வுகளையும் புகுத்தும் சனாதனம்தான்  நாட்டைப் பிளவுபடுத்தி வருகிறது. இஃது இன்னும் தொடர்ந்தால் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும். பிறப்பு அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத தமிழ்நெறியே உயர்ந்த நெறி. உயர்ந்த நெறி இருக்கும் பொழுது கெடு நெறியை ஏன் போற்ற வேண்டும்?

13.     வருணாசிரமம் அதிகாரப் படிநிலைதான். பாகுபாட்டைக் குறிப்பிடவில்லை என்பது சரியா?

       வருணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஓர் அதிகாரப் படிநிலையாகத் தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாகக் குறிப்பிடவில்லை. ஒரு கட்சியில், எப்படி,  தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், மாவட்டத் தலைவர், நகரச் செயலாளர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அதுபோல நான்கு வருணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. – இவ்வாறு மேதை இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?

       அறிவுபூர்வமாக விளக்குவதாக எண்ணி விடப்படும் பொய்மைக் கூற்று இது. கட்சியில் பல் வேறு நிலைகளில் பொறுப்புகள் உள்ளன. அவற்றுக்கேற்பப் பொறுப்பாளர்கள் உள்ளனர். ஆனால், இன்றைக்கு ஒரு பொறுப்பில் உள்ளவர் நாளைக்கு வேறு பொறுப்பிற்கு மாற்றப்படலாம் அல்லது தெரிவு செய்யப்படலாம். அல்லது நாளை எந்தப் பொறுப்பும் இல்லாமல் போகலாம். அதுபோல் இன்றைக்கு எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் நாளைக்கு வேறு பொறுப்பிற்கு வரலாம். அஃது உயர் பொறுப்பாகவும் இருக்கலாம். ஆனால், இன்றைக்குப் பிராமணனாக உள்ளவன் நாளை சூத்திரனாக முடியுமா? அல்லது சூத்திரனனாக உள்ளவன் நாளை பிராமணனாக முடியுமா? சாதியை மாற்றிக் கொள்ள முடியுமா? இல்லையே! அப்புறம் ஏன் இந்த விதண்டை விளக்கம் – விதண்டா வாதம்? பிராமணனுக்குரிய தொழிலைப் பிறர் செய்யக்கூடாது என்றுதான் மனு தெளிவாகக் கூறுகிறதே! அப்படியானால் இந்தப் பொய் எதற்கு?

(தொடரும்)