வியாழன், 30 நவம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளை சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்ஷி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கி சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் ஜி. ஜான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார் குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு ஜி. ஜான் சாமிவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழை சிறப்பு பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வேட்டியுடனும் ஜிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு ஜான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் பிரதியாக நூலாக பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு ஜி. ஜான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. ஜான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ் புலவர்களின் ஓலைச்சுவடிகளை தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. ஜான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனதில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு ஜான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையை திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு ஜான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு ஜான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாக திரு ஜான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 304

புதன், 29 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்- தொடர்ச்சி)

கல்லூரியில் சாதி விளையாட்டு

இனிய அன்பர்களே!
தாழி (292) மடலில் நான் படித்த குடந்தை அரசினர் ஆடவர் கலை அறிவியல் கல்லூரியைப் பற்றி தேம்சு கரையில் கேம்பிரிட்சு போலக் காவிரிக் கரையில் எங்கள் கல்லூரி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

இந்த மடலின் முடிவில் இப்படி எழுதினேன்: “எப்படி இருந்த குடந்தைக் கல்லூரி இப்போது இப்படி ஆகி விட்டதே! என்ற ஆதங்கத்தால்தான் இவ்வளவு கதையும் சொன்னேன். அன்று பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதவர் என்று பிரிந்து நின்ற கல்லூரியில் இப்போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் சாதியால் பிரிந்து நிற்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.”

அக்காலத்தில் கல்லூரி மாணவர்களிடையே கட்சி அரசியல், பார்ப்பனர்-பார்ப்பனரல்லதார் அரசியல் இருந்தனவே தவிர சாதி மத அரசியல் என்று எதுவும் கண்டதில்லை. குடந்தை என்பதால் பார்ப்பன மாணவர்கள் ஒப்பளவில் கூடுதலாக இருந்தனர். அக்காலத்தில் அவர்களிடையே இராசகோபாலாச்சாரியாரின் சுதந்திராக் கட்சிக்கு ஓரளவு ஆதரவு காணப்பட்டது. அவர்களிலும் பலர் காங்கிரசு ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களிடையே கூடக் கிட்டத்தட்ட இதே நிலைதான். எப்படியும் சாதி அரசியலோ மத அரசியலோ காணப்படவில்லை. ஆர்எசுஎசு சார்புடையவர் என்று மாணவர்களிடையிலோ ஆசிரியர்களிடையிலோ யாரையும் கண்டதில்லை. முசுலிம் மாணவர்களும் இருந்த போதிலும் அவர்கள் எந்த இசுலாமியக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. காங்கிரசுக்கோ திமுகவிற்கோ ஆதரவாக இருந்தார்கள். இடதுசாரி அரசியல் என்றால் அப்போதுதான் துளிர் விட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கால நிலையுடன் ஒப்பிட்டால் இப்போது என்ன நடக்கிறது? அண்மையில் ஒரு வகுப்பறையில் நடந்ததாக அங்கு பயிலும் மாணவர் ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.

அது புவியியல் வகுப்பு. முது அறிவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைப் பார்த்து உதவிப் பேராசிரியர் சொல்கிறார்:

“உலகில் முசுலிம்களுக்கென்று நாடுகள் உள்ளன. கிறித்தவர்களுக்கும் நாடுகள் உள்ளன. இந்துக்களுக்குத்தான் நாடே இல்லை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.”

இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி விரிவுரை ஆற்றி விட்டு, சாதியத்தின் தேவையைச் சொல்கிறார்: “சொந்த சாதிக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். சாதி விட்டுச் சாதி திருமணம் செய்வது நல்ல நீருடன் சாக்கடையைக் கலப்பது போன்றதாகும்.”

மாணவர்களில் தணிந்தவர்(தலித்துகள்) யார் என்று அந்த உதவிப் பேராசிரியருக்கு நன்கு தெரியும். அவர்களைப் பார்த்துப் பேசுகிறார்: “நீங்கள் எல்லாம் ஏன் படிக்க வருகின்றீர்கள்? பணம் இருந்தால் படிக்கலாம். நீங்கள் ஊரில் விவசாய வேலை பார்க்க வேண்டியதுதான்.”

அந்த உதவிப் பேராசிரியர் வகுப்பறையில் மட்டுமல்ல, தொடர்ந்து பொதுவெளியில் இந்தக் கருத்துகளைப் பரப்பி வந்தார். அவர் பார்ப்பனரல்ல. சாதிப் பெருமை பேசும் இடைச்சாதிக்காரர்.

இந்த உதவிப் பேராசிரியரின் மதவாத, சாதியப் பரப்புரை தணிந்த(தலித்து) மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை ஈட்டியது. அவர்களும் இடதுசாரி மாணவர்களும் இந்த உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராடினார்கள். அவர் குடந்தையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அதே மதவாத, சாதியக் கருத்துகளைப் பேசப் போய் மாணவர்களிடையே எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் அவரை மாற்றினார்கள் – பழைய இடத்துக்கே!

அவரும் அவர் சாதியத்துக்குத் துணை போகும் அதே துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதை வெற்றியாகக் கொண்டு, தணிந்த(தலித்து) மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஆசிரியர்களையும் பழிவாங்க முற்பட்டார்கள். மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்தது. உதவிப் பேராசிரியர் மீண்டும் மாற்றப்பட்டார்.

பேராசிரியர்களின் இந்தச் சாதி விளையாட்டுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககமும் உடந்தையோ? என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் சாதியப் பேராசிரியரை மாற்றினால் அவர் விரும்பும் வசதியான ஊருக்கு மாற்றுவது, அதே நேரம் தணிந்த சாதியினராகவோ(தலித்தாகவோ) தணிந்தோர்க்கு (தலித்துக்கு) ஆதரவாகவோ இருக்கக் கூடிய பேராசிரியரைத் ‘தண்ணியில்லாக் காட்டுக்கு’த் தூக்கியடிப்பது என்ற நடைமுறைதான் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குடந்தைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடர்பான பணியிட மாற்றல்கள் ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும், தமிழ்நாடு முழுக்க இதே நிலைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்துதேசப் பக்தராகிய சாதியப் பேராசிரியர் குறித்து மாணவர் இளந்தென்றல் தமிழக அரசுக்கும் மாநில எசுசி எசுடி ஆணையத்துக்கும் முறைப்பாடு செய்தார்.

எசுசி எசுடி ஆணையம் அவரை நேரில் அழைத்தும் விசாரித்தது. சாதியப் பேராசிரியர் வகுப்பறையிலும் வெளியிலும் செய்துவரும் இந்துத்துவ, சாதியப் பரப்புரை பற்றி இளந்தென்றல் விரிவாக எடுத்துரைத்தார். ஆனால் ஆணையத்தின் தலைவர் ‘நீதியரசர்’ பொ. சிவக்குமார் தமது ஆணையில் இளந்தென்றலின் முறைபாடுகளைப் பதிவு செய்து விட்டு, முடிவில் கூறுகிறார்:

“மேற்சொன்ன ஆசிரியர் மாணவர்களிடம் பிற்போக்குக் கருத்துகளைப் பரப்பி வருகிறார் என்பதைத் தவிர வேறு எந்த வகையில் இவ்வாணையத்தினால் மனுதாரரது மனு பரிசீலிக்கத்தக்கது? என்பதை மனுதாரரால் தெளிவுபடுத்த இயலவில்லை.”

ஆக, எசுசி எசுடி ஆணையத்துக்கு மேற்சொன்ன ஆசிரியரின் பிற்போக்குப் பேச்சு பரிசீலனைக்குரிய ஒரு முறைப்பாடாகவே தெரியவில்லை.

எசுசி எசுடி ஆணையத்தின் இந்த அணுகுமுறை கல்விக் கூடங்களில் மதவாதத்துக்கும் சாதிவெறிக்கும் உரிமம் வழங்குவதாகவே புரிந்து கொள்ளப்படும்.

இதே குடந்தை கல்லூரியில் தணிந்த(தலித்து) மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவான ஆசிரியர்களும் சாதிய ஆசிரியர்கள் சிலரால் குறிவைத்துப் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டப்படுகினறன. தமிழ்க் குமுக ஓர்மையைச் சிதைக்கும் மாணவர்களின் கல்வியைச் சிதைத்து கல்விச் சூழலை நஞ்சாக்கியும் வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 302

செவ்வாய், 28 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி)

கீற்று) நேர்காணல் (3)(இ

திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு

நேர்காணல்: மினர்வா & நந்தன்

திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.

திராவிடர் கழகத்தோடு எங்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் முறையாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?

குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய சிக்கல் அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான சனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக் கொண்டு ஈழச் சிக்கலைப் பார்க்கக் கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.

ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்குப் பரிசூதியம் 12 விழுக்காடா, 13 விழுக்காடா என்று போராட்டம் நடத்தி விட்டுத் தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?

புலிகளுக்குச் சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் சோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து?

புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வருக்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில்தான் இருக்கிறார்கள். சாதி குறித்துத் தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கியக் கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் வரன் தேடுவதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.

அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.

ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். செயசிக்குறு எதிர்ப்புப் போரை பெண்கள்தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூசாதான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதைச் சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கியுள்ளன.

போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்குக் குடியேறிய உயர்சாதி மக்களின் வீடுகளைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காகப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

ஈழப் படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத் துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச் சாதியினரைக் கொண்டுவந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப் புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறுதான்.

என்னைப் பொறுத்த வரை சோபா சக்தி போன்றவர்கள், புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் பைத்தியங்கள், அல்லது அரசின் கைக்கூலிகளாகக் கூட இருக்கலாம், அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?

அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான். ஓர் இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அஃது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல், அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்தான். கடைசி வரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் சனநாயகத் தன்மையைக் கட்டமைக்காதது, ஒரு பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வீரமணி போன்றவர்கள் இப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ இல்லாததால்தான், அவர் பெயரைச் சொல்லிச் செயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டா என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.

ஆனால் நாம் விரும்பக் கூடிய சமூகநீதித் தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்துதான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டு அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அருத்தத்தில்தான் அவரைத் தந்தை என்கிறோம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது என்பதற்காகத் திராவிட இயக்கம் கைக் கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்கிறேன், அப்பா சொல்கிறேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். சனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நாம் அந்தக் கோணத்தில் அவரைத் தந்தையாகப் பார்க்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் எந்த அளவுக்குச் சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?

சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வருக்கங்கள், அரசுகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரித்தானிய அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்தப் பிரித்தானியப் பேரரசு உங்களை ஆளும் பொறுப்பைச் சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

இந்தியாதான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வருக்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தைப் புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமற்போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால்தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரத தேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வருக்கத்தின் வெற்றி.

தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதைச் சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்குப் போராடுவதுதான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்குத் தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.

தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருண்மிய ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.


(கீற்று நேர்காணல் முற்றும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 301

திங்கள், 27 நவம்பர், 2023

ஆளுமையர் உரை76,77 & 78 : இணைய அரங்கம்-03.12.2023

 


தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்

 







(தோழர் தியாகு எழுதுகிறார் : மொழிக்கொள்கை – தொடர்ச்சி)

பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்

தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்?

அமைப்புகள் என்பதே கருத்துகளின் வெளிப்பாடுதான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன? என்பதுதான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, ‘தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாகச் செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.

விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் பொதுமுழக்கமாக ‘தமிழ்த்தேசிய இறையாண்மை’ என்பதை வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. முதலில் எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து இயங்குவது, பின்னர் அதை கூட்டமைப்பாக மாற்றி, காலப்போக்கில் ஒரே அமைப்பாகக் கொண்டுவந்து விடலாம் என முடிவு செய்தோம். நெடுமாறன், ‘நாம் மூன்று அமைப்புகள் மட்டும் இணைந்தால் போதாது, தமிழ்நாட்டில் நம்மைப் போல் எண்பது அமைப்புகள் உள்ளன. அனைவரும் இணைந்து இயங்கலாம்’ என்றார்.

இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடு இருந்தது. ‘இந்த மூன்று அமைப்புகள் மட்டும்தான் தீவிரமாக வேலை செய்யும். மற்றவர்களிடம் அந்தத் தீவிரம் இருக்காது. எனவே பெயரளவுக்கு மன்றம் வைத்திருப்பவர்களை எல்லாம் நம்முடன் இணைத்துக் கொண்டால் அஃது அரசியல் இயக்கமாக இருக்காது’ என்று கூறினேன்.

என்னுடைய முக்கியமான கோரிக்கையாகத் தேர்தல் புறக்கணிப்பு இருந்தது, பெ.மணியரசனுக்கு அதில் உடன்பாடு இருந்தது. அதை நெடுமாறன் ஒத்துக் கொள்ளவில்லை. ‘நமக்கு ஆதரவான சக்திகள் போட்டியிடும்போது அதை ஆதரிக்க வேண்டும். பிற்காலத்தில் நாமே போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பவரோடு எப்படி ஒன்றுசேர முடியும்? பார்க்கிறவர்களுக்கு அவர் தமிழ்த் தேசிய பெருந்தலைவராக இருக்கலாம்; பத்திரிகைகள் அவருக்கு முக்கியத்துவம் தரலாம். அதற்காகவே எல்லாரையும் ஒன்றுசேர்த்து விட முடியாதே!

அதே நேரத்தில் தனித்தனி கொள்கைகள் இருப்பதாலேயே, இந்தி எதிர்ப்பு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடாமலும் இல்லை.

புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஒரு தோழர், ‘எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது, ‘எதற்காக எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்? எல்லாப் பொதுவுடைமையர்களும் ஒன்று சேர்ந்து அஃது ஒரு சிறு குழுவாக மக்கள் மத்தியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு பொதுவுடைமைக் கட்சி வெகுமக்களைத் திரட்டி புரட்சி செய்தால் போதுமானது. அப்படித்தான் உலக வரலாற்றில் மாற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன’ என்று குறிப்பிட்டேன்.

அதுபோலத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் நூறுபேர் கொண்ட ஒரு குழுவாக இருப்பதற்குப் பதிலாகத், தமிழ்த் தேசியவாதிகளில் ஒழுங்காகச் செயல்படுகிற பத்துப் பேர் தமிழ்த் தேசியச் சிக்கலை சரியாகப் புரிந்து கொண்டு மக்களைத் திரட்டி மாற்றம் கொண்டு வர முடியுமானால் அதுதான் முக்கியமானது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இந்த சேர்க்கை முரண்பாடாகத்தான் இருக்கும்.

இதில் எனக்கு சுபவீயோடும் முரண்பாடு இருக்கிறது. சமூகநீதி மாநாட்டில் பேசும்போது, ‘மண்டல் குழுவை நாம் ஆதரிக்கிறோம், வடநாட்டில் எதிர்க்கிறார்கள். அதை எல்லோரும் இணைந்துதான் செயற்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? நமக்கு உடன்பாடு இருந்தாலும் அதை நாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவருக்கும் ஒரே அரசமைப்புச் சட்டம் என்ற அமைப்புதான் தடையாக இருக்கிறது. எனவே சமூகநீதியுடன் கூடிய தனி அரசு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று பேசினேன்.

‘விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் தேவையற்றது, தீர்மானத்தை உடனடியாகக் கைவிடவும்’ என்று சுபவீ கோரினார். மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம், தமிழ்வழிக்கல்வி, இட ஒதுக்கீடு இந்த மூன்று கோரிக்கைகளும் போதுமானவை என்பது அவரது கருத்து. இப்படிக் கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற பெயர் இருப்பதாலேயே நாங்கள் அனைவரும் எப்படி இணைந்து இயங்க முடியும்? தமிழ்த் தேசியம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஓர் அறிவியல் கண்ணோட்டம். சமூக மாற்றம் பற்றிய ஓர் அறிவியல் பார்வை. அந்த அறிவியலை எந்த ஒற்றுமைக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

தமிழ்மொழிப் பாதுகாப்பு, ஈழச் சிக்கல் போன்றவற்றின் வழியாகப் பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளோடு இணைந்து செயல்பட முயல்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இஃது எந்த அளவுக்கு உண்மை?

சமீபத்தில் கூட ஈழச்சிக்கலுக்காக நெடுமாறனும் இல.கணேசனும் இணைந்து பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டு கூட எழுந்தது.

நாங்கள் பா.ச.க.வோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து செயலலிதாவுக்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய்ப் பேசினார். ‘இராசாசியைப் போல் திறமையானவர் செயலலிதா’ என்று பாராட்டிப் பேசினார். அஃது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பா.ச.க.என்பது இந்தியத் தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்தைக் கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையைப் பா.ச.க.வால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.

அதே நேரத்தில் பா.ச.க.வின் பின்னால் இருக்கிற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தமிழர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வந்தபோது பா.ச.க.வினரும் பொதுவுடைமையர்களும் இணைந்து போராடினார்கள். தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். பா.ச.க.வின் எந்தக் கொள்கையையும் பொதுவுடைமையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைக்காக நம்முடன் இணைந்து போராட வரும்போது புறக்கணிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. அதற்கு நாம் பொறுப்பேற்கவும் முடியாது. பா.ச.க.வோடும் சரி, காங்கிரசோடும் சரி எங்களுக்கு எந்த உறவும் கிடையாது.

((தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300

ஞாயிறு, 26 நவம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : மொழிக்கொள்கை

 


(தோழர் தியாகு எழுதுகிறார் : குறள்நெறி  – தொடர்ச்சி)

சிறு தெய்வ வழிபாடும் மொழிக் கொள்கையும்

தமிழ்த் தேசியவாதிகள் ஆரியமயமாகிவிட்ட சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிப்பது குறித்து?

ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்துதான் ஓர் இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது? எப்படி வளர்ந்தது? என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய செய்தி.

முருக வழிபாடு எப்படித் தோன்றியது? குலத் தலைவர்கள் எப்படித் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள்? என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. இப்போதைய சூழ்நிலையில் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளை கடவுளாக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? என்று வேண்டுமானால் நாம் யோசிக்கலாம். இந்த வழிபாட்டு முறைகள், அதில் வெளிப்படுகிற மெய்யியல் சிந்தனைகள், அதில் வெளிப்படுகிற போராட்டப் பதிவுகள் இவையெல்லாம் ஒரு தேசிய இனத்தினுடைய வரலாற்று ஆழங்களிலிருந்து வளர்ந்து வருபவை.

மார்க்குசியம், தத்துவம் என எல்லாவற்றிலும் மாவோ தேர்ச்சி பெற்றவராய் இருந்தாலும் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் சீனாவின் வரலாற்றை மிகத் தெளிவாக அவர் புரிந்து வைத்திருந்ததுதான். இலெனினும் இரசியாவின் வரலாற்றில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தார். இங்குள்ள தலைவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

நம்முடைய வரலாறு என்பதை திருவள்ளுவரில் தொடங்கி முருகவழிபாடு, வள்ளலார் என எல்லாவற்றில் இருந்தும்தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக முருகனை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிறுதெய்வ வழிபாடு குறித்து விவாதிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம் ஆனால் அதுவே சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்து விடாது.

மாவோ குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. இங்குள்ள நக்குசலைட்டுகள் நம் சமூகச் சூழ்நிலையை உள்வாங்காமல் செயல்படுவதாக ஏற்கெனவே குறிப்பிட்டீர்கள். இப்போதைய நக்குசலைட்டுகளின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச் சமூகம் பற்றிய, ஆளும் வருக்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்குசலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டுவர முடியாது. இப்போதைய நக்குசலைட்டுகள் மரபுவழிக் கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆரம்பத்தில் சாரு மசூம்தார் சீனாவை அப்படியே படிஎடுத்தார்(காப்பியடித்தார்). மாவோ சீன முதலாளிகளைத் தரகு முதலாளிகள் என்றார். இவரும் அதே வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் சீனா ஓர் அரைக்குடியேற்ற(காலனிய) நாடு என்றார், சாருவும் இந்தியாவை அரைக்குடியேற்ற(காலனிய) நாடு என்றார். மாவோ விவசாயப் புரட்சியைச் சிற்றூர்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார். இவரும் அதையே சொன்னார். சீனா அப்போது தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது அதனால் அங்குத் தொழிற்சங்கங்கள் இல்லை. இங்கிருந்த தொழிற்சங்கங்களையும் சாரு மசூம்தார் கலைக்கச் சொன்னார். அங்கு நாடாளுமன்றம் இல்லை, அதனால் மாவோ தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு நாடாளுமன்றம் இருந்தும் இவர்கள் போட்டியிடவில்லை.

இந்தப் பார்வையில் இருந்து முழுமையாக இப்போதைய இயக்கவாதிகள் விடுபட்டு விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நான் ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தொடர் எழுதும் போது மா.இலெ.(எம்-எல்.) தோழர்கள் சிலர் ‘நக்குசலைட்டுகள் பற்றி எழுத வேண்டா, அது எதிர்வினையை ஏற்படுத்தி விடும்’ என்று கூறினார்கள். ‘அப்படி எதிர்வினை ஏற்பட்டால் மகிழ்ச்சிதான், ஏனெனில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் போது, பல்லாயிரம் பேர் ஓர் இயக்கத்தை நம்பி எல்லாவற்றையும் துறந்து அந்த இயக்கத்தில் சேரும் போது அதன் தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கக் கூடாது, பொறுப்புணர்வோடு அந்தப் போராட்டத்தை நடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் இயக்கத்தைத் தவறாக வழிநடத்துபவர்களை அவசரக் குடுக்கைகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை’ எனக் கூறினேன்.

நக்குசலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிச வாழ்க்கை அதை அங்கீகரிக்காத போது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி.

சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும் போது, அந்த மாற்றத்தைச் செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும் போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வுநிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது. இதுபோன்ற செயல்களை இலெனின் ‘செயலற்ற தீவிரவாதம்’ என்று குறிப்பிடுவார். அந்தச் செயலற்ற நிலையைத்தான் இப்போதைய நக்குசலைட்டுகளிடம் நான் பார்க்கிறேன்.

சமீபத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது வழங்கிச் சிறப்பித்தது. அதே மேடையில் மகாலிங்கம் சமற்கிருதத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து…

மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதில் என் பங்கு எதுவும் இல்லை. நெடுமாறனுடைய முடிவு அது. எனக்கு அதில் உடன்பாடு இல்லா விட்டால் நான் அங்குச் சென்றிருக்கவே கூடாது அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சென்ற பிறகு அந்த மேடையில் அழைத்தவர்களையே தாக்கிப் பேசுவது நாகரிகமாக இருக்காது. சமற்கிருதத்தின் முதன்மை பற்றி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசியதை வைகோ அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார்.

மொழிக்கொள்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருமொழிக் கொள்கைதான் சரி என்றும், இருமொழிக் கொள்கையால் ஆபத்து இல்லை என்றும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

தேசிய இனம் என்பதே ஒருமொழி அடிப்படையிலானது. எனவே தம்மொழி முதன்மை பெற வேண்டும் என்கிற போதே ஒருமொழிக்கொள்கை தான் சரி. ஆங்கிலத்தைத் தேவை கருதி பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு இருமொழிக் கொள்கை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இருமொழிக்கொள்கை என்று வரும்போதே தமிழையும் ஆங்கிலத்தையும் சம இடத்தில் வைக்கிறோம் என்றுதானே அர்த்தம்?

காங்கிரசுகாரர்கள் சொல்லும் மும்மொழிக்கொள்கை என்பது இந்தி ஆதிக்கம்தான். அதேபோல் இருமொழிக் கொள்கை என்பது ஆங்கில ஆதிக்கக் கொள்கைதான். அதாவது மும்மொழிக்கொள்கை என்பது இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கை. இருமொழிக்கொள்கை என்பது ஆங்கிலம் என்கிற ஒருமொழிக் கொள்கை.

எல்லாப் பாடத்திட்டங்களும் தமிழில் இல்லாத நிலையில் நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டால் தமிழ் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?

ஆங்கிலத்தில் இருக்கும் போது அதை அப்படியே படிப்பதில் தவறில்லை. அதைத் தமிழில் மாற்றுவதற்கு இங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பொறியியல், மருத்துவ படிப்புகள் இப்போது ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அதைத் தமிழில் கொண்டுவரும் வரை அந்தக் கல்லூரிகளை மூடி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதைத் தமிழில் கொண்டுவருவதற்கு என்ன தடை? என்றுதான் கேட்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300