வெள்ளி, 4 நவம்பர், 2022

உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!

அகரமுதல





பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு!

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது.

திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றினார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பெரியாரியல் சிந்தனையாளர், தமிழின அடையாள மீட்பர், தமிழ் மெய்யியல் மீட்பர், சிறந்த தமிழறிஞர், தமிழ்த் தேசப் பேரொளி முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும், கடந்த மாதம், செம்மொழி நிறுவனத்தின் கலைஞர் பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க. தாலினிடம் இருந்து பெற்றார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், சித்தன்ன வாசல், ஆசீவம் என்னும் தமிழர் அணுவியம், சங்க காலத் தமிழர் சமயம், தமிழரின் அடையாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும், ஐயனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு ஆசீவகம் பற்றிய ஆய்வில் முக்கியமானது.

சாதி மறுப்பு திருமணம் செய்தவர் பேராசிரிய க. நெடுஞ்செழியன். திராவிட இயக்கங்களிலும் தமிழ் அரசியலும் ஈடுபாடு கொண்டவர். மறைந்த திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்.

இவருக்கு மனைவி சக்குபாய், மகன் பண்ணன், பெண்மக்கள் நகைமுத்து, குறிச்சி, மருமக்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் வீட்டில் வசித்து வந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவப் பண்டுவத்திற்காகச் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.

பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் மறைவு தமிழ் ஆய்வாளர்கள், திராவிட இயக்கத்தினர், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு முதலமைச்சர் மு.க. தாலின், தலைவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.தாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகத்து மாதம்தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ தான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள். தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்” என்று நான் குறிப்பிட்டேன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு பொது மருத்துமனைக்கு நேரில் சென்று பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என மதுரை நா.உ.,எழுத்தாளர்,சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பெரும் பங்களிப்பை செய்த ஆய்வறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழர் சிந்தனை மரபை நிலைநிறுத்தக் கருத்தியல் தளத்திலும், களத்திலும் அவர் நிகழ்த்தியுள்ள போராட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய உடல் திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரான படுகையில் சனிக்கிழமை (நவம்பர் 5) நல்லடக்கம் நடைபெற உள்ளது.

– தமிழ்.இந்தியன் எக்சுபிரசு 04.11.2022

+++

க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15, சூன் 1944 – 4 நவம்பர் 2022) தமிழகத் தமிழறிஞரும், ஆய்வாளரும் ஆவார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற 18 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “தமிழரின் அடையாளங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள்

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் (1989)

தமிழர் தருக்கவியல்

தமிழரின் அடையாளங்கள்

சங்ககாலத் தமிழர் சமயம்

தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்

ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்

தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) (2000)

உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்

சமூக நீதி

சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் (2007)

மரப்பாச்சி (2010)

தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும் (2010)

சித்தண்ணவாயில்

ஆசிவகமும் ஐயனார் வரலாறும் (2014)

– விக்கீபீடியா

+++

பேரா.நெடுஞ்செழியன் ஐயாவின் மறைவு தமிழனத்திற்கு ஒரு பேரிழப்பாகும்!

தமிழ் தேசியத்தையொட்டி, அவரோடு பல நேரங்களில் பயணித்த போதும், 2005-இல் அவர் ஐயா பெங்களூர் (வெங்காளூர்) குணா-வோடு வெடி மருந்து வைத்திருந்ததாகவும், முதன்மைக் கன்னடத் தலைவர்களைக் கொலை செய்யச் சதி செய்ததாகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தாகவும், தனித் தமிழ் நாடு கோரிக்கையை மறைமுகமாகச் செயல்படுத்த உறுதுணையாக  இருப்பதாகவும் சொல்லி, இப்போது காங்கிரசு தலைவராக பதவியேற்றுள்ள மல்லிகார்சுன கார்கே, அன்றைய கருநாடக உள்துறை அமைச்சராக இருந்த போது தமிழர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்யான வழக்கின் கீழ்த் தமிழ் அறிஞர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். 

சிறைப்பட்ட தமிழர்களின் விடுதலை வேண்டி, அன்று எனது தலைமையில் இயங்கிய ‘மனிதம்’ என்ற மனித உரிமை அமைப்பின் மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டு, நம்மால் ஆன சிறு உந்துதலை வழங்கினோம். இப்படிப் பல நேரங்களில் ஐயா பேரா. நெடுஞ்செழியனோடு பயணித்தோம்.

இன்று அந்த அறிஞர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார். மறைந்த பேரா.நெடுஞ்செழியன் உடல், சென்னைப் பொது மருத்துவமனைக் கல்லூரியில் சில மருத்துவ நிகழ்வுக்குப் பின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நண்பர்களோடு உடனிருந்து அவரைத் திருச்சி-க்கு வழியனுப்பி வைத்தோம்.

– அக்கினி சுப்ரமணியம்

உலகத் தமிழர் பேரவை

www.worldtamilforum.com

++

பேரா.க.நெ.குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள

 98949 67911



வியாழன், 3 நவம்பர், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 25, 26 & 27: இணைய அரங்கம்

 அகரமுதல







செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்

சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன்

புலவர் ச.ந. இளங்குமரன்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                            

வரவேற்புரை: திருமதி புனிதா சிவக்குமார்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்கு





சனி, 29 அக்டோபர், 2022

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23 (வெள்ளணி நாள் அறிவிப்பு)

 அகரமுதல





வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

(வெள்ளணி நாள் அறிவிப்பு)

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் பகரும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வீறுகவியரசர் முடியரசனாரின் 103ஆம் வெள்ளணி நாளான அக்டோபர் 7, 2022 அன்று mudiyarasan.org வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டு வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி:

தமிழின் பெருமையையும் முதன்மையையும் தன்னிகரில்லா வகையில் முன்னிறுத்திப் பாடிய முதுபெருங்கவி வீறுகவியரசர் முடியரசனார் ஆவார்.

தம்மொழியின் மாண்புணராத் தமிழர் நிலைகண்டு அவர் துன்புற்று வாடினார்; அந்நிலை மாற வேண்டிக் கவிவாளாம் படைக்கலன் ஏந்தி வீறுகொண்டு பாடினார். அவ்வகையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்தனிக் கவியாக வீறுகவியரசர் விளங்குகிறார்.

முத்தமிழின் மீட்சிக்காகவும் ஆட்சிக்காகவுமே முடியரச முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்தது; காற்றில் கலந்திருந்து அவ்வோசை இன்னமும் நம் நெஞ்சில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது.

தமிழின் சீர்மையைப் பாடியது மட்டுமன்று நம் பாவரசர் செய்த அரும்பணி. கற்பித்தலின் வழியாகத் தாய்மொழி அறிவையும் உணர்வையும் பரப்புவதைத் தன் வாணாள் தொண்டாகக் கொண்டிருந்தார் அவர்.

முடியரசரின் அடியொற்றித் தமிழ் பரப்புவதை எஞ்ஞான்றும் தன் தலைத்தொண்டாக் கொண்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், அந்நோக்கில் ‘வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில்’ என்னும் செயற்றிட்டத்தை இஞ்ஞான்று அறிவிக்கிறது. 

வீறுகவியரசர் முடியரசனாரின் பாடல்கள் சொல்லும் செய்தியை நெஞ்சில் இருத்தி, பல்வேறு தளங்களில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்பது இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இமய முடியை அடைய முனையும் செலவுக்கு, இலக்கை நோக்கி ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் சிற்றடிகளே இன்றியமையாதவை.

அவ்வகையில் முதற்கட்டமாக – அவ்விலக்கை நோக்கிய சிற்றடியாக – கீழ்க்காணும் பணிகளை முன்னெடுப்பதென்று அண்மையில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள ஆட்சிக்குழுக் கூட்டத்தின்போது முடிவுசெய்யப்பட்டது:

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் – 2022/23

தனித்திறன் கொண்ட தமிழாளர்களை – குறிப்பாக இளையோரை – இனங்காண்பதும் ஊக்குவிப்பதும் இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன:

  1. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய பேச்சுப்போட்டியொன்றை வலையொளி வழியாக நடத்துதல்; பத்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். அவர்கள் அடங்கலாக, இதன்போது இனங்காணப்படும் திறனாளர்கள் அவைக்களத்தின் தொடர் செயற்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பினை நல்குதல்.
  2. வீறுகவியரசர் கவிதைகளை முன்னிறுத்தி உலகளாவிய கட்டுரைப் போட்டியொன்றை நடத்துதல். வெற்றியாளர்களைத் தெரிவு செய்து பரிசில் வழங்குதல். இனங்காணப்படும் இளந்திறனாளர்கள் தமிழ் ஆய்வு, இதழியல், நூற்பதிப்பு முதலான துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  3. வீறுகவியரசர் முடியரசனார் நினவாகக் கவிதைப்போட்டியொன்றை நடத்துதல். ஆற்றல் கொண்ட கவிகளை இனங்காணல்.
  4. முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகத் தமிழாய்வைத் தேரும் மாணவர்களில் தகையிற் சிறந்தோரைத் தெரிவு செய்து அவர்களுக்கான புலமைப் பரிசிலாக ஓராண்டு காலம் ஊக்கத்தொகை வழங்குதல்; வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் சார்ந்த ஆய்வுகளின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துதல்.
  5. வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளையும் கடந்து வந்த பாதையையும் எடுத்துச் சொல்லும் ஆவணப்படங்களை உருவாக்குதல். அதற்கான போட்டியொன்றை நடத்துதல்.

வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் – பொருண்மை வகைத் தொகுப்பு

பெருநூல் வெளியீடு

வீறுகவியரசர் கவிதைகளைப் கருப்பொருள் சார்ந்து  பகுத்து, பதினொரு தலைப்புகளின் கீழ் தொகுத்துப் பெரு நூலாகக் கொண்டு வருவதற்கான பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.  

தமிழ் ஆய்வாளர்கட்கும், அறிஞர்கட்கும், ஆர்வலர்கட்கும் மிகுபயன் தரத்தக்க வகையில் இப்பொருண்மை வகைத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.

பக்கங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி நீண்டுள்ளதன் காரணமாக அதன் அச்சாக்கம் பெரும் பொருட்செலவைக் கோரி நிற்கிறது. அச்சுமையைப் பொறுப்பேற்கத் தமிழ்ப்பற்று மிகுந்த புரவலர்கள் முன்வந்தால் நூல் அச்சேறி விடும்.

தமிழ்கூறு நல்லுலகுக்கான செய்தி

மேலுள்ளவை தனியொரு சிலரால் செய்து முடிக்க இயன்ற பணிகள் அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். எண்ணம் பெரியது. காலத் தாழ்வில்லாமல் இவற்றை ஈடேற்றுவதற்கு உங்களில் ஒவ்வொருவரும் இயன்ற வழிகளில் கரங்கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இப்பணிகளுக்குத் தொண்டுளம் கொண்டு உதவ விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்க.

தொடர்பு:

+91 98425 89571 (முனைவர் தமிழ் முடியரசன், தமிழகம்)

+44 74286 31805 (கவி. மதுரன் தமிழவேள்)

வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

 

அகரமுதல





வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி

உலக அளவில், வலையொளி வழியாக

தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் தமிழ்க்குடி விழிக்கப் பாடிய வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகளை முன்னிறுத்தி இளையோருக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை கவிஞரின் 103ஆம் வெள்ளணி நாளான 07.10.2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் அறிவித்தது.

வீறுகவியரசர் முடியரசனார் புலமைப்பரிசில் 2022 அறிவிப்பை இங்கே காணலாம்

இதனொரு பகுதியாக ‘முடியரச முழக்கம்’ எனும் தலைப்பில் வீறுகவியரசர் முடியரசனாரின் படைப்புகள் மீதான பேச்சுப்போட்டி இங்கு அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான உங்கள் உரையைக் காணொளியாக அலைபேசியில் பதிவு செய்து புலனத்தின் வழி (WhatsApp) எமக்கு அனுப்பி வைக்கலாம். விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் கீழே தரப்பட்டுள்ளன:

வீறுகவியரசர் முடியரசனார்

பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் / கருப்பொருள்:

  • வீறுகவியரசரின் கவிப்புரட்சி
  • வீறுகவியரசர் படைப்புகளில் தமிழியப்புரட்சி
  • வீறுகவியரசரின் புலமைத்திறம்
  • வீறுகவியரசரின் படைப்பாளுமை

போட்டிக்காக வீறுகவியரசரின் படைப்புகளைப் படிக்க விரும்புவோர் பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ள வீறுகவியரசர் கவிதைகளை எமது வலைத்தளத்தின் ‘நூலகம்’ எனும் தலைப்பிலான பகுதியில் தரவிறக்கிக்கொள்ளலாம்.

நூல்களை அலைபேசியில் தரவிறக்க இயலாமல் போனால் கணினியில் இருந்து முயலுங்கள். அப்படியும் இயலாமல் போனால் இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பி வையுங்கள்.

பரிசுத்தொகை

மொத்தப் பரிசுத்தொகையான இந்திய ரூ.15,000/=  பின்வரும் முறையில் வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள மின்சான்றிதழ் வழங்கப்படும்:

  • முதற்பரிசு: 5000/=
  • இரண்டாம் பரிசு: 3000/=
  • மூன்றாம் பரிசு: 2000/=
  • மேலும் ஐவருக்கு 5 x 1000/= சிறப்புப் பரிசுகள்

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் இவ்வறிவிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது

விதிமுறைகள்:

  • உலகின் எப்பகுதியில் இருந்தும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்; வயது வரம்பு இல்லை.
  • போட்டியில் பங்கு பெற விரும்புவோர் முதலாவதாகக் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் வேண்டும்.  இதன்போது எமது புலன எண் (WhatsApp no.) உங்களிடம் வழங்கப்படும்.
  • தரப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவதொன்றைத் தெரிவு செய்து மூன்று மணித்துளிகளுக்கு (3 நிமிடங்களுக்கு) மிகாதவாறு போட்டியாளர் தனது உரையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  •  போட்டியாளர் தனது உரையை அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து (video recording), தரப்படும் புலன (WhatsApp) எண்ணுக்கு நவம்பர் 30, 2022 இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • கருப்பொருளை ஒட்டி அமையாத காணொளிகளும்  மூன்று மணித்துளிகளுக்கு அதிகமாக நீளும் காணொளிகளும் ஏற்கப்பட மாட்டா.

போட்டிக்கான காணொளியை உங்கள் அலைபேசியில் பதிவு செய்து அனுப்பலாம்

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் வீறுகவியரசர் நினைவு நாளான டிசம்பர் 03, 2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும். போட்டி முடிவு அறிவிக்கப்படும் வரை போட்டியாளர் தனது உரை அடங்கிய காணொளியை வேறெங்கும் வெளியிடல் ஆகாது.

ஜனவரி 14, 2022 அன்று நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும். போட்டியாளரின் பேச்சுத்திறன், ஆளுமை, மொழியறிவு, சொற்செறிவு, ஒலிப்பு முறை (பலுக்கல்), வலையொளிப் பக்கத்தில் குறித்த காணொளிகள் பெற்றிருக்கும் வரவேற்பு (பார்வை எண்ணிக்கை, விருப்பக் குறியீட்டு எண்ணிக்கை, பார்வையாளர் கருத்து) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடுவர் குழு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

தமிழர் திருநாளான ஜனவரி 15, 2023 (தைத்திரு நாள்) அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

பேச்சுப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது

இங்கே சொடுக்குக (CLICK HERE)

முதற்கட்டத் தேர்வில் தெரிவாகும் காணொளி உரைகள் அவைக்கள வலையொளிப் பக்கத்தில் (YouTube channel) வெளியிடப்படும்எமது வலையொளிப் பக்கத்தோடு இணைவதற்கு இங்கே சொடுக்குக

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

 அகரமுதல





செய்தி மடல் – Newsletter
 
  மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணை பின்வருமாறு

1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.
2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.
3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய தேதி: 15.பிப்ரவரி.2023.
4. மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 28.பிப்ரவரி.2023.

இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் பற்றிய செய்திகளை www.icsts11.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துக்களை contact@icsts11.org என்ற மின்வரிக்கு அனுப்பவும்.

நன்றி.
ஆய்வுக்குழு – பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்


 ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய மின்வரி 
E-mail address for submission of abstracts
academic-committee@icsts11.org