புதன், 2 டிசம்பர், 2020

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்

 அகரமுதல


கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க (பாவேந்தர் பாரதிதாசன்)

தமிழ்க்காப்புக் கழகம்

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து

இணையவழிக் கண்டனக் கூட்டம்

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020

காலை 10.00 மணிமுதல்

உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்!

மத்திய அரசு நாளும் இந்தி,சமக்கிருதத் திணிப்புகள் மூலம்  தமிழ் முதலான தேசிய மொழிகளை அழித்து வருகிறது.

இது குறித்து  மேற்குறித்த நாளில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் நீங்களும் பங்கேற்கலாம். கூட்ட இணைப்பு விவரம் பிறகு தெரிவிக்கப்படும்.

ஐந்து நிமிடததிற்குள் பேச அல்லது கவி பாட முன்வருவோர் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்களுக்கு அறிமுகமான பிறர் பங்கேற்க முன்வந்தாலும் விவரங்களைத்தெரிவிக்கலாம். கவிதையின் வடிவம் மரபு, புததுக்கவிதை, குறும்பா என எவ்வாறும் இருக்கலாம். ஆனால், பிறமொழிச்சொல் கலவாமல் இருக்க வேண்டும்.

மேலும், நிகழ்வின் பொழுது,

“மத்தியஅரசின் இந்தி,சமற்கிருதத்திணிப்புகளுக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்”

 எனக் கூறித் தத்தம் பெயர், அமைப்பு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

எக்கட்சி அல்லது அமைப்பினராக இருந்தாலும் தமிழ்நலன் நாடுவோர் எனில் பங்கேற்கலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

திங்கள், 30 நவம்பர், 2020

பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! – பெ.மணியரசன்

 அகரமுதல

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக!

கரூர் பசுபதீசுவரர் கோயில், அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் முதலான திருக்கோயில்களுக்கு கார்த்திகை 10, 2051 / 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாகத் திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். மகுடையால்(கொரோனாவால்) தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.

அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அருச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அருச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அருச்சகர்களுக்குத் தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.

எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பெ. மணியரசன்)
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

 

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

 அகரமுதல

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 

100 நிகழ்ச்சிகள் நடத்திய

சமால் முகம்மது கல்லூரி

முன்னாள் மாணவர்கள் சங்கம்

 

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது.

சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி அருவினை படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை வளர்க்கும் குடும்ப நாள், நோன்புத் துறப்பு,  சமய இன நல்லிணக்க நிகழ்ச்சிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான விழாக்கள், இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி வழங்குதல், முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு ஆடைகள், சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்குதல், மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் நன்கொடை வழங்குதல், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக நலப் பணியாற்றுதல் முதலான சேவைகளைச் செய்து, சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அரும்பணி ஆற்றி வருகிறது.

சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமையில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா, சங்கம் ஆற்றிய கல்வி, சமூக நலப் பணிகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளில் நடத்திய 100 நிகழ்வுகளின் தொகுப்பு காணொளியாக வெளியிடப்பட்டது. நாகூர் உரூமி எழுதிய “மீண்டுமோர் கருவறை தந்த தாயே!” என்ற பாடலை மாணவிகள் சினேகா முரளி, அனுமிதா முரளி இணைந்து பாட, “சமால் சமால் நீ வாழ்கவே!” என்ற பாடல் இசைமணி பரசு கல்யாண் குரலில் ஒலித்தது. கல்லூரியின் செயலர் முனைவர் காசா நசீமுதீன் சாகிபு, பொருளாளர் சமால் முகம்மது சாகிபு, முதல்வர் முனைவர் இசுமாயில் முகைதீன், பேராசிரியர் சாகிர் உசைன், கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அத்துல் சுபஃகான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தில் திருச்சியில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமால் முகம்மது கல்லூரி  கடந்த 70ஆண்டுகளாக உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

– முதுவை இதாயத்து

 

வெள்ளி, 27 நவம்பர், 2020

வணக்கத்திற்குரிய நவம்பர் 27

 அகரமுதல

வணக்கத்திற்குரிய நவம்பர் 27

இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

கலையாத வீரமும்  குறையாத ஈரமும் ஓர்
களங்கம்வாராத தீரமும்
கன்றாத படைமையும் குன்றாத துணிவும்
நலிவிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத நட்பும்
தவறாத சொல்லும்
தாழாத எழுச்சியும் மாறாத புகழும்
தடைகள் வாராத செயலும்
தொலையாத பற்றும் கோணாத தலைமையும்
துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும்
இணைந்து வாழ்ந்த மாவீரர்கள்
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

 


குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்

 அகரமுதல

கார்த்திகை 14, 2051 / ஞாயிறு / 29.11.2020

மாலை 6.30

குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக் குறி / Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

வியாழன், 26 நவம்பர், 2020

மேதகு பிரபாகரன் வாழியவே!

 அகரமுதல

தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர்
அடிமையாகாதவர்களை உருவாக்கியவர்
எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர்
தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர்
தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர்
அறிவியலாளர்களை வளர்த்தவர்
இருபாலினரையும் இணையாக நடத்தியவர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன்
நூறு நூறு ஆண்டுகள் வாழியவே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா

 அகரமுதல

மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா

கார்த்திகை 11, 2051 / வியாழன் / நவம்பர் 26, 2020

மாலை 6.00

மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா

அணுக்கிக் கூட்டத்தில் இணைய / Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82245816886?pwd=OUtJZHRsOGV4Nm0xQlZUVnJiOUtlUT09

 

கூட்ட எண் /Meeting ID: 822 4581 6886

கடவுக் குறி / Passcode: NA16f1

அழைக்கும் நெறியாளர் தமிழ் இராசேந்திரன்

செவ்வாய், 24 நவம்பர், 2020

தமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா

 அகரமுதல

ஐப்பசி 13, 2051 / 28.11.2020 /சனி மாலை 5.00 

தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112ஆவது பிறந்தநாள் விழா

தலைமை : கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன்

சிறப்பு விருந்தினர் : தோழர் இரா.நல்லக்கண்ணு

நெகிழ்வுரை : மறைமலை இலக்குவனார்

&

நிகழ்ச்சியைக் காண்போர்

அடையாளம் : 930 6190 8336

கடவுச்சொல் : 300 403

 

ஞாயிறு, 22 நவம்பர், 2020

வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்

 அகரமுதல

வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும்  தினமணி

இன்றைய தினமணி (20/11/20) நாளேட்டின் நடுப்பக்கத்தில் “மனுவுக்கு ஏன் இந்த எதிர்மனு” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் தமக்குத் தேவையான தரவுகளை மட்டும் தொகுத்துரைத்து உண்மைக்கு மாறான படிமத்தை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் மனுவின் மீது தேவையற்ற வெறுப்பு ‘உமிழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.ஆனால் ஏன் இந்த வெறுப்பு என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டார்.

தத்துவத்துறை வித்தகரும் தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவரும் வீரத்துறவி விவேகானந்தரைத் தம் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துப் பெருமைப்படுத்தியவருமாகிய மனோன்மணியம் சுந்தரம் (பிள்ளை) இந்த வெறுப்புக்குரிய காரணத்தைக் குறிப்பிடுகிறார்.

“வள்ளுவர் செய் திருக்குறளை மருவற நன்குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி? ஒருகுலத்துக்கு ஒருநீதி?” எனத் தம் நாடகநூலாகிய மனோண்மணியத்தின் பாயிரத்தில் கூறியுள்ளார்.

மனு சாத்திரத்தை வடமொழியிலேயே படித்த மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை), மனுவுக்கும் குறளுக்கும் உள்ள வேறுபாட்டை அறுதியிட்டுரைக்கிறார். பிறப்பின் அடிப்படையில் மனுநூல், மனிதர்களைப் பாகுபடுத்துகிறது. திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என மனித இனத்தை ஒருமைப்படுத்துகிறது. திருக்குறளின் முன் மனுநூல் கதிரவன் முன் மின்மினி எனச் சொல்லவேண்டியதில்லை. குறளின் பெண்வழிச்சேறல் அதிகாரத்தில் உள்ள குறள்களைத் தவறாகப் பொருள் கற்பித்துக்கொண்டு குறளைப் பழித்துரைக்கிறார். இந்த அதிகாரம் மனைவியரைப் பழிப்பதல்ல, ஆணாதிக்கவெளிப்பாடும் அல்ல என அறிஞர் மு.வ.தெளிவுறுத்தியுள்ளதை அவரது “திருவள்ளுவர் அல்லது வாழ்க்கைவிளக்கம்” என்னும் நூலைப் படித்தால் தெளிவாகும். எத்துணையோ பேரரசுகள் பெண்களின்மீது மையல் கொண்ட அரசர்களால் சீரழிந்த நிகழ்வுகளை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய அரசர்களுக்கான இடித்துரையே “பெண்வழிச்சேறல்” ஆகும்.

தினமணிக் கட்டுரையாளர் குறள்பாக்களைத் தயக்கமின்றி வழங்கியுள்ளார். ஏனெனில் அவை நயத்தக்க நாகரிகம் படைத்தவை. ஆனால் மனுநூலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் பதினேழு முதல் இருபத்தொன்று வரையிலான சூத்திரங்களைப் பொதுவெளியில் . வெளியிடமுடியாது. படிக்கவும் கேட்கவும் கூச்சம் தரக் கூடிய அந்தக் கருத்துகள் மனுவுக்கு உரியவை. இத்தகைய பெண்ணினப் பழிப்புரைக்காகவே அந்த நூலைத் தடை செய்யவேண்டும் என்னும் முழக்கம் எழுந்தது.

மனு நூல் செய்த குற்றம்தான் என்ன? மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்துவது ஒரு குற்றம்; அந்தக் குலத்தில் (வருணத்தில்) ஒரு வருணத்தை மிக உயர்ந்ததாகவும் மற்ற மூன்று வருணங்களையும் தாழ்ந்தவையாகவும் பாகுபடுத்திப் பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பிப்பது மற்றொரு குற்றம்; மிக உயர்ந்த வருணமாகிய பிராமணருக்குக் கட்டுப்பட்டு ஏனைய வருணத்தவர் ஏவல் செய்து வாழவேண்டும் எனச் சட்டம் இயற்றியது மிகப் பெருங்குற்றம்.. எல்லா நாடுகளிலும் அடிமைகள் இருந்தார்கள்; அந்த அடிமைகளுக்கும் விடிவு பிறந்து அவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறியதை வரலாறு எடுத்துரைக்கவில்லையா? இங்கே மனித இனத்தின் பெரும்பகுதியைச் சூத்திரன் என்று முத்திரை குத்தி அதனை ஆண்டவனின் கட்டளையாகக் கூறும் மனுநூலின் மீது வெறுப்பு உமிழ்வது தவறா?

இந்தத் திட்டமிட்ட பாகுபாட்டைத்தான் பாரதியார் எதிர்த்தார்,

சூத்திரனுக்கு ஒரு நீதி-தண்டச்

சோறு உண்ணும் பார்ப்புக்கு  வேறொரு நீதி

 சாத்திரம் ஏதும் உரைப்பின்-அது

சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்”

என்று பாரதியார் உணர்வுக் கொந்தளிப்போடு மனு சாத்திரத்தைக் கடிந்துரைத்தார். தம்மை ஒரு சாதிச் சிமிழுக்குள் அடைத்துக்கொண்டு நடுநிலை தவறி எழுதும் தினமணிக் கட்டுரையாளரின் போக்கு பிழையானது. பிறப்பின் அடிப்படையில் தம்மை உயர்வாக நிலைநிறுத்திக் கொண்டு ஏனையோரைச் சுரண்டும் வைதிகர்களின் அணுகுமுறையைப் பாரதியார் எதிர்த்தார்.

“பேராசைக்காரனடா பார்ப்பான்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

என வெளிப்படையாகவே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பாரதியார் மனுநூலை ‘சதி’ என்று குறிப்பிடுவது இயல்பானதே.

மூன்று (%) விழுக்காட்டினர் தொண்ணூற்றேழு (%) விழுக்காட்டினரை அடிமைப் படுத்திச் சுரண்டி வாழ்வதை முறையானதாகக் கருதும் தினமணிக் கட்டுரையாளர்க்கு மனுநூலின்மீது பாசமும் பரிவும் இருக்கலாம்.ஆனால் இந்த வன்கொடுமையை எதிர்க்கும் பாரதியாரிடமும் சுந்தரம் பிள்ளையிடமும் அத்தகைய போக்கினைக் கட்டுரையாளர் எதிர்பார்த்தல் மிகப் பெருந்தவறு.

“மனுப் பிரசாபதியினால் எந்த வருணத்தாருக்கு எந்தத் தருமம் விதிக்கப்பட்டதோ அது முழுதும் வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. அவர் எல்லா வேதத்தின் பொருளையும் நன்றாக அறிந்தவரல்லவா?”-

(7-இரண்டாவது அத்தியாயம்)

என்று மனுநூல் சொல்வதைப் பார்க்கும்போது இது வேதத்தின் பிழிவு என்பது புலப்படுகிறது. மனித இனத்தில் பேதங்களுக்கு வித்தூன்றியவை வேதங்களே எனவும் தெரிகிறது.

“பெண்களின் பெயர்கள் இனிமையாக இருக்கவேண்டும். கரடுமுரடான வார்த்தைகள் வேண்டா; எளிதில் அர்த்தம் புரிகிறபடி இருக்கட்டும்.வாழ்த்துச் சொற்களைப் போல் அவை நெடிலில் முடியட்டும்”

என்னும் மனுவின் கருத்தைப் பெருமிதத்துடன் கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார்.

“பிராமணனுக்கு மங்களத்தையும் சத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது.” (31-இரண்டாவது அத்தியாயம்) என்று மனு கூறியுள்ளதை அவர் மறைத்துவிடுகிறார். 97% மக்களைத் தாழ்வானவர்களாகக் காட்டும் மனுநூலின் மீது வெறுப்பைக் காட்டாமல் தலைமேல்  வைத்துக் கொண்டாடுவார்களா?

மனுநூல் ஒரு சட்டம் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். எத்தகைய சட்டம்? யாருக்கான சட்டம்? தத்துவப் பேரறிஞர் ஆல்பர்ட்டு சுவைச்சர் விடையளிக்கிறார்.

“மனுநூல் ஓர் அரசியற் சாசனம்; பிராமணர்களுக்காக் பிராமணர்களால் பிராமணர்களே ஆளும் அரசாங்கத்திற்குரிய அரசியற் சாசனம்”

மனுநூலைத் திறனாய்வு செய்த ஆங்கிலநூல்கள் ஆயிரம் காட்டலாம். அவை யாவும் தேவையில்லை. மனித இனத்தின் பெரும்பகுதியைச் சூத்திரர் என இன இழிவுபடுத்தி அவர்களை அடிமைப்படுத்தியாள்வதற்குரிய சட்டதிட்டத்தைக் கூறும் இந்த நூல் மனித இன வரலாற்றில் ஒரு களங்கமாகத் திகழ்கிறது. இதன் குறைபாடுகளை மறைத்துப் பூசிமெழுகும் வேலையைத் தினமணி தொடங்கியிருப்பது தேவையற்ற வேலை. தாயாய்ப் பிள்ளையாய் வாழும் தமிழரிடையே வேறுபாடுகளைத் தூண்டும் தினமணியின் பணி வீண் பூசல்களுக்கு வழிவகுத்துவிடும். காலங்காலமாக நிகழ்த்தப்பட்டுவந்த இனஇழிவு பெரியாரின் இடைவிடாத பணியால் அகற்றப்பட்டுச் சமூகநீதி மலர்ந்து அமைதிப்பாதையில் பயணம் செய்துவரும் வேளையில் பழைய துன்பங்களை நினைவூட்டி மீண்டும் ஓர் அமைதியின்மையை உருவாக்கும் பணி வேண்டா.

மறைமலை இலக்குவனார்