திங்கள், 23 மார்ச், 2020

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்


திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4
1.0.0.நுழைவாயில்
            “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.
            இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக் கேடு.
2.0.0.வறுமை ஒழிப்பில் திருவள்ளுவரின் பெருமொழிகள்
            அலைக்கழிக்கும் வறுமைபற்றித் திருவள்ளுவர்  தொலை நோக்குப் பார்வையோடு  அன்றே ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றார்.
வறுமை என்னும் பொருள் தரும் சொற்களாக அற்றம், இன்மை, தாழ்வு, துவ்வாமை, நிரப்பு, நல்குரவு, பசி, துனி ஆகியவற்றைக்  குறிப்பிட்டதிலிருந்தே,  வறுமை பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுபற்றி அறியலாம்.
            விளவு..? வறுமை ஒழிப்புபற்றித் தெளிவாக — திருத்தமாக — விரிவாக — விளக்கமாக — அழுத்தமாக — ஆழமாக அனைத் துக் கூறுகள்சார் சிந்தனைகளையும் உலகம் தழுவிய உயர்நோக்குடன் உலக நூல் திருக்குறளில் அழகுறப் பதிவு செய்துள்ளார்.      
          பக்க வரையறை கருதிச் சிற்சில குறட் சான்றுகளே இந்த ஆய்வுக் கட்டுரையில் அளிக்கப்படுகின்றன.
3.0.0.ஆய்வுக் கட்டுரையின் நோக்கு
மேற்குறிப்பிட்ட திருவள்ளுவப் பதிவுகளை எல்லாம் கண்ட றிந்து, வகைதொகை செய்து, அலசி, ஆராய்ந்து உலகிற்கு அறி விப்பதும் அவற்றை வையம் எல்லாம் வாழ்வியல் ஆக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.
4.0.0.பொருள் உரை வரைவு முறைமை
இந்த ஆய்வுக் கட்டுரையில் எல்லாக் குறள் அடிகளுக்கும்  குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் எனும் முறைமையில் பொருள்கள் வரையப்படுள்ளன. 
5.0.0.அழிக்கும் வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்..?  குறள்கள் — 10
            “என்பு இல் அதனை வெயில்போலக் காயும் [குறள். 77]” வறுமையை — வறுத்தெடுக்கும் வறுமையை ஏன் வேரறுக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் தரும் காரணங்கள் இங்குக் கூறப்படுகின்றன.
எல்லாக் குறள் அடிகளுக்கும்  குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் என்னும் நிலையில் பொருள்கள் வழங்கப் படுகின்றன. 
5.1.0.அக்குறள்கள்:
            247,532,552, 1042, 1043, 1044, 1045, 1046, 1047, 1048. 
பேராசிரியர் வெ.அரங்கராசன்
 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,  கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவிற்பட்டி — 628 502

ஞாயிறு, 22 மார்ச், 2020

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார்

திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்!

 உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது.
 “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.”  
(திருவள்ளுவர், திருக்குறள் 70)
என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
 “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை”
(ஔவையார், கொன்றைவேந்தன், 37, 38)
“தந்தை தாய் பேண்” (ஔவையார், ஆத்திசூடி, 20)
என்பனவும்
குமர குருபரர், புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வம் என்பதும்
பெற்றோரின் உயர்வை நமக்கு உணர்த்தும்.
இராமாயணத்தில், மாயத்தோற்றத்தில் சனகனை உருவாக்கி மடிந்ததாக் காட்டும் பொழுது தந்தை இறந்ததாகக் கருதிய சீதை,
“எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள்.”
என்கிறாள். தந்தையைத் தாயாகவும் அறமாகவும், தவமாகவும் போற்றும் மனப்பான்மையை நாம் காணலாம்.
இதுபோல், வாலி இறந்ததும் அவன் மகன் அங்கதன்,
“எந்தையே! எந்தையே! இவ் எழு
திரை வளாகத்து, யார்க்கும்,
சிந்தையால், செய்கையால், ஓர்
தீவினை செய்திலாதாய்!”
என்று தந்தையின் உயர்வை எண்ணி அரற்றுகிறான்.
“ஈச னடிபோற்றி எந்தையடி போற்றி” (திருவாசகம்)
என மாணிக்க வாசகர், கடவுளைத் தந்தையாகக் கருதுகிறார்.
“அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல்வேண்டும்”
என வள்ளலார் இராமலிங்க அடிகள், இறைவனை அப்பா என்றே கருதி அழைக்கிறார்.
இவ்வாறு தந்தையை உயர்வாகப் போற்றுவதையும் அதனால் இறைவனைத் தந்தைக்கு ஒப்பாகக் கருதுவதையும் நாம் பல பாடல்கள் வழிக் காணலாம்.
இப்பொழுதெல்லாம் அந்த நாள், இந்த நாள் என்று ஏதேதோ நாள் கொண்டாடுகிறார்கள். இவற்றையெல்லாம் நாம் கொண்டாட வேண்டுமா என்பது பலர் எண்ணம். கடந்த ஒரு நூற்றாண்டாகப் பிற நாடுகளில் கொண்டாடப்படும் இத்தகைய நாள்கள் வணிக நோக்கில் முதன்மைப்படுத்தப்பட்டு நம் நாட்டிலும் இப்பொழுது பின்பற்றப்படுகிறது. எனவே, தேவையில்லை என்பதே மூத்தோர் எண்ணம்.
 எல்லா நாளிலும் எல்லாரையும் போற்ற வேண்டும் என்பதே உண்மை. அதனால், இத்தகைய தனித்தனிநாள் தேவையில்லை என்பதும் ஒரு சாரார் கூற்று. இவற்றிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் நம் நாட்டில் இன்றைய பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, கூட்டுக்குடும்பம் அருகியமை போன்ற பல காரணங்களால், உறவுகளை மதிக்கும் நிலை மறைந்து வருகிறது. எனவே, தந்தைநாள் முதலான நாள் வரும்பொழுதாவது இது குறித்த சிந்தனை உண்டாவதும், திருந்திய போக்கு ஏற்படுவதும் தந்தை மீதுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதும், நல்லன செய்வதில் நாட்டம் உண்டாவதும் பெருகுகிறது. இவற்றை யெலலாம் ஒரு நாள் கூத்தாக மாற்றாமல் தொடர்ந்து நிலவும் பண்பாடாகக்கடைப்பிடிக்கும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்..
தலைப்பு தந்தையைப்பற்றியது என்பதால் நாம் இங்கே அதனைப்பற்றி இனிப் பார்ப்போம். உலகில் இந்தியா முதலான 52 நாடுகள் சூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையைத் தந்தையர் நாளாகவும் பிற நாடுகள் (ஏப்பிரல் நீங்கலான ஒரு மாதத்தில்) ஏதோ ஒரு நாளினைத் தந்தையார் நாளாகக் கொண்டாடுவதும் வழக்கமாக உள்ளது.
 சொனாரா இசுமார்ட்டு தோட்டு (Sonora Smart Dodd), 6 பிள்ளைகளைவிட்டுவிட்டுத் தாய் மறைந்தபின், மறுமணம் புரியாமல் தங்களைப் பேணிய தந்தை வில்லியம் இயாக்சன் இசுமார்ட்டு(William Jackson Smart)-இனைப் புகழும் வகையில் தந்தையர் நாள் கொண்டாட விரும்பியதனால் உருவாகி இது படிப்படியாக வெவ்வேறு நிலைகளை எட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சூலை 5, 1908 இல் முதன்முதலில் தந்தையா் கொண்டாடப்பட்டது என்பாரும் உளர். 1909இல் சொனாரா வேண்டியதற்கிணங்க 1910 முதல் தந்தையார் நாள் கொண்டாடப்படுவதாகவும் கூறுகின்றனர். (இரு கருத்துகளுமே விக்கிபீடியாவில் காணப்படுகின்றன.)
தந்தையர் நாள் கொண்டாடும் நாம் திரைப்படங்களில் தந்தையர்பற்றிய தவறான படிமம் உருவாக்கப்படுவதை நீக்க முயல வேண்டும். தமிழ்த்திரைப்படங்களில் அப்பா எனப்படுபவர் பொதுவாக மகன் முன்னிலையில் அவனை வேலைவெட்டி இல்லாதவன், தண்டச்சோறு, ஊர் சுற்றி, பொறுப்பில்லாத போக்கிலி என்பனபோல் ஏசுவார்; கண்டிப்பார்.   ஆனால், மகன் இல்லாத பொழுது தன் மனைவியிடம் அவன்மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவார்.
மகனோ அப்பாவை ஒருமையில் பேசுவான். இந்த ஒருமையில் பேசுவது என்பது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்தது. அச்சமூகம் ஆதிக்கம் செலுத்திய ஊடகங்கள் வழியாக இப்பேச்சு பரவி, அடுத்துச் சென்னை வழக்கம்போல் மாறி, இன்று எங்கும் இதுவே நிலைக்கின்றது. பெரியவர்களை ஒருமையி்ல் கூறும் ஊடகம் சிறு பிள்ளைகளிடம், நீங்கள், வாங்கள், என்பனபோல் மதிப்பாகப்பேசுவர். இப்பழக்கமும் இன்று மக்களிடையே பரவி விட்டது.
 எனவே, அப்பாவை மகன் ஒருமையில் குறிப்பிடுவதைத் தவறு என யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் மகன் தந்தையை அடிக்கக் கையை ஓங்குவதாகத்தான் காட்டுவார்கள். அண்மையில் வந்த ஒரு படத்தில் (கேடி பில்லா, கில்லாடி இரங்கா) “அடி பார்ப்போம்” எனத் தந்தை கூறியதும் மகன் அடித்துவிடுவதாகவே காட்சி இருக்கும். பின்னர் அவன் தந்தையைத் தன் நாயகனாக அவரது ஒளிப்படத்தில் குறிப்பிடுவான். இந்தக் கதை எதற்கு? படங்களில் இப்படி எல்லாம் பார்க்கும் இளைஞர்களுக்குத் தந்தையை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகும்?
பொதுவாகவே திரைப்படங்களில் தந்தை பற்றிய வெளிப்பாடு சரியாக இல்லை என்பதே உண்மை. நடிகர் திலகம் (சிவாசி கணேசன்) அப்பாவாக நடித்த படங்களில் எல்லாம் மறைமுகமான பாசமுள்ள அப்பாவாகக் காட்டிக் கொண்டு மோசமான அப்பாகவே நடித்திருப்பார். (நான்பார்த்த படங்களில் எல்லாம் அப்படித்தான் நடித்திருப்பார். பிற படங்களில் மாறி நடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்படிப் பாத்திரப்படைப்பு இருந்தால்தான அவர் நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணமே காரணம்.) சான்றாக எல்லாராலும் பாராட்டப்படும் ‘தங்கப்பதக்கம்’ படத்தைக் கூறலாம்.
காவல் அதிகாரியான அவர் மகனிடம் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், கனிவை வெளிப்படுத்த என்ன தடை? வீட்டிலும் காவல் அதிகாரியாக எண்ணாமல் தந்தைபோல் நடந்துகொள்ள ஏன் இயலவில்லை? காவல் அதிகாரியின் வேலை தண்டிப்பதுதானா? திருத்துவது இல்லையா? தன் மகனின் குற்றச் செயலை அறிய இரு காவல் துறையினரை மாறு வேடத்தில் அனுப்பிப் பண உதவி கேட்கச்செய்வார். மகனும் உதவுவான். அதை வைத்து அவன் திருட்டைக் கண்டுபிடிப்பார். உண்மையில் அவர், மகனின் உதவும் பண்பையும் பரிவுப்போக்கையும் உணர்ந்து அவனை அவன் வழியில் திருத்ததானே முயன்றிருக்க வேண்டும். அன்பு காட்டி அவனைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சரணடையச் செய்திருக்கலாமே! கடமை என்ற போர்வையில மகனைப் பகைவன்போல் கருதும் மோசமான தந்தையாகத்தான் இதில் நடித்திருப்பார்.
 பொதுவாகவே தந்தையை வழிகாட்டியாகவும் தாய்மைஉணர்வும் உள்ளவராகவும், தோழனாக நடந்து கொள்பவராகவும் ஆற்றுப்படுத்துபவராகவும் காட்டாமல் மகனின் எதிரிபோல் காட்டுவதே திரைப்படங்களின் பழக்கம். தந்தை எதிரிபோல் நடந்துகொண்டதும் மகனையும் அதற்கேற்ப எதிரியாகத்தானே படைக்க முடியும். எனவே, திரைப்படங்கள் இப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இக்கருத்தை நான் முன்னர்த் தெரிவித்த பின்பு, இப்பொழுது சில படங்கள் தந்தையின் அன்பை உணர்த்தும் வகையில் வருவது மகிழ்ச்சிக்குரியது.
தந்தை, மகன் அல்லது மகள் மீதுள்ள அன்பை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்துபவராகவும். பிள்ளைகளுக்கு இடர்ப்பாடு வரும் நேர்வுகளில் ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறுபவராகவும் காட்ட வேண்டும். வேலை கிடைக்காச் சூழலில் பிள்ளையின் வருவாயை நாடும் குடும்பம் எனில், “உன் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற வேலை கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வேலையைப் பார்” என்று கூற வேண்டும். போதிய வருவாய் உள்ள குடும்பம் எனில், “உன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில் சேர்ந்தால்தான் முன்னேற இயலும். எனவே, வேலை கிடைக்கவில்லை எனக் கவலைப்படாதே. உன் திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும்.” என நம்பிக்கையுரை வழங்க வேண்டும்.
பொறுப்பினை உணராமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், “நண்பர்கள் துணை தேவைதான். அவர்களுடன் தகுதியை வளர்த்துக்கொள்வது குறித்தும் வேலைக்கான தேர்வுகளுக்கு ஆயத்தப்படுவதுபற்றியும் கலந்து பேசு. தம்பி, தங்கையர் படிப்பில் கருத்து செலுத்தி அவர்களுக்கு ஊக்கமாக இரு. வீட்டுப் பொறுப்பில் உன்னால் முடிந்ததை ஏற்றுக் கொண்டு எங்கள் சுமையைக் குறை”   என அமைதியான முறையில் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் இப்போதைய போக்கையே தொடர்ந்தால் இளந்துலைமுறையினர் வாழ்வைச் சிதைக்கிறார்கள் என்றுதான் பொருள்.
‘திரைப்பட அப்பாக்கள்’ திருந்த வேண்டுமெனில் இயக்குநர்களும் கதையாசிரியர்களும் திருந்த வேண்டும். திருந்துவார்களா? தந்தை-மகன் நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில் படங்களை உருவாக்குவார்களா?
 திருந்துவார்கள் என்று நம்பிக்கை வைப்போம்!
 – இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 03.03.2020

வியாழன், 19 மார்ச், 2020

ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020


ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020


இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28ஆம் நாள், முதல் முதலாக நடைபெற்றது. பின்னர் 2006, 2007ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய அறைகூவல்களைச் சந்தித்தது. இருந்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து அறைகூவல்களைச் சமாளித்து, 2011, 2015ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. இவ் ஆண்டு 15ஆவது ஆண்டாக இளந்தளிர் இடம்பெற்றது. தலைவரின் சிந்தனையை மனத்தில் கொண்டு ‘ஈழத்தின் விதைகள்’ எனும் பொருளைவைத்து நடாத்தப்பட்டது. ‘‘இலட்சிய விதை வளர்த்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.’’ என்ற தலைவரின் கூற்றை மெய்யாக்கும் வகையில் தமிழ் இளையோர்கள் இளந்தளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானியாவால் இந்நிகழ்ச்சி பங்குனி மாதம் 15ஆம் நாள் இல்போர்டு (Ilford) நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரன் பத்திரிகை வந்த காலம் தொட்டும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும் தன் எழுத்துகளால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து பிரித்தானியவில் செந்நெறிச் செம்மல் சமுதாய சோதி என மதிப்பளிக்கப்பட்ட ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் பன்முக மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் திரு சூசைப்பிள்ளை இயோசப்பு பற்றிமாகரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டார். இவர் உரையாற்றுகையில், தமிழ் இளையோர் அமைப்பு 15 ஆண்டுகளாகப் பிரித்தானியாவால் நடைபெறும் அனைத்து நாடு சார்ந்த செய்திகளில் முதன்மைப் பங்கு வகித்ததாகவும் இளையோர்களின் இந்தத் தன்னம்பிக்கைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் எனக் குறிப்பிட்டதுடன் பெற்றோர்கள் சிறுவர்களுக்குத் தாங்கள் கடந்நு வந்த இன அழிப்பு நிகழ்வுகளின்ன் உண்மைத்தன்னையை சொல்லி வளர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஈழத்தின் சிறப்பையும் தமிழின் முதன்மைத்துவத்தையும் தனது வரிகளில் வெளிப்படுத்தும் இராவணன் இரௌத்திரம் இலண்டனில் முதல் முறையாக அரங்கேறவிருந்த வேளை பிரான்சு நாட்டு பயணத்தடை காரணமாக அவர் கலந்துகொள்ளமுடியாமை வருத்தத்திற்குரியது.
அகவணக்கத்துடனும் ஈழக்கொடியேற்றலுடனும் தொடங்கியது இளந்தளிர் 2020. நடனங்கள் ஈழப்பாடல்களுக்கான வில்யாழ் இசை நாடகங்கள் முதலியன அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. மேலும் இயற்கையை மேன்மைப்படுத்தும் முறையாக ‘இயற்கை’ எனும் நாட்டிய நாடகம் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்பூட்டும் விதம் அமைந்திருந்தது.

தமிழர்களின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனும் பிரித்தானிய அரசுக்குத் தலை வணங்க மறுத்து இரண்டகர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட பண்டாரவன்னியனைப் பற்றி எடுத்துக்காட்டி ஈழத்தின் இளையோர்கள் அழகான நாடகத்தை அரங்கேற்றினர். நாம் கடல் கடந்து தாயகத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தாலும் இளைய தலைமுறை தமிழ் மன்னர்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களுடைய கதைப்பாத்திரங்களைப் புரிந்துணர்வுடன் நடித்தனர்.
தாயகத்தின் மேன்மையைக் கூறும் ‘தாய் மண்ணை முத்தம் இட வேண்டும்’ என்ற பாடலுக்கு நன்றாக நடனம் ஆடப்பட்டது. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணைச் சிறப்பிக்கும் முறையாக ‘வன்னி மயில்’ என்ற பாடலுக்கும் மாணவர்கள் நடனம் ஆடினர். கடந்த ஆண்டு தேசிய மாவீரர் நாளில் “இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாக காண்போமே மாவீரரே” என்ற பாடலைப் பாடி அனைவரின் மனத்திலும் அவர் குரலைப் பதிய வைத்தவரும் வன்னியின் குரல் 2019, செருமனியில் நடைபெற்ற கலைச்சாரல் 2019, பிரித்தானியாவில் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பலராலும் பாராட்டுகளையும் பெற்ற தேனுகா சிவநேசராசா பாடல்களும் இடம்பெற்றன.
அத்தோடு தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகாவுக்கு ஒரு காணொளியும் படைக்கப்பட்டது. சிறுவர்கள் இருவரின் ஒன்றாகும் காலமிது வென்றாடும் நேரமிது என்னும் பாடல் அனைவரையும் எழுச்சியூட்டும் விதமாக இருந்தது. இறுதியில் பிரபாகரன் எங்கள் வழிகாட்டி என்னும் பாடலுக்கான நடனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
தமிழர் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டையும் புதிய தலைமுறைக்குத் தெரியவைப்பத தமிழ் இளையோர் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். இவ்வகையில் இளந்தமிழ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி கூறுகிறது.
ஈழத்தின் விதைகளாக விளங்கும் எங்களுடைய புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.