வெள்ளி, 6 ஜூலை, 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு ஆலாசியன்



ஆனி 24, 2049  ஞாயிறு – சூலை 08, 2018 –

 நண்பகல் 11.00 – 1.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்: 

தமிழ் இதழ்களில் அறிவியல் கட்டுரை எழுதி வரும்

திரு. ஆலாசியன்


அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்


17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்
உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர்,
மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி)
 இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது. (இலவசம்)
இதில் ஏதேனும் ஒரு கணினி மொழி நிரலாக்கம் தெரிந்தோர் கலந்து கொண்டு, தமிழுக்கான ஏதேனும் ஒரு கணியத்தை(மென்பொருளை) உருவாக்கலாம். சிறந்த கணியத்திற்கு (மென்பொருளுக்கு)ப் பரிசுகள் உண்டு.
இதன் விதிகள் –
நீங்களே மடிக்கணினி கொண்டுவர வேண்டும்
உருவாக்கும் கணியத்தை (மென்பொருளை) கட்டற்ற கணியமாக (மென்பொருளாக) மூலநிரலுடன் வெளியிட வேண்டும்
இது தவிர, கண்காட்சி அரங்கில், பல்வேறு நிறுவனங்களின் கணிய(மென்பொருள்) அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள் நடைபெற உள்ளன. இவற்றில் பொது மக்கள் யாவரும் இலவசமாகவே கலந்து கொள்ளலாம்.
கோவையைச் சுற்றி உள்ளோர், இந்த அரிய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் விவரங்களுக்கு:

சீனிவாசன்

உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்



ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்

வியாழன், 5 ஜூலை, 2018

தமிழ்க்கல்வி, தமிழ்வழிக்கல்வி தொடர்பான கட்டுரைகள்

திருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா




ஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் 

காலை 9.00 முதல் மாலை 5.00 வரை

திங்கள், 25 ஜூன், 2018

'தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக்  கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி,  தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை   முதலான பல அமைப்புகளுடன் இணைந்து  நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர்  மழலையர்  – தொடக்கப்பள்ளிமழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார்.
  த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார்.    இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார்.  முனைவர் க.ப. அறவாணன் தொடக்கவுரையாற்றினார்.
 கல்வியாளர் இறை. பொற்கொடி, எழுத்தாளர் மாம்பலம் ஆ.சந்திரசேகர், கல்வியாளர் வெற்றிச்செழியன்,  தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் ஆகியோர் உரையாற்றினர்,
தோழர்  தியாகு சிறப்புரையாற்றினார்.
 கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் தீர்மானங்களை வாசித்து உரையாற்றினார்.
அக்கினி சுப்பிரமணியம் நன்றி நவின்றார்.
 பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்ப ட்டன.
  1. தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைப்பதற்காக அனைத்து வகை நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.
  2. எல்லாத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்றித் தேவைப்படும் உதவிகளைப் புரிய வேண்டும்.
  3. பள்ளிகளை மூட வில்லை என்று சொல்லிக்கொண்டு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
  4. பள்ளிகளை நடத்துவதற்குக் கூட்டுறவு அமைப்பு முறையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ‘கூட்டுறவுக் கல்விநிலையங்கள் சட்டம் 2018’ என ஒன்றை உருவாக்க வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தாய்த்தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்திக் கூட்டுறவுக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்.
  5. மூடக்கருதியுள்ள கல்வி நிலையங்களையும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள கல்வி நிலையங்களையும் கூட்டுறவு அமைப்பில் இணைக்க வேண்டும்.
  6. தமிழ்வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் அரசாணை சரியானதன்று. எனவே, வேலைவாய்ப்பில் முதல் 80 முன்னுரிமை தமிழ்வழி படித்தவர்களுக்கே என்னும் புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.  பணித்தகுதிக்குரிய கல்விப்பட்டம் தமிழ்வழியில் இல்லை யெனில், தமிழ்வழியாக  மேனிலைப் பள்ளியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
  7. தமிழ்நாட்டில் இயங்கும் எந்த அலுவலகமாயினும் தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
  வேலைவாய்ப்பு உறுதி மூலம் தமிழ்வழியில் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியும் தமிழ்வழிப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் போதிய நிதியுதவிகள் செய்தும் தமிழ்நாட்டில் கல்வி என்றால் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை ஏற்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்த அவை கேட்டுக் கொள்கிறது.
தமிழகப் புலவர் குழு முதலான பிற அமைப்புகள் இத்தீர்மானங்களைஅரசிற்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளன. பிறரும் அவ்வாறே செய்யவேண்டுகிறோம்.

வெள்ளி, 22 ஜூன், 2018

இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்


இங்கிலாந்து  திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன்

– இலக்குவனார் திருவள்ளுவன்


ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில்

இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில்

(Liverpool Hope University) 

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது.


ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும்

பிற  அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில்

மாண்புமிகு தமிழகத்

தமிழ்வளர்ச்சி அமைச்சர்  ம.ப.பாண்டியராசன்

சிறப்புரையாற்றுகிறார்.


இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 

நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும்

இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில்


“ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து”

 என்னும் தலைப்பில்

கட்டுரை அளிக்க இருக்கிறேன்.

அதே பொழுது 5 ஆம் அரங்கில்

மரு.மணவை முசுதபா செம்மல் கடடுரை அளிக்கிறார்.


அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்

அரசமைப்பு உறுப்பு 161இன்படி

ஏழு தமிழர்களை விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.
2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.
இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலைபற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டா” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்!
ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.
இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமசு, தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
கொலையுண்ட இராசீவு காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!
இராசீவு காந்தி கொலையில் பன்னாட்டுச் சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.
இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!
அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்!
மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தஅளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் – அந்த அதிகாரம் கட்டற்றது!
ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்!
குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================