வியாழன், 1 பிப்ரவரி, 2018

தகடூர் கோபி நினைவேந்தல், சென்னை

தை 21, 2049 – சனிக்கிழமை – 03-02-2018

மாலை 3.30 முதல் 6 மணி வரை 

’தமிழ் இணையச் சிற்பி’

தகடூர் கோபி நினைவேந்தல் கூட்டம் 
இடம் : கவிக்கோ மன்றம், மைலாப்பூர், சென்னை 600 004

நிகழ்வில் சகாயம், இ.ஆ.ப., தமிழார்வலர்கள்,
பதிப்பாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
தொடர்புக்கு :
சீனிவாசு பார்த்தசாரதி @98843 99992 
செல்வமுரளி @99430 94945 
இரசினி இராம்கி @98414 89907 
மாயவரத்தான் கி.இரமேசுகுமார் @88388 21638 
அன்புடன்
கணிணித்தமிழ் சங்கம் 9884399992 / 044 49595631 
உத்தமம்
இரசினி அன்பர்கள் குழு <  http://www.rajinifans.com/ >

புதன், 31 ஜனவரி, 2018

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்

காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.
சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.
சட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம்.
அரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.
கடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா?
பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம்என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். புதுச்சேரியில் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]
இனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.
நாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. ஸமத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)]. குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
 கருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
ஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார்! எனவே, இதன் மூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.
தமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்திலும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.
காலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.
சுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.
குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில் கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.
சுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.
திருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சங்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.
சங்கர மடத்தினரே! இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள்! தமிழுக்குத் தொண்டாற்றுங்கள்! இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.
குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள் சனவரி 27, 2018

அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி

பிற கருவூலம்

அனலும் புனலும் :

இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே

பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? 

அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை!
சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற வேண்டும். இந்துச்சமயத்தில் இருந்த உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் சட்டத்தின் மூலம்தானே நிறுத்தப்பட்டன. அதே வழியில் இசுலாமியப் பெண்களின் முறையற்ற மண முறிவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் என்ன தவறு?
பாசகவின் காவி முகம் இதனைக் கண்மூடித்தனமாகப் பலரையும் எதிர்க்கத் தூண்டுகிறது.
சமயப் பண்டிகைகளின் பொழுது துறைசார் கூட்டம் நடத்துதல், இசுலாமியர் தொடர்பான திட்டங்களுக்கான நல்கைகளை நிறுத்துதல் போன்ற பாசக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மும்முறைச் சொல்லி மணவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சட்டம் குறித்தும் ஐயத்தை எழுப்புகின்றது. ஆனால், இதற்காக இசுலாமியப் பெண்களுக்குத் தேவைப்படும் உரிமை வாழ்வைத் தடுக்கக்கூடாதல்லவா?
முதலில், ‘முத்தலாக்கு’(triple talaq) என்றால் என்ன என்று பார்ப்போம்.
‘தலாக்கு’ என்பது அரபிச்சொல். விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் எனப் பொருள்கள் உள்ளன. மனைவியைக் கைவிடுவதற்கு வாழ்க்கைத் துணையை விலக்கி வைப்பதான பொருளில், இச்சொல்லை மூன்று முறை – மும்முறை – சொல்வதன் மூலம் திருமண உறவு முறிவிற்கு வந்துவிட்டதாகப்பொருள். எனவே ‘முத்தலாக்கு’ என்கின்றனர். தமிழும் அரபியும் கலந்த இச்சொல்லை – மும்முறை விலக்கி வைப்பதாகக் கூறுவதால் – ‘முவ்விலக்கு’ என்று குறிப்பிடலாம்.
இசுலாமில் ஒருவர் பலரைத் திருமணம் செய்துகொள்ளலாம். இவ்வாறு இசைவளிக்கும் பலதார முறையைத் தடைசெய்தாலே திருமண முறிவு குறையும். பார்க்கின்ற பெண்கள்மீது ஆசை வைத்துத் திருமணம் புரிவதால் இருக்கின்ற மனைவியை விலக்கி வைக்கின்றனர். எனவேதான், தேசிய முசுலிம் மகளிர் அமைப்பினர் மத்திய அரசிடம் பல தாரத்திருமணத்தைத் தடைசெய்யச்சட்டம் இயற்ற வேண்டுகின்றனர். தேசிய முசுலிம் அமைப்பு( ஆரளடiஅ சுயளாவசலைய ஆயnஉh-ஆசுஆ) என்பது ஆர்.எசு.எசு. என அழைக்கப்பெறும் தேசியத் தொண்டர் அமைப்பின் சார் அமைப்பாகத் திசம்பர் 24, 2002 இல் உருவானது. எனவே இதன் வேண்டுகோள் நெருடலாக இருந்தாலும் அதிலுள்ள உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.
 வழக்கறிஞர் இந்திரா(செய்சிங்கு) முவ்விலக்கு சொல்லித் திருமண உறவை முறித்துக் கொள்பவர்க்குச் சிறைத்தண்டனை என்றால் திருமண உறவே நிலைக்காது என்று கூறியுள்ளார். இம்முறையே தவறு என்னும் பொழுது அவ்வாறு சொல்லி மனைவியையும் அவர்வழித் தன் பிள்ளைகளையும் கைவிடுவோரையும் சிறைக்கு அனுப்புவதில் என்ன தவறு? இப்பொழுதும் கட்டாய மணக்கொடை – வரதட்சணை – கேட்போருக்குச் சிறைத்தண்டனை உள்ளதே! இதன் நோக்கம் அச்சுறுத்தியாவது இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பதுதான். எனவே, தவறல்ல. தவறு என எண்ணினால் மாற்றுக் கருத்து கூற வேண்டுமே, தவிர இச்சட்ட முறையையே எதிர்க்க வேண்டிய தேவையே இல்லை.
 முவ்விலக்கு என்பது உடனே சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு மாத இடைவெளியில், 3 மாதவிலக்குகளுக்குப் பின்னர் சொல்லப்பட வேண்டியது எனச் சிலர் குரானை எடுத்துக்காட்டாகக்கூறி முவ்விலக்கை எதிர்க்க வேண்டாம் என்கின்றனர். ஆனால் நடைமுறையில் ஒரே நேரத்தில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக மும்முறை தெரிவித்து மண விலக்கை நடைமுறைப்படுத்தி வருவதைக் காண்கிறோம். எனவே, ஏட்டில் என்ன இருந்தாலும் நடைமுறையில் உள்ள தவறான வழக்கத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றுவதில் தவறில்லை.
 முவ்விலக்கிற்குப் பின்னர், கணவனும் மனைவியுமாக இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேரலாமாம். அதற்கு அப்பெண் மற்றொரு ஆடவருடன் உடலுறவு கொண்டு அவரை விலக்கு செய்து முன்னவரை மணக்கலாமாம். மீள்இணைவு(ஃஅலாலா) என்று சொல்லப்பெறும் இம்முறை பெண்களை இழிவு படுத்துவதாகும்.
 இந்த முறை இசுலாமில் இல்லை என்று சிலர் எழுதி வருகின்றனர். ஆனால், குரான் 2.230.இல் இது முதற்கணவனை மறுமணம் செய்து கொள்ளும் வழியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.
 முவ்விலக்கிற்குத் தடை கோரியவர்களின் முதன்மையானவர்கள இசுலாமியப் பெண்களே! சயரா பானு, அஃபுரீன் இரகுமான், இசுரத்து சஃகான், அதியா சபுரீ, குல்சன் பர்வீன் ஆகிய ஐந்து பெண்களே முவ்விலக்குக் கொடுமைக்காக நீதிமன்றப் படிகளை எதிர்த்து இப்பொழுது வெற்றி காண்கிறார்கள்.
  இலங்கை, பாக்கித்தான், வங்காளத் தேசம், துனிசியா, துருக்கி, சைப்பிரசு, அல்சீரியா, மலேசியா, ஈரான், சோர்டான், சூடான், கத்தார், மொராக்கோ, ஈராக்கு, புரூனே, ஐக்கிய அரபு நாடுகள் என இசுலாமிய நாடுகள், பிற சமய நாடுகள் எனப் பலவும் முவ்விலக்கைத் தடைசெய்துள்ளன. இசுலாமிய நாட்டிலேயே தடை செய்யப்பட்டதைச் சமயச் சார்பற்ற நாடு என அறிவிக்கப்பெற்ற இந்தியாவில் தடை செய்வதில் என்ன தவறு?
  சட்டத்தில் குறைகள் இருந்தால், இசுலாமியப்பெண்களுக்கு நலம் பயக்கும் வகையில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமேயன்றி, அவர்களுக்கு எதிரான திருத்தங்கள் மேற்கொள்ளக்கூடாது.
  பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா? உற்றார் உறவினர் முன்னிலையில் ஊரறிய நடத்தப்பட்ட திருமணம் யாருமறியாமல் ஒற்றைச் சொல்லை மும்முறை தெரிவிப்பதால் முறிக்கப்பட வேண்டுமா?
இந்தியாவில் பொதுக்குடிமைச்சட்டமே எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும். இதனைச் சிறுபான்மையரை ஆதரிப்பதாக எண்ணி எதிர்க்கும் போக்கு கைவிடப்பட வேண்டும்.
  • குவியாடி
இ.எ.தமிழ் / ietamil நாள்  சன 23, 2018

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’, மாநாடு, சென்னை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே

 சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களும், நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத்து, மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.
 இதுவரை இல்லாத புதிய மாற்றமாக இவ்வறிவிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தகுதி பெற்ற 90 இலட்சம் பேர் வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் உள்ளவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வு எழுதினால் தமிழ்நாட்டின் குடிமக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காத அவலம் ஏற்படும். மண்ணின் மக்களாகிய இளம் ஆண்கள், பெண்களின் எதிர்காலம் என்னவாகும்?
இதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களைச் சேர்த்ததால் பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தன. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டு வருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பாரத மிகு மின் நிறுவனம்(BHEL), நெய்வேலி அனல் மின் நிலையம், இருப்பூர்தித் துறை, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், வருமான வரி அலுவலகங்கள் , உற்பத்தி வரி அலுவலகங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் அண்மைக்காலமாக 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்கினால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு விடும்!
தமிழ்நாட்டு தொழில், வணிகம், அதிகார இனம்(வருக்கம்) அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி, கல்வி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக 1956இல் மொழியின மாநிலமாக, உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு! அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டு வருவது மிகமிகத் தவறு!
மகாராட்டிரம், கருநாடகம், குசராத்து, மேற்கு வங்கம், சத்தீசுகட்டு போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.
எனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” மாநாட்டில் நிறைவேற்றப்படும்!
இதற்கான சட்டத்தை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் இயக்கம் நடத்தப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. மு. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர். கலை நிகழ்ச்சிகள், ஒளிப்படக் கண்காட்சி, பா வீச்சு என காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இம்மாநாடு நடக்கிறது.
தமிழர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும், இம்மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மலேசியா-சிங்கப்புர் இலக்கியச் சுற்றுலா


  • நந்தவனம் சந்திரசேகரன் 94432 84823

தமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன – கவிஞர் மு.முருகேசு

     28 சனவரி 2018      கருத்திற்காக..
தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன
        – கவிஞர் மு.முருகேசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ)  நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.
   இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’  எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார்.  இதழாளர் கவிஞ்ர்  மு.முருகேசு பெற்றுக்கொண்டார்.
நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “மாக்கவி பாரதி 1916-ஆம் ஆண்டு எழுதிய சிறு கட்டுரை ஒன்றின் வழியாகத் தமிழுக்கு அறிமுகமான சப்பானியக்  குறும்பாக்கள் (ஐக்கூ), இன்றைக்குத் தமிழில் 500-க்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகமான குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாகக் கவிதை எழுதும் இளைய கவிஞர்களைக் கவரும் கவிதை வடிவமாக மூன்று வரி குறும்பாக்கள் உள்ளன. தமிழில் குறும்பாக்கள் ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், குறும்பா ஒட்டி,குறும்பாக் குறும்படம் எனப் பலவகையான செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன. சிறந்த குறும்பா  நூல்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
    தமிழ் குறும்பாக்களில் சமுதாயச் சிந்தனைகள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. மேலும், இதுவரை தமிழ்க் கவிதையில் பதிவாகாத பல செய்திகளையும் பதிவு செய்யும் வடிவமாக குறும்பாக்கள் திகழ்கின்றன. ஆசிரியப் பயிற்றுநராகக் கல்விப் பணியாற்றி வரும்  சா.கா.பாரதிராசாவின்  குறும்பாக்கள் சமூக அநீதிகளுக்கு எதிரான தனது கோபத்தைக்  கூராகப் பதிவு செய்துள்ளன. தமிழ்க் குறும்பாக்கள் செறிவான வடிவத்தாலும், கவித்துவ அழகாலும் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன. அதில், பாரதிராசாவின் கவிதைகளுக்கும் இடமுண்டு” என்று குறிப்பிட்டார்.
  விழாவில், செங்கை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் கே. ஏகாம்பரம், மேனாள் அரிமாச்  சங்க  மாவட்ட ஆளுநர் முருகப்பா, ’கைத்தடி’ ஆசிரியர் மு.சி.அறிவழகன், தலைமையாசிரியர் அசோகன், புலவர் சு. பழனிச்சாமி, கவிஞர் ஆ.கிருட்டிணன், ‘லிட்டில் சாக்கி’ பள்ளிக் குழுமத் தலைவர்  சோசுவா சாம் தேனி, கவிஞர் பரிமளம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சூலியத்து, கவிஞர் ப.குணா, தலைமையாசிரியர் சீனி.சந்திரசேகரன், கவிஞர் கவிமுகன் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர்.
நிகழ்ச்சியில், குண்ணவாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்குப் பேழை ஒன்றும், பட்டிரவாக்கம், கொண்டமங்கலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
 பரனூர் வில்லியம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளும் வழங்கப்பட்டன. புலிப்பாக்கம் பள்ளி மாணவர் நிசாந்து சிறப்பிக்கப்பட்டார்.
      நிகழ்வைக் கவிஞர் யாழன், தமிழ்மதி தொகுத்து வழங்கினர்.
    கவிஞர் சா.கா.பாரதிராசா ஏற்புரையாற்றினார்.
பா.தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.