புதன், 23 செப்டம்பர், 2009

முன் கூட்டியே விடுதலை என்பதை நளினி உரிமையாகக் கோர முடியாது!: சோலி சோரப்ஜி கருத்து



சென்னை, செப். 22: முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை நளினி உரிமையாகக் கோர முடியாது என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி நளினி, தன்னை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் சோலி சோரப்ஜி கூறியது: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. அவரது உடல்நிலை அடிப்படையிலோ அல்லது இதுபோன்ற குற்றச் செயல்களில் அவர் ஈடுபடமாட்டார் என்று உறுதியாகத் தெரிந்தாலோ அவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம். தற்போது அவருடைய உண்ணாவிரதம், அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் யுக்தியே ஆகும் என்றார் சோலி சோரப்ஜி.
------------
பல நேர்வுகளில் குற்றச் செயல் குறித்த பரபரப்பு அடிப்படையிலேயே அதற்கான தண்டனை வழங்கப்படுகின்றது. இது குறித்து தீர்ப்பு ஒன்றிலேயே உரிய நீதிபதியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது குற்றம் சாட்டப்படுபவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனால்தான் 9 பேரைக் கொன்றது செயப்பிரகாசு என்னும் தனி மனிதன் அல்ல என்றும் அவனைச் சென்னையில் கைது செய்து திருப்பதியில் பிடித்ததாகக் கதை கட்டப்பட்டது என்றும் பலரால் மெய்ப்பிக்கப்பட்டாலும் அவனுக்குக் கடுந் தண்டனை விதிக்கப்பட்டது. இதுபோல்தான் 'ஆட்டோ சங்கர்' வழக்கில் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தும் அவனுக்கு மட்டும் கடுந் தண்டனை - மரணத் தண்னை - வழங்கப்பட்டது. அதுபோல் நளினியையும் காணும் தவறு நடக்கிறது. நீதி மன்றமே விடுதலைக்கானஅறிவுரைக் குழுமம் கூடி முடிவெடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியும் நீதி மன்ற அவமதிப்பாக அத்தகைய நடைமுறை எதுவும் கடைப்பிடிக்க வில்லை. கொடூரமான கொலை புரிந்தவர்களுக்கெல்லாம் இத்தகைய வாய்ப்பு வழங்கப் படுகையில் நளினிக்குச் சட்டம் தரும் வாய்ப்பை மறுப்பது அநீதியானது. இதனைச் சோலிகளும் சோனியாக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.-- இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அலகாபாத்:உத்தரபிரதேசத்தில் சிலர் ராவணனை அரக்கனாக நினைக்காமல், கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். புராண காலத்தில் ராமன், ராவணனை அழித் ததாக கூறப்படுகிறது. ராவணனை அழித்த ராமனுக்காக நாடு முழுவதும் கோவில்கள் உள்ளன. ராம நவமி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.



டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ராம் லீலா விழாவின் போது மிகப்பெரிய ராவண உருவம் செய்து எரிக்கப்படும். தீமையை நன்மை வெற்றி கொண்டு விட்டதாக கூறி இந்த விழா கொண்டாடப்படுகிறது.உத்தரபிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தசரா விழாவுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராவண விழாவை கொண்டாடுகின்றனர்.



ராவணன் இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்தான். கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கினான். இதை போற்றும் விதமாக அலகாபாத்தில் ராவணனுக்காக 10 நாள் விழா நடக்கிறது. இதையொட்டி, ராவண பக்தர்கள் ஊர்வலம் நடத்துகின்றனர். நாங்கள் ராவணனின் உருவத்தை எரிப்பதில்லை. ராவணனை தீமையின் சின்னமாக பார்ப்பதில்லை, என அலகாபாத்தின் ராவண விழாக்குழு உறுப்பினர் ஹேமேந்திரநாத் தெரிவித்துள்ளார்.

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-114: அமைதிப்படையின் முதல் தாக்குதல்!



ஆளும் கட்சியின் ஆதரவுடன் நடந்த அந்த முழு அடைப்பு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. முழு அடைப்பு நாளன்று கா.காளிமுத்து அளித்த பேட்டியில், ""சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைக் கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்க முற்பட்ட நிலையிலும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு, பிரபாகரனை ஆயுதத்தைக் கீழே போடச் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ""பிரபாகரனுக்கு ஏதும் நேர்ந்தால் தமிழகம் தாங்காது என்றும், தமிழ் மாநிலம் ரத்தக் களறியாக மாறும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களை ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கி விடக் கூடாது; இதை முதல்வரின் கருத்தாகத் தெரிவிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார். (16.10.1987 விடுதலை; எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே.தங்கநேயன் நூலில் வந்தவாறு). அ.இ.அ.தி.மு.க. சார்பில், அவ்வியக்கத்தின் 16-வது ஆண்டு விழாக் கூட்டங்களில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். எழுதிய கடிதத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடுமாறும் வற்புறுத்தப்பட்டது. மேலும் அக் கூட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் இப்போக்கு இந்தியத் தலைமைக்கு ஒவ்வாத ஒன்றாக ஆனது. மத்திய அமைச்சரவையின் அரசியல் குழு கூட்டப்பட்டு, அதில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அந்த யோசனை மறுக்கப்பட்டது என்றும் அறிக்கை வெளியிட்டதும் அசாதாரணமானது. தொடர்ந்து சென்னையில் வசித்து வரும் கிட்டுவை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. வேண்டுமானால் அவரை வீட்டுக் காவலில் வைக்கலாம் என்று வீட்டுக் காவலில் வைத்தார். வீட்டுக் காவலில் கிட்டு வைக்கப்பட்டாலும், பழ.நெடுமாறன், கி.வீரமணி உள்ளிட்டோர் சந்திக்கவும், தினசரி பத்திரிகையாளர்கள் சந்திக்கவும் தமிழகப் போலீஸôர் எந்தத் தடையையும் விதிக்கவில்லை (பழ.நெடுமாறனிடம் நேர்காணல்). "இந்த நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா சென்றார். அப்போது அவரைச் சந்திக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அவரிடம் அளிப்பதற்கான ஒரு குறிப்பைத் தயார் செய்து அனுப்பும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து தகவல் வந்ததாக எனக்குச் செய்தி அனுப்பினார்கள். அந்த வேண்டுகோளுக்கிணங்க நானும், கி.வீரமணியும் குறிப்புகள் எழுதி ஃபாக்ஸ் மூலம் அனுப்பினோம். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர். வாஷிங்டன் பறந்து சென்றார். அங்கு ராஜீவ் காந்தியைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்யும்படியும், பிரபாகரனுடன் பேசும்படியும் வேண்டிக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ராஜீவ் ஏற்கவில்லை. மனம்நொந்த நிலையில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். இலங்கையிலோ, ஜெயவர்த்தனாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. இந்தியாவிலிருந்து மேலும் துருப்புகள் வந்து இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் குவிந்தன. இவையெல்லாம் தில்லித் தலைமையின் உத்தரவுக்கிணங்க சுந்தர்ஜி செய்த ஏற்பாடுகள் ஆகும். துருப்புகள் வந்து இறங்கிய பின்னர்தான், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படை அலுவலகத்துக்கும் யாழ் பலாலியில் உள்ள பிராந்திய அலுவலகத்துக்கும் தெரியவந்தது. விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்குமாறு சென்னையின் அமைதிப்படை அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. அதன் பின்னர் தீபிந்தர் சிங் விடுதலைப் புலித் தலைவர்களை ஒருமுறை சந்திப்பது என்று முடிவெடுத்தார். யாழ்ப்பாணம் சென்றார். அதே யாழ் பல்கலை மைதானத்தில் வந்து இறங்கி, அவர்களது அலுவலகத்தில் மாத்தையாவைச் சந்தித்தார். போராளிகள் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். நகரங்களில் கூட மக்கள் கூட்டமில்லை. ஓரிருவர் தென்பட்ட போதிலும் அவர்கள் முகமும் இருண்டிருந்ததைக் கண்டார், தீபிந்தர் சிங். மாத்தையா வழக்கம்போல வணக்கம் தெரிவித்தார்; அதில் சுரத்தில்லை. தீபிந்தர் சிங் பிரபாகரனைப் பற்றி கேட்டார். அவர் வெளியேறிவிட்டதாக மாத்தையா தெரிவித்தார். தலைமறைவாகிவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா என்றார். மாத்தையா பதில் பேசவில்லை. இந்த நிலையைத் தேர்ந்தெடுத்ததால் இழப்புகள் நிச்சயம் இருக்கும் - மற்றவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுமே என்றார். மாத்தையா, ""நாங்கள் சாவதற்குத் தயாராகி விட்டோம். எப்போதோ அந்த முடிவு எடுத்தாகிவிட்டது. சுயமரியாதையை இழந்து நாங்கள் வாழ விரும்பவில்லை'' என்றார். இங்குள்ள ராணுவப் படைக்கும் - அவர்களது உயிர்களுக்கும் நாங்கள் பொறுப்பானவர்கள். விடுதலைப் புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தீபிந்தர் சிங் கேட்டுக்கொண்டார். மாத்தையா அவரது கையைப் பிடித்து குலுக்கினார். மரபு ரீதியான குலுக்கல்; நட்பு மறைந்துவிட்டது என்பதை தீபிந்தர் சிங் உணர்ந்தார். அமைதிப் படையின் முதல் தாக்குதல் விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகளான முரசொலி, ஈழமுரசு ஆகியவற்றின் அலுவலகம் மற்றும் அச்சகங்கள் மீதுதான் நடந்தது. அவை தாக்கி அழிக்கப்பட்டன. அங்கிருந்தோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று கொக்குவில்லில் இருந்த விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான நிதர்சனம் தாக்கி அழிக்கப்பட்டது. தாவடியில் இருந்த வானொலி நிலையமும் தாக்குதலுக்கு ஆளானது. ஆக, புலிகளின் பிரசார சாதனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இதுவரை இருந்த தளபதிகளை ஓரம் கட்டும் முயற்சியாக, சில சம்பவங்கள் நடந்தன. ஹர்கிரத் சிங்குக்கு அடுத்த நிலையில் இருந்த ஏ.எஸ். கல்கத், வீரர்களுக்கு "வகுப்பு' நடத்த ஆரம்பித்தார். வவுனியா முகாமுக்குத் தற்செயலாக வந்த ஹர்கிரத் சிங் இந்த அத்துமீறலைக் கண்டு கொதித்தெழுந்து அவரை அங்கிருந்து அகற்றினார். ஆனால் ராணுவத் தலைமையின் பரிவு கல்கத் பக்கமே இருந்தது. ராணுவத் தளபதி சுந்தர்ஜி, இந்தியத் தூதரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். தளபதிகளும் இந்த செயல்பாட்டை ஏற்க வேண்டிவந்தது. யாழ் நகரின் பல இடங்களில் அதிரடியாகப் போராளிகள் மீது தாக்குதல்களும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.நாளை: எம்.ஜி.ஆர். மறைவு - புலிகள் அஞ்சலி!
தலையங்கம்: தாயில்லாப் பிள்ளை



இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது. அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு. அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்? ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்: ""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''. இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி. இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே! இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!
---------
எழுத்துப் போராளிகள் எங்கிருந்தாலும் ஆளுவோருக்கு எதிரிகள்தாம். எனவே, தினமணியின் கருத்து சரிதான். ஆனால் ஒப்படைக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை வைக்காமல் நசுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பொழுதும் எழுத்துப் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தினமணியின் கருத்து வெறும் கற்பனை அல்ல என்பதை உணரு‌வோம்.
-- இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை- புதுதில்லி இடையே வாரம் இருமுறை
"துரந்த்' அதிவேக ரயில்: ப.சிதம்பரம் தகவல்



சென்னையில் "துரந்த்' ரயில் சேவையை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

கருத்துக்கள்

தமிழ்நாடடிலிருந்து புறப்படும் தொடர் வண்டிக்குத் தமிழில் பெயர் வைக்கக் கூடாதா? வாய்க்குள் நுழையாத ஆரியப் பெயர்தானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர் பிரச்னையைத்
திசைதிருப்ப முயற்சி: நெடுமாறன்



சென்னை, செப். 21: உயிருக்கு ஆபத்து என்று கூறி இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி திசைதிருப்ப முயல்கிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அகதி முகாம்களில் வதைபடும் 3 லட்சம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் "உயிருக்கு ஆபத்து' என்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்று கூக்குரல் எழுப்பி பிரச்னையை திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும். இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.கண்துடைப்பு நாடகம்: முள்வேலி முகாம்களில் வதைப்படும் தமிழர்களை மீட்க உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால் முதல்வர் கருணாநிதி தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா.வில் இந்திய அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

நெடுமாறன் சரியாகத்தான் சொல்லுகின்றார். ஆனால், அவர் என்னதான் கரடியாகக் கத்தினாலும் இனப்படுகொலைகளுக்குத் துணை நின்றவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள முடியுமா? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அரசைக் குறை சொல்லிக் காலம் தள்ளுகின்றனர்: கருணாநிதி



சென்னை, செப். 21: இலங்கைத் தமிழர் பிரச்னையில் இங்கேயுள்ள சிலர் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக நான் கடிதம் எழுதினேன். இதோடு நிற்காமல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நமது கோரிக்கையை விளக்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையில் செயல்பட்டு வந்த போதிலும், இங்கேயுள்ள ஒரு சிலர் திரும்பத் திரும்ப மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை தொடர்பாக நான் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. "தினமணி' நாளேடு முதல் பக்கத்திலேயே விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களை மறுகுடி அமர்த்துவதும் மறுவாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள்விவகாரம் என்று விட்டு விட இந்தியா தயாராக இல்லை. தமிழக மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதை பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரதமர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அதிபர் ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக இலங்கை அரசின் அதிகாரிகள் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்தனர்.சம்பா சாகுபடிக்கு... சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோலவே முறை வைத்துத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பதை மறந்து விட்டு, இப்போது தனது கட்சிக்காரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.பஸ் உதிரி பாகங்கள்... உதிரி பாகங்கள் இன்றி அரசு விரைவுக் கழக பஸ்கள் முடங்கிக் கிடப்பதாக செய்தி வந்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் இதுவரை 9,248 புதிய பஸ்களை வாங்கி இயக்கி வருகின்றன. வரும் நிதியாண்டில் மட்டும் மேலும் 3,500 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துக்கள்

உணவு, மருந்து, பிற பொருள்களை ஏற்றி வந்த வணங்காமண் கப்பல் ஈழம் செல்ல எவ்வளவு நாள் ஆயிற்று? அதன்பின் இன்று வரை அவை தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டனவா? அடுத்தவர் தரும் உதவிகளைக் கூட அளிக்க மறுக்கும் சிங்கள அரசின் நடவடிக்கைக்கு நம் அரசுகள் என்ன செய்தன? இவ்வாறாகப் பல குறைபாடுகள் இருக்கும் பொழுது குறை கூறாமல் என்ன செய்வார்கள்? குடும்பத்தில் ஒரு சிக்கல் என்றால் குடும்பத்தை நடத்துபவர்களிடம் முறையிடாமல் - குறை கூறாமல் - அடுத்தவரிடம் சொல்ல இயலுமா? தமிழ் மக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட படைக் கருவிகளைச் சிங்களத்திற்குப் பாதுகாப்பாக வழங்கப்பட்டதாக ஒப்புக் கொண்ட பின், இனப் படுகொலைகளுக்குக் காரணமான அரசுகளைக் குறை கூறாமல் யாரை நொந்து என்ன பயன்? இவை யெலலாம் முத்தமிழறிஞர் அறிந்தவைதான். எனினும் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சியினராவது உண்மைகளை வெளிக் கொணருகின்றனரே என எண்ணாமல் குறை கூறிக் கொண்டிருப்பதுதான் ஏன் என்று புரியவில்லை.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 21 செப்டம்பர், 2009

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நாளை போர்குற்ற அறிக்கையை வெளியிடவுள்ளது

20 September, 2009 by admin

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் நாளை வெளியிடப்படவுள்ளது. நாளை வெளியிடப்படவுள்ள இவ்வறிக்கை இலங்கைக்கான அமெரிக்காவின் எதிர்கால உதவி பற்றி தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வெளியிடப்படும் இவ்வறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்படும் எனவும் அது இலங்கைக்கான எதிர்கால நிதியுதவி பற்றிய மீளாய்வுக்கு வழி வகுக்கும் எனவும் கூறப்படுகிறது. போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்ரீபன் றப் இது பற்றி செப்.14ஆம் திகதி ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் தாம் தற்போது இலங்கை தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், இலங்கையின் போர் தொடர்பான ராஜாங்கத் திணைக்களத்தின் செப்.21ஆம் திகதிய அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலகமும், வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ராஜாங்கத் திணைக்கள செயலாளரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுரங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பார்கள் என்றும் பின்னர் நீதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான விடயங்கள் தொடர்பாக சில முன்முயற்சிகளை எடுக்கும் வரை இலங்கைக்கான சில வகையான நிதியுதவிகளை நிறுத்துமாறு அமெரிக்க செனட் முன்னரே பிரேரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


ஏனவே நாளை வெளியிடப்படவுள்ள அறிக்கை மேற்படி பிரேரணையை அமுல்படுத்த வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.இதேவேளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஏற்கெனவே தொடர்பு கொண்டு இலங்கையால் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதான கண்கண்ட சாட்சியங்களைப் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
உலகம் முழுவதிலும் இடம் பெறும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அமெரிக்காவுக்கான கொள்கையை வகுப்பதில் போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலம் பெரும் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஸ்ரீபன் றப் ஐ போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமித்திருந்தார். ஏற்கெனவே றப் உகண்டா, டார்பர். பர்மா தொடர்பான அறிக்கைகளை ராஜாங்கத்திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளிங்டனிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 72
தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் இன்று ஓசிலோவில் நடந்தது

20 September, 2009 by admin

நோர்வேயில் தமிழீழ மக்கள் பேரவையின் கூட்டம் தலைநகர் ஓசிலோவில் நடைபெற்றுள்ளது. இதில் உலக சமாதானம் வேண்டி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீனிவாச ராவ் அவர்கள் கலந்துகொன்டார். பிரித்தானியாவில் திறப்புப் போராட்டத்தை ஊக்குவித்த இவர்கள் தற்போது நோர்வேயிலும் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அதிர்வுக்கு கொடுத்த பிரத்தியேக நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் நடைபெற்ற தமிழீழ மக்களவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் கிடைக்கப்பெற்றதும் பிரசுரிக்கப்படும்.


|இச் செய்தியை வாசித்தோர்: 1314